பகுதி - 927

ஒரு பொழுதும் இரு சரணம்..
பகுதி - 927
Published on
Updated on
1 min read

பதச் சேதம்

சொற் பொருள்

ஒரு பொழுதும் இரு சரண(ம்) நேசத்தே வைத்து உணரேனே

 

 

உனது பழநி மலை எனும் ஊரை சேவித்து அறியேனே

 

 

பெரு புவியில் உயர்வு அரிய வாழ்வை தீர குறியேனே

 

 

பிறவி அற நினைகுவன் என் ஆசை பாடை தவிரேனோ

 

ஆசைப்பாடை: ஆசைப்பாட்டை—ஆசையை;

துரிதம் இடு நிருதர் புர சூறை கார பெருமாளே

 

துரிதம் இடு: கலக்கத்தைத் தரும்

தொழுது வழி படும் அடியர் காவல் கார பெருமாளே

 

 

விருது கவி விதரண விநோத கார பெருமாளே

 

விதரண: தயாள;

விறல் மறவர் சிறுமி திரு வேளை கார பெருமாளே.

 

 

ஒருபொழுதும் இருசரண நேசத் தேவைத்து உணரேனே... ஒருவேளைகூட உன்னுடைய திருவடிகளில் நேசத்தை வைத்து அறிந்தவனல்லன்;

உனது பழநி மலையெனும் ஊரை சேவித் தறியேனே... உன்னுடைய பழநிமலையாகிய தலத்தை வணங்கி அறிந்தவனல்லன்;

பெருபுவியில் உயர்வரிய வாழ்வைத் தீரக் குறியேனே... இந்தப் பெரிய உலகத்தில் உயர்ந்ததும் அரியதுமான வாழ்வையே முற்றிலும் விரும்பிக் குறித்தவனல்லன்;

பிறவியற நினைகுவன் என்ஆசைப் பாடைத் தவிரேனோ... (என்றாலும்) பிறவியை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.  என் ஆசைகளை ஒழிக்கமாட்டேனோ? (அடியேனுடைய ஆசைகள் ஒழியுமாறு அருள்புரிய வேண்டும்.)

துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் பெருமாளே... கலக்கத்தைத் தருகின்ற அரக்கர்களுடைய ஊர்களைச் சூறாவளிபோலச் சுழற்றி வீசிய பெருமாளே!

தொழுதுவழி படுமடியர் காவற் காரப் பெருமாளே... உன்னைத் தொழுது வழிபடுகின்ற அடியவர்களுக்கு காவற்காரனாக இருக்கின்ற பெருமாளே!

விருதுகவி விதரண விநோதக் காரப் பெருமாளே... வெற்றி நிறைந்த கவிதைகளை உலகுக்கு வழங்கிய தயாள குணம்படைத்த அற்புதமான (ஞானசம்பந்தப்) பெருமாளே!

விறன் மறவர் சிறுமி திருவேளைக் காரப் பெருமாளே... வீரம் நிறைந்த வேடர்குலப் பெண்ணான வள்ளிக்குக் காவலாயிருந்த பெருமாளே!

சுருக்க உரை

கலக்கத்தை விளைத்த அசுரர்களுடைய ஊரில் சூறைக்காற்றாய் வீசியழித்த பெருமாளே! தொழுது வழிபடுகின்ற அடியவர்களுக்குக் காவற்காரனாய் இருக்கின்ற பெருமாளே! வெற்றிக் கவிகளை உலகுக்குத் தந்த தயாளமூர்த்தியான திருஞான சம்பந்தராய் அவதரித்த பெருமாளே! வீரம் நிறைந்த வேடர் குலப்பெண்ணுக்குக் காவலிருந்த பெருமாளே!

ஒருவேளைகூட உன்னுடைய திருவடியில் அன்புவைத்து அறிந்தேனல்லன்; உனது பழநிமலையை வணங்கி அறிந்தவன் அல்லன்; இந்தப் புவியில் உயர்ந்ததும் அரியதுமான வாழ்வைக் குறித்தவன் அல்லன்; இருப்பினும் பிறவி ஒழியவேண்டும் என்று கருதுகிறேன்.  என்னுடைய ஆசைகளை விட்டொழிக்க மாட்டேனோ? (என் ஆசைகளை அழித்தருள வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com