ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பகுதி - 623

தேனும் அமுதமும் கலந்து ஊறுவதுமான

News image
Updated On :7 ஆகஸ்ட் 2017, 4:45 am

பதச் சேதம்

சொற் பொருள்

தவர் வாள் தோமர(ம்) சூலம் தரியா காதிய சூரும் தணியா சாகரம் ஏழும் கரி ஏழும்

 

தவர்: வில்; தோமரம்: தண்டாயுதம்; தரியா: தரித்து, ஏந்தி; காதிய: கொன்ற; சூரும்: சூரனும்; தணியா: வற்றாத; சாகரம்: கடல்; கரி: (இங்கே) மலை;

சருகா காய் கதிர் வேலும் பொரு கால் சேவலு(ம்) நீல(ம்) தரி கூத்தாடிய மாவும் தினை காவல்

 

சருகா: சருகைப் போல; பொருகால்: போரிட வல்ல கால்; நீலம் தரி: நீல நிறத்தைத் தரித்த, உடைய; கூத்தாடிய மா: நடனமாடும் பரியாகிய மயில்;

துவர் வாய் கானவர் மானும் சுர நாட்டாள் ஒரு தேனும் துணையா தாழ்வு அற வாழும் பெரியோனே

 

துவர் வாய்: பவளம் போன்ற வாய்; கானவர் மான்: வள்ளி; சுர நாட்டாள் ஒரு தேனும்: தேவலோகத்து தெய்வானையும்;

துணையாய் காவல் செய்வாய் என்று உணரா பாவிகள் பாலும் தொலையா பாடலை யானும் புகல்வேனோ

 

 

பவ(ம்) மாய்த்து ஆண் அதுவாகும் பனை காய்த்தே மண(ம்) நாறும் பழமாய் பார் மிசை வீழும்படி வேதம்

 

பவம் மாய்த்து: (ஆணாகத் தோன்றிய) பிறப்பை ஒழித்து;

படியா பாதகர் பாய் அன்றி உடா(த) பேதைகள் கேசம் பறி கோப்பாளிகள் யாரும் கழு ஏற

 

வேதம் படியாப் பாதகர்: வேதத்தை ஓதாத பாதகர்களும்; பாயன்றி உடாத: பாயைத் தவிர எதையும் உடுக்காதவர்களும்; கோப்பாளிகள்: கூத்தாடிகளுமான; யாரும்: (சமணர்கள்) அனைவரும்;

சிவமாய் தேன் அமுது ஊறும் திருவாக்கால் ஒளி சேர் வெண் திரு நீற்றால் அமராடும் சிறியோனே

 

அமராடும்: (வாதுப்) போர் புரிந்த; சிறியோனே: (சிறியவரான ஞான சம்பந்தராக வந்த) இளையவனே;

செழு நீர் சேய் நதி ஆரம் கொழியா கோமளம் வீசும் திருவோத்தூர் தனில் மேவும் பெருமாளே.

 

சேய் நதி: சேயாறு;  ஆரம்: முத்து; கோமளம்: அழகு;

தவர்வாள் தோமர சூலந் தரியாக் காதிய சூரும்... வில்லையும் வாளையும் தண்டாயுதத்தையும் திரிசூலத்தையும் ஏந்தியபடி பல கொலைகளைச் செய்த சூரனும்;

தணியாச் சாகர மேழுங் கிரியேழும்... வற்றாத ஏழு கடல்களும் ஏழு மலைகளும்;

சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு... சருகாகக் காய்ந்துபோகும்படியாகச் சுட்டெரித்த ஒளிகொண்ட வேலும்; போரிட வல்ல கால்களையுடைய சேவலும்;

நீலந் தரிகூத் தாடிய மாவும்... நீல நிறத்தைக் கொண்டதும் நடனமாடும் பரியான மயிலும்;  

தினைகாவல் துவர்வாய்க் கானவர் மானும் சுரநாட் டாளொரு தேனும்... தினைப்புனம் காத்தவளும் பவளம் போன்ற உதடுகளைக் கொண்டவளும் வேடுவர் குலத்தவளும் மான் போன்றவளுமான வள்ளியும்; தேவலோகத்தைச் சேர்ந்தவளும் தேன்போன்றவளுமான தேவானையும்;

துணையாத் தாழ்வற வாழும் பெரியோனே... அருகே சூழ்ந்திருக்க, குறைவில்லாமல் விளங்குகின்ற பெரியோனே!

துணையாய்க் காவல்செய்வாயென்று உணராப் பாவிகள் பாலும்... துணையாக நின்று காத்தருள்வாய் என்று உணராத பாவிகளிடத்திலே சென்று,

தொலையாப் பாடலை யானும் புகல்வேனோ... அழிவற்றவையான அரிய பாடல்களை (அவர்கள் மீது) நான் பாடித் திரிவேனோ?  (அவ்வாறு திரியாதபடிக் காத்தருள வேண்டும்.)

பவமாய்த்து ஆணது வாகும் பனைகாய்த்தே... பிறப்பை அறுத்து, ஆணாக நின்ற பனைமரங்கள் காய்த்து;

மண நாறும் பழமாய்ப் பார்மிசை வீழும்படி... மணம்கமழும் பழங்களாகத் தரையில் உதிரும்படியாக(வும்);

வேதம் படியாப் பாதகர் பாயன்றி யுடாப் பேதைகள்... வேதத்தை ஓதாத பாதகர்களும்; பாயைத் தவிர வேறு எதையும் உடுக்காத பேதைகளும்;

கேசம் பறி கோப் பாளிகள் யாருங் கழுவேற... தலை மயிரைக் கையால் பறித்து எறியும்* கூத்தாடிகளுமான சமணர்கள் எல்லோரும் கழுவேறும்படியாக;

(* துறவு மேற்கொள்ளும்போது சமணர்கள் முடியைக் கையால் பறித்து எறிவது வழக்கம்)

சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக்கால்... சிவமயமானதும்; தேனும் அமுதமும் கலந்து ஊறுவதுமான திருவாக்காலும்;

ஒளி சேர்வெண் டிருநீற் றால் அமராடுஞ் சிறியோனே .... ஒளி சுடரும் வெண்ணீற்றாலும் வாதுப் போர் புரிந்த (பாலனாகிய திருஞான சம்பந்தராக வந்த) இளையவனே!

செழுநீர்ச் சேய்நதி ஆரங் கொழியாக் கோமளம் வீசும் திருவோத்தூர்தனில் மேவும் பெருமாளே...செழிப்பான நீர்வளம் கொண்ட சேயாறு முத்துகளைக் கரையிலே வாரியிறைக்கின்ற, அழகு நிறைந்த திருவோத்தூரில் வீற்றிருக்கின்ற பெருமாளே!


சுருக்க உரை:

பனைமரங்கள் ஆணாகத் தோன்றிய நிலையை மாற்றிப் பெண்பனையாக்கி, அவை காய்த்து, பழுத்து, மணம் வீசிக்கொண்டு தரையெல்லாம் உதிரும்படியாகவும்; வேதங்களை மறுத்தவரும்; பாயை மட்டுமே உடுப்பவரும்; தலை மயிரைக் கையால் பறித்து நீக்குபவருமான சமணக் கூத்தாடிகள் எல்லோரும் கழுவேறும்படியாகவும்; தேனும் அமுதமும் கலந்தது போன்ற சிவமயமான திருவாக்கால் வாதுப் போர் புரிந்த பாலகனான திருஞான சம்பந்தராகத் தோன்றிய இளையவனே!  நீர்வளம் நிறைந்த சேயாறு கரைகளிலெல்லாம் முத்துகளை வாரியிறைக்கும் அழகு நிறைந்த திருவோத்தூரில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

வில், வாள், தண்டு, சூலம் எல்லாவற்றையும் தரித்துக்கொண்டு பல கொலைகளைச் செய்த சூரனும்; ஏழு கடல்களும்; ஏழு மலைகளும் சருகுபோலக் காய்ந்து போகும்படியாக எரித்ததான ஒளிமிக்க வேலும்; போரிடவல்ல கால்களை உடைய சேவலும்; நீலநிறம் கொண்டு கூத்தாடும் பரியாகிய மயிலும்; தினைப்புனம் காத்த வள்ளியும்; தெய்வலோகத்து தேவானையும் உன்னைச் சூழ்ந்திருக்க குறையொன்றுமின்றி விளங்குகின்ற பெரியோனே!

நீ துணையிருப்பாய் என்று உணராத பாவிகளிடத்திலே சென்று, என்றும் அழியாதவையான அமுதகுணம் நிறைந்த பாடல்களை அவர்களின்மீதா பாடித் திரிவேன்?  (அப்படித் திரியாமல் உன்னையே பாடி வாழுமாறு அருள்புரிய வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.