ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பகுதி - 371

வளம் நிறைந்த இந்த உடலாகிய

Updated On :5 அக்டோபர் 2016, 11:58 am

பதச் சேதம்

சொற் பொருள்

தண் தேன் உண்டே வண்டு ஆர்வம் சேர் தண் தார் மஞ்சு குழல் மானார்

 

தண்தேன்: குளிர்ச்சியான தேன்; வண்டார்வம் சேர்: வண்டுகள் ஆர்வத்தோடு சேர்ந்து மொய்க்கும்; தண்தார்: குளிர்ச்சியான (மலர்களாலான) மாலை; மஞ்சு குழல்: மேகம் போன்ற கூந்தல்;

தம் பால் அன்பால் நெஞ்சே கொண்டே சம்பாவம்சொல் அடி நாயேன்

 

சம்பாவம்: சம்பவம், நிகழ்வு; சம்பாவம் சொல்: நிகழ்வுகளைப் பற்றிப் பேசும்;

மண் தோயம் தீ மென் கால் விண் தோய் வண் காயம் பொய் குடில் வேறாய்

 

மண்: பூமி; தோயம்: நீர்; மென்கால்: மெல்லிய காற்று, தென்றல் (கால்: காற்று); வண்காயம்: வளமை கொண்ட உடல்;

வன் கானம் போய் அண்டா முன்பே வந்தே நின் பொன் கழல் தாராய்

 

வன்கானம்: மயானம்; அண்டா முன்னம்: அண்டுவதற்கு, அடைவதற்கு முன்னர்;

கொண்டாடும் பேர் கொண்டாடும் சூர் கொன்றாய் வென்றி குமரேசா

 

கொண்டாடும்பேர்: தன்னை (சூரனைக்) கொண்டாடியவர்கள்; சூர்: சூரபத்மன்; வென்றி: வெற்றி;

கொங்கு ஆர் வண்டார் பண்பாடும் சீர் குன்றா மன்றல் கிரியோனே

 

கொங்கு: பூந்தாது, மகரந்தம்; வண்டுஆர்: வண்டுகள் ஆர்க்கும்; மன்றல்: திருமணம்; மன்றல்கிரி: வள்ளிமலை (வள்ளியைத் திருமணம் செய்துகொண்ட மலை);

கண்டு ஆகும் பால் உண்டாய் அண்டார் கண்டா கந்த புய வேளே

 

கண்டு: கற்கண்டு; பால்: திருமுலைப் பால்; அண்டார்: அண்டாதவர்கள், பகைவர்கள்; கந்தபுயம்: மணம் தங்கும் தோள் (கந்தம்: மணம்);

கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் மைந்தா கந்தா செந்தில் பெருமாளே.

 

கந்து: தூண்; மைந்துஆர்: வலிமை பொருந்திய; மைந்தா: பராக்கிரமசாலியே;

தண் தேனுண்டே வண்டார் வஞ்சேர்... (மலர்களின்) குளிர்ச்சியான தேனை பருகியபடி வண்டுகள் ஆர்வத்தோடு மொய்ப்பதான,

தண் தார் மஞ்சுக் குழல்மானார் தம்பால் அன்பார் நெஞ்சே கொண்டே... குளிர்ச்சியான (மலர்களால் தொடுக்கப்பட்ட) மாலைகளைச் சூடிக்கொண்ட; மேகம்போன்ற கூந்தலையுடைய பெண்களிடத்தில் அன்பு பெருகும் மனத்தைக் கொண்டு,

சம்பாவஞ் சொற்(று) அடிநாயேன் ... பல நிகழ்வுகளைப் பற்றி உரையாடும் கீழான நாயேனாகிய நான்,

மண் தோயம் தீ மென்கால் விண்தோய் ... நிலம், நீர், தீ, மென்மையான காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதச் சேர்கையால் ஆன,

வண்காயம் பொய்க்குடில் வேறாய் ... வளம் நிறைந்த இந்த உடலாகிய பொய்க் குடிசையிலிருந்து (உயிர்) வேறாகப் பிரிந்து,

வன்கானம்போய் அண்டா முன்பே ... மயானத்தைப் போய் அடைவதற்கு முன்னதாக,

வந்தே நின்பொற்கழல்தாராய் ... என் முன்னால் வந்து, உன்னுடைய அழகிய திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

கொண்டாடும்பேர் கொண்டாடுஞ்சூர் ... தன்னைக் கொண்டாடுவோருடன் (அரக்கர்களுடன்) உறவு பாராட்டி மகிழ்ந்த சூரபத்மனைக்,

கொன்றாய் வென்றிக் குமரேசா ... கொன்றவனே!  வெற்றி நிறைந்தவனான குமரேசா!

கொங்கார் வண்டு ஆர் பண்பாடும் சீர்குன்றா மன்றற்கிரியோனே... (பூக்களுடைய) மகரந்தங்களால் நிறைந்த வண்டுகள் பாடலைப் பாடி ரீங்கரிப்பதான, சிறப்பு குறையாத வள்ளி மலையில் இருப்பவனே!

கண்டாகும் பாலுண்டாய் ... கற்கண்டைப் போன்ற சுவையான (உமையம்மையின்) திருமுலைப் பாலை உண்டவனே!

அண்டார் கண்டா கந்தப் புயவேளே கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் மைந்தா... பகைவர்களைக் காய்பவனே!  மணம் நிறைந்த தோள்களை உடையவனே!  கம்பத்தைப் போன்ற வலிமையை உடைய அழகிய தோள்களைக் கொண்ட பராக்கிரமசாலியே!

கந்தா செந்திற் பெருமாளே. ... கந்தா!  திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

தன்னைப் பாராட்டிக் கொண்டாடும் அரக்கர் கூட்டங்களோடு உறவுபாராட்டி மகிழ்ந்தவனான சூரபத்மனைக் கொன்ற வெற்றிக் குமரனே!  மகரந்தத்தில் புரண்டெழுந்து இனிமையாக ரீங்கரிக்கும் வண்டுகள் நிறைந்த வள்ளி மலையூரனே! கற்கண்டு போன்ற சுவைகொண்ட உமையம்மையின் திருமுலைப் பாலைப் பருகியவனே!  பகைவர்களைக் காயும் வீரனே!  மணம் கமழும் திருப்புயங்களை உடையவனே!  கந்தனே!  திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே!

(கூந்தலில் சூட்டிய மலர்களிலுள்ள) தேனைப் பருகுவதற்காக வண்டுகள் ஆர்வத்துடன் மொய்க்கும் கருமேகம் போன்ற கூந்தலை உடைய மாதர்கள்மேல் மிக்க அன்புகொண்டு, அவர்களோடு உரையாடிக்கொண்டு நிற்கும் கீழான நாயைப் போன்றவனான நான், ஐம்பூதங்களால் ஆன பொய்யான உடலை உயிர் நீத்து, வேறாகிப் பிரிந்து மயானவெளியை அடைவதற்கு முன்னால் என் முன்னே தோன்றி உன் திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.