ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பகுதி - 619

முதன்மையான ஒளிமிக்கதாக விளங்குவதும்

News image
Updated On :1 ஆகஸ்ட் 2017, 3:46 am

பதச் சேதம்

சொற் பொருள்

நிராமய புராதன பராபர வர அம்ருத நிராகுல சிராதிக ப்ரபை ஆகி

 

நிராமய: (ஆமயம்: நோய்) நிர் ஆமயம்—நோயற்றதாய்; புராதன: தொன்மையானதாய்; பராபர: பரம்பொருளாய்; வராம்ருத: அழிவற்றதாய்; நிராகுல: கவலையற்றதாய்; சிராதிக: மேலானதாய்;

நிராச சிவ ராஜ தவராஜர்கள் பராவிய நிராயுத புராரி அச்சுதன் வேதா

 

நிராச: ஆசையற்ற; சிவராஜ: சிவத்தோடு மகிழும் நிலை; நிராயுத: ஆயுதம் எடுக்காமலேயே; புராரி: திரிபுரங்களை எரித்தவன்; அச்சுதன்: திருமால்; வேதா: பிரமன்;

சுராலய தராதல சராசர பிராணிகள் சொரூப இவர் ஆதியை குறியாமே

 

சுராலய: விண்ணுலக; தராதல: மண்ணுலக; சராசர: சர, அசர—அசைகின்ற, அசையாத; பிராணிகள்: உயிர்க் கூட்டங்கள்; இவர் ஆதியை: இவற்றின் மூலப் பொருளை;

துரால் புகழ் பராதின கரா உள பரா முக துரோகரை தரை ஆசை உற்று அடைவேனோ

 

துரால்: செத்தை; பராதின: பர ஆதின—பிறர் வசப்பட்ட, தன் சுதந்திரம் இல்லாத; கரா: முதலை; பராமுக: அலட்சியம் செய்யும்;

இராகவ இராமன் முன் இராவண  இரா வண இராவண இராஜன் உட்குடன் மாய் வென்ற

 

இராகவ: ரகுவின் வம்சத்திலே வந்த; இராவண: இராவணன்; இரா வண: இரவைப் போல கரிய; இராவண: வாய்விட்டு அலறிய (உரையில் காண்க); உட்கு: அச்சப்பட்டு;

இராகன் மலர் ஆள் நிஜ புராணர் குமரா கலை இராஜ சொல வாரணர்க்கு இளையோனே

 

இராகன்: அன்புடையவன்; மலர் ஆள்: (திருமாலின் விழியையே) மலராகக் கொண்ட; வாரணர்க்கு: விநாயகனுக்கு;

விராகவ சுர அதிப பொராது தவிராது அடு  விராயண பராயண செரு ஊரா

 

விராகவ: ஆசையற்றவனே; சுராதிப: தேவர் தலைவனே; பொராது: போரிடமலேயே; தவிராது: தவிர்க்காமல்; அடு: அடுதல் வல்ல, வெல்ல வல்ல; விராயண: வீர வழியில்; பராயண: விருப்பம் உள்ளவனே; செரு ஊர்: திருப்போரூர்;

விராவிய குரா அகில் பராரை முதிரா வளர் விராலி மலை ராஜத பெருமாளே.

 

விராவிய: கலந்திருக்கும்; பராரை: பருத்த அடி(மரம்); முதிரா: முதிர்ந்து, முற்றி;

நிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிகப் ப்ரபையாகி .... நோயற்றதும்; தொன்மையானதும்; எல்லாவற்றுக்கும் மேலானதும்; அழிவற்றதும்; கவலையற்றதும்; அனைத்துக்கும் முதன்மையான ஒளிமிக்கதாக விளங்குவதும்;

நிராச சிவராஜ தவராஜர்கள் பராவிய நிராயுத புராரி அச்சுதன்வேதா .... ஆசைகளற்ற, சிவத்தில் தோய்ந்து மகிழ்க்கின்ற தவராஜர்கள் போற்றுவதும்; எந்த ஆயுதத்தையும் எடுக்காமல் (சிரித்தே) திரிபுரங்களை அழித்த சிவன்; திருமால்; பிரமன்;

சுராலய தராதல சர அசர பிராணிகள் சொரூபமிவர் ஆதியைக் குறியாமே... விண்ணுலகம்; மண்ணுலகம்; அசைவன; அசையாதனவாகிய உயிர்க்கூட்டங்கள் ஆகியனவற்றின் சொரூபமாகி, இவற்றுக்கு மூலப் பொருளாக விளங்குவது எதுவோ அதை மனத்தில் குறித்து தியானிக்காதவரும்;

துரால்புகழ் பர ஆதின கராவுள பராமுக துரோகரை தராசையுற்று அடைவேனோ... செத்தைக்குச் சமமான பயனற்ற புகழையும்; மற்றவருக்கு அடிமைப்பட்ட நிலையையும்; முதலையைப் போன்ற உள்ளத்தையும்; அலட்சியத் தன்மையையும் கொண்டுள்ள பாவிகளிடத்திலே நான் உலகப் பற்றுகளின் காரணமாகச் சேர்ந்திருப்பேனோ? (அவ்வாறு சேராமல் காத்தருள வேண்டும்.)

இராகவ இராமன் முன் இராவண இராவண இராவண இராஜன் உட்குடன்மாய் வென்ற... ரகுவின் வம்சத்திலே தோன்றிய இராமபிரானாக வந்து, முன்பொரு சமயத்தில் வாய்விட்டு அலறியவனும்* இருட்டைப் போன்று கரிய நிறமுடையவனுமான இராவணன் அச்சம் கொண்டு மாயுமாறு வென்றவரும்;

(ராவணன் என்ற சொல்லுக்குப் ‘பேரோசையோடு அரற்றியவன்’ என்று பொருள்.  கைலாய மலையைப் பெயர்த்தெடுக்கையில் அதற்கடியில் சிக்கிக் கொண்ட போது எல்லாத் திசைகளும் அதிருமாரு அரற்றியவன் என்ற பொருளில் பரமசிவன் தசமுகனுக்கு ராவணன் என்ற பெயரைத் தந்ததை வான்மீகத்தின் உத்தர காண்டம் சொல்கிறது.)

இராகன்மலர் ஆள் நிஜ புராணர் குமரா கலை இராஜ சொலவாரணர்க்கு இளையோனே... அன்பு நிறைந்தவருமான திருமாலின் கண்ணையே மலராகக் கொண்டருளிய நிஜமான வரலாற்றைக்* கொண்ட சிவனாருடைய திருக்குமாரா! கலைகளுக்குத் தலைவனே!  புகழுடைய யானைமுகனுக்கு இளையவனே!

(திருவீழிமிழலையில் நாள்தோறும் 1000 தாமரைகளால் சிவனை அருச்சித்து வந்த திருமால், ஒருநாள் ஒரு மலர் குறையும்போது தன் கண்ணையே தாமரையாக அருச்சித்தார்.  திருமாலுக்கு இச்சமயத்தில்தான் சிவன் சக்கரப்படையைத் தந்தருள்கிறார்.)

விராகவ சுராதிப பொராது தவிராது அடு விராயண பராயண செருவூரா... ஆசையற்றவனே!  தேவர்களுடைய தலைவனே! போரிடும் அவசியமின்றியே தவறாமல் வெல்வதான வீரமான வழியிலே விருப்பமுள்ளவனே!  திருப்போரூரில் உறைபவனே! 

விராவிய குராவகில் பராரை முதிராவளர் விராலிமலை ராஜதப் பெருமாளே... குரா மரமும் அகில் மரமும் கலந்து, பருத்த அடிமரத்தோடு முதிர்ந்து வளர்கின்ற விராலி மலையில் அரச குணத்தோடு வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

ரகுவம்சத்திலே தோன்றிய ராமனாக வந்து; முன்பொரு சமயத்திலே வாய்விட்டு அலறியவனும்; இருட்டைப் போன்று கரிய நிறமுள்ளவனுமான இராவணன் அச்சம் கொண்டு மடியும்படி மாய்த்தவரும்; அன்பு நிறைந்தவருமான திருமாலுடைய திருவிழியையே தாமரை மலராக ஏற்ற சிவனாரின் குமாரனே!  புகழ்வாய்ந்த விநாயகனுடைய இளையவனே!  ஆசையற்றவனே!  தேவர் தலைவனே!  போரிடும் அவசியம் இல்லாமலேயே தவறாமல் வெல்கின்ற வீர வழியில் விருப்பமுள்ளவனே!  திருப்போரூரில் உறைபவனே!  பருத்த அடிமரத்துடனுள்ள குரா மரமும் அகில் மரமும் கலந்து முதிர்ந்து வளர்ந்திருக்கின்ற விராலி மலையில் அரச குணத்தோடு வீற்றிருக்கின்ற பெருமாளே!

நோயற்றதும்; தொன்மையானதும்; எல்லாவற்றுக்கும் மேலானதும்; அழிவற்றதும்; கவலையற்றதும்; அனைத்துக்கும் முதன்மையானதும்; ஒளிமிக்கதும்; ஆசைகளற்ற, சிவத்தில் தோய்ந்து மகிழ்கின்ற தவராஜர்கள் போற்றுவதும்; எந்த ஆயுதத்தையும் எடுக்காமல் சிரித்தே புரமெரித்த சிவனார்; திருமால்; பிரமன்; விண்ணுலகு; மண்ணுலகு; அசைவதும் அசையாததுமான உயிர்க்கூட்டங்கள்—ஆகிய எல்லாவற்றின் சொரூபமானதும், எல்லாவற்றுக்கும் மூலப்பொருளாக விளங்குவதும் எதுவோ அதனை தியானிக்காதவர்களும்; குப்பைக்குச் சமமமான புகழைக் கொண்டவர்களும்; மற்றவர்களுக்கு அடிமைப்பட்டவர்களும்; முதலையைப் போன்ற உள்ளத்தையும் அலட்சியப் போக்கினையும் கொண்ட பாவிகளை நான் உலகப் பற்றுகளின் காரணமாக அடைந்து நிற்கலாமோ?  (அவ்வாறு அடையாமல் உன் அருளாலே காத்தருள வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.