சரிதான்
மத்திய பல்கலைக்கழகம் - கல்லூரிகளின் இளநிலை படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்த முடிவெடுத்திருப்பது சரிதான். மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு போன்றதுதான் இந்த பொது நுழைவுத் தேர்வும். கல்வித் தகுதியும் திறனும் உள்ளவர்கள் இந்த பொதுத் தேர்வை எண்ணி அஞ்ச வேண்டியதில்லை. கடந்த இரு ஆண்டுகளாக ஆன்லைனில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களை சோதிப்பதற்காகவாவது நுழைவுத் தேர்வு அவசியம்தான். எல்லா நுழைவுத் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் நம் மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்வதே நல்லது.
இ. ராஜு நரசிம்மன், சென்னை.
நிதர்சனம்
மருத்துவப் படிப்பில் அநீதியை ஏற்படுத்தும் நீட் தேர்வு போல, மத்திய பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில இயலா நிலையை இந்த நுழைவுத் தேர்வு ஏற்படுத்தும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால் விளைந்த தீமைதான் இந்த நுழைவுத் தேர்வு. இதை எதிர்கொள்ள, மாணவர்கள் சிபிஎஸ்இ பாடத்திட்ட புத்தகங்களைப் படிக்க வேண்டும். மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களால் புதிதாக சிபிஎஸ்இ பாடத்திட்ட புத்தகங்களைப் படிக்க முடியுமா? அனைத்து தரப்பினரும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பை இந்த நுழைவுத் தேர்வு இழக்கச் செய்துவிடும் என்பதே நிதர்சனம்.
ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.
தடைக்கல்
இது ஒரு தவறான முடிவு. பள்ளியில் 12 ஆண்டுகள் படித்து வாங்கிய மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாமல் போவது சரியல்ல. கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக்கு ஊக்கம் தர வேண்டிய இன்றைய நிலையில், பொது நுழைவுத்தேர்வு என்பது மாணவர்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்கும். உயர்கல்வியில் சேர பள்ளிக்கல்வியில் பெற்ற மதிப்பெண்களைக் கணக்கில் கொள்வதே சரியான நடைமுறையாகும். சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு நுழைவுத்தேர்வு என்பது ஒரு தடைக்கல்லாக அமையும். எனவே, இம்முடிவை அரசு கைவிட வேண்டும்.
ப. நந்தினி, வேட்டவலம்.
நூற்றுக்கு நூறு
இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு கல்வியில் தொலைநோக்குப் பார்வை இல்லை. தங்கள் வாழ்க்கையை கைப்பேசியில் தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள். அர்ப்பணிப்புடன் கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. எனவே, மாணவர்களின் உண்மையான தகுதியையும் திறனையும் அறிந்துகொள்ள அவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதுதான் சரியானது. கல்வி வியாபாரமாகிவிட்ட கொடுமை இதனால் கொஞ்சமாவது குறையக்கூடும். எனவே, இளநிலை படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்த முடிவெடுத்திருப்பது நூற்றுக்கு நூறு சரியே.
சி. கஸ்தூரி ரத்தினம், மதுரை.
வரவேற்கத்தக்கது
இது போட்டி நிறைந்த உலகம். நூறு பேர் படிக்கின்ற இடத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்கின்றனர். எதன் அடிப்படையில் தேர்வு செய்வது? மாணவர்களின் அறிவுத்திறன் அடிப்படையிலேதானே? பொது நுழைவுத் தேர்வு மாணவர்களின் தகுதியை நிர்ணயம் செய்கிறது. தகுதியானவர்களுக்கு படிப்பதற்கு இடம் கிடைக்கிறது. தகுதியை வளர்த்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று தான் முயல வேண்டுமே தவிர, பொது நுழைவுத் தேர்வு கூடாது என்று கூறுவது சரியல்ல. தேர்தலில் போட்டியிட்டு வென்றால்தானே மக்கள் பிரதிநிதி ஆக முடியும்? இம்முடிவு வரவேற்கத்தக்க ஒன்று.
சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
தேவையில்லை
இளநிலை படிப்புகளுக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்ணைத் தவிர்த்து, நுழைவுத் தேர்வு மதிப்பெண் மட்டுமே வைத்து இடமளிக்கும் முடிவு தேவையற்ற திணிப்பாகும். கல்விச் சாலைகள் அனைத்தும் இனி தேர்வுகளுக்காக மாணவர்களை பயிற்றுவிக்கும் நிறுவனங்களாக மாறிவிடும். மத்திய அரசும் இட ஒதுக்கீட்டில் இடம் பெறும் என்பதால் மீதி உள்ள சொற்ப இடத்திற்கே தேர்வு நடைபெறும். பாடங்கள் பற்றிய அடிப்படைப் புரிதல் இன்றி கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மனப்பாங்கு மாணவர்களிடம் உருவாகும். பொது நுழைவுத்தேர்வு முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.
எட்டாக்கனி
இது போன்ற தேர்வுகளை அறிமுகப்படுத்துவதால், மாணவர்களுக்கு பயிற்சியளிக்க தனியார் பயிற்சிக் கூடங்கள் பெருகிவிடும். அவற்றில் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்படும். வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே பயிற்சிக் கூடங்களில் கட்டணம் செலுத்தி பயில முடியும். கிராமப்புற மாணவர்கள் பயிற்சிக் கூடங்களில் சேர்ந்து பயில இயலாததால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். உயர்கல்வி என்பது கிராமப்புற மாணவர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் எட்டாக்கனி ஆகிவிடும். எனவே இம்முடிவை கைவிட வேண்டும்.
எஸ்.எம்.ஏ. செய்யது முகம்மது,
மேலப்பாளையம்.
நோக்கம்
பள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படித்துவர, குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அரசுக் கல்லூரிகளில் பயில்கின்றனர். இதனால் அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதால், அரசின் நோக்கம் நிறைவேறுகிறது. இளங்கலைப் படிப்பில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவெடுத்தால், கிராமப்புற மாணவர்களும் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களும் உயர்கல்வி பெற முடியாத நிலை உருவாகிவிடும். இதனால் இளங்கலை பட்டம் பெறுவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறையும்.
அ. கருப்பையா, பொன்னமராவதி.
சிக்கல்கள்
பொது நுழைவுத் தேர்வால் பல சிக்கல்கள் உருவாகும். பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரிகள் சேருகின்ற மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்நிலையில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களைத்தான் கல்லூரியில் சேர்க்க முடியும் என்பது நடைமுறைக்கு உகந்தது அல்ல. இதனால் கல்லூரியில் சேர விரும்புகின்றவர்கள் எண்ணிக்கை குறையும். இப்போது இருக்கின்ற நடைமுறையே போதுமானது. கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு என்ற செய்தி, மாணவர்களிடையே குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறது என்பதே உண்மை. ஆகவே, பொது நுழைவுத் தேர்வு தேவையில்லை.
ந. சண்முகம், திருவண்ணாமலை.
அவசியம்
பொது நுழைவுத் தேர்வு காலத்தின் கட்டாயம். இதனால், மாணவர்களுக்கு நாடு முழுவதும் ஒருமித்த பாடமுறை என்பது அவசியமாகிறது. இந்த பொது நுழைவுத்தேர்வின் மூலம் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் தனித்தனி நுழைவுத்தேர்வு என்பது தவிர்க்கப்படுகின்றது. மேல்நிலை க்கல்வியின் அடிப்படையில் மட்டுமே கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டதால் அந்தந்த மாநிலக் கல்லூரிகளை மட்டுமே நம்பி இருந்த நிலை இதன் மூலம் மாற்றமடைகின்றது. புதிய கல்விக் கொள்கையின் நன்மைகளில் ஒன்றான இந்த பொதுநுழைவுத் தேர்வை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.
சோம. இளங்கோவன், தென்காசி.
நியாயமல்ல
நுழைவுத் தேர்வு என்றாலே பயப்படுவது தவறு. எல்லாத் துறைகளிலும் தரத்தை சோதிக்கும் நடைமுறை இருக்கும்போது மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய கல்வியில் அது கூடாது என்பது நியாயமல்ல. நன்றாகப் படித்த மாணவர்கள் நுழைவுத் தேர்வை விரும்புவார்களே தவிர, வெறுக்க மாட்டார்கள். பள்ளியில் பெற்ற மதிப்பெண் மட்டுமே போதும் என்று கூறுவது சரியல்ல. எந்த நுழைவுத் தேர்வையும் எதிர்கொள்ளும் திறனை மாணவர்கள் பள்ளியிலேயே வளர்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்களும் பிள்ளைகளை பயமுறுத்தாமல் நன்றாகப் படிப்பதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.
கரு. மெய்யப்பன், பள்ளத்தூர்.
துரதிருஷ்டவசமானது
இம்முடிவு துரதிஷ்டவசமானது. நுழைவுத்தேர்வு என்பது ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்விக் கனவை சிதைத்து விடும். உயர்கல்வி கற்பதில் விருப்பம் உள்ள மாணவர்கள் பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாவிட்டால் அவர்களது எதிர்காலப் பாதையே திசைமாறி விடும். நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எல்லாம் சாதனையாளர்களாக வெற்றி பெறுவதும் இல்லை. நுழைவுத் தேர்வில் தோற்றவர்கள் எல்லாம் ஒன்றும் தெரியாதவர்களும் அல்ல. பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் கல்லூரியில் சேர பள்ளித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களே போதுமானது.
மா. பழனி, தருமபுரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.