சரியானதே
ஆளுநரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு வழங்கப்படவேண்டும் என்கிற கோரிக்கை சரியானதே. ஆளுநர் மாநில அரசைக் கண்காணிப்பவராக உள்ளார். மாநில அரசுக்கு ஏதாவது இக்கட்டான சூழ்நிலையோ, இடர்ப்பாடோ ஏற்பட்டால் ஒழிய மாநில அரசுகளின் செயல்பாடுகளில் ஆளுநர் தலையிடுவது தவறு. மத்திய அரசு - மாநில அரசுக்கிடையே மோதல் போக்கை உருவாக்கும் ஆளுநர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் மாநில சட்டப்பேவைக்கு தரப்பட வேண்டும். மத்திய அரசும் தனது கைப்பாவையாக செயல்படுபவர்களை ஆளுநராக நியமிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
ஏற்புடையதன்று
இக்கோரிக்கை ஏற்புடையதன்று. மத்திய அரசு ஒரு மாநிலத்திற்கு ஆளுநரை நியமிக்கும்போது, அம்மாநில முதல்வரை கலந்தாலோசித்து பின்னர் நியமிக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஆளுநரின் செயல்பாடுகள் மீது மாநில அரசுக்கு அதிருப்தி ஏற்பட வழியில்லை. பொதுவாக, மத்தியில் ஆளும் கட்சியே மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் நிலையில் பிரச்னை எதுவும் எழுவதில்லை. ஆளுநர் தமக்குரிய பொறுப்புகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாநில அரசும் ஆளுநரை மதித்து நடக்க வேண்டும். அவரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்குத் தரப்படுவது நல்லதல்ல.
குரு. பழனிசாமி, கோயமுத்தூர்.
முற்றுப்புள்ளி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, சட்டப்பேரவையில் இயற்றும் தீர்மானங்களுக்கு அம்மாநில ஆளுநர் ஆதரவளிப்பவராக இருக்க வேண்டுமே தவிர, அத்தீர்மானங்களுக்கு முட்டுக்கட்டை போடுவது கூடாது. ஆளுநர் என்பவர் மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டவரே. எனவே, மாநில நலனுக்குப் புறம்பாக ஆளுநர் செயல்படுவதாக மாநில அரசு கருதினால் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி அவரைப் பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யப்பட வேண்டியது அவசியம். அப்படிப்பட்ட நிலை உருவானால்தான் ஆளுநர்-முதல்வர் மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
கோதை மாறன், திருநெல்வேலி.
தவறான செயல்
ஆளுநரை நியமனம் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு. அதேபோல் ஆளுநரை பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு மட்டுமேதான் உண்டு. பொதுவாக, அரசுப்பணியைப் பொறுத்தவரை, எந்த ஒரு பதவிக்கும் நியமன அதிகாரம் யாருக்கு உண்டோ அவருக்குத்தான் பணி நீக்க அதிகாரமும் உண்டு. அப்படி இருக்க, குடியரசுத் தலைவர் நியமனம் செய்த ஆளுநரை பதவி நீக்கம் செய்ய மாநில சட்டப்பேவைக்கு அதிகாரம் அளிப்பது தவறான செயல். மாநில சட்டப்பேரவை, மக்கள் நலனில் கவனம் செலுத்துவதே இன்றியமையாதது.
சி.ஆர். குப்புசாமி, உடுமலைப்பேட்டை.
நோக்கம்
குடியரசுத் தலைவர் ஒரு மாநிலத்திற்கு ஆளுநரை நியமிப்பதே, அம்மாநில அரசு அரசியல் சாசனத்தின்படி இயங்கிக்கொண்டிருக்கிறதா என்பதைக் கண்காணிப்பதற்குத்தான். அப்படியிருக்க, ஆளுநரை மாநில சட்டப்பேரவையின் அதிகார வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று மாநில அரசு எண்ணுவது முறையல்ல. இப்படி ஒரு கோரிக்கையை மாநில அரசு வைப்பது, மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் ஆளுநர் இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு நிகரானது. இதனை ஏற்றுக்கொண்டால், அரசியல் சட்டத்தில் ஆளுநர் என்கிற பதவி உருவாக்கப்பட்ட நோக்கத்தையே அது சிதைத்துவிடும்.
சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
கட்டாயம் இல்லை
தங்களுடைய கொள்கைகளோடு முரண்படும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாநில அரசு கோருவது, தங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என்று கூறுவது போன்றது. ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை. மாநில ஆளுங்கட்சிக்கு சாதகமாக அவர் செயல்பட வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை. அதேபோன்று ஆளும் கட்சிக்கு எதிராகவும் அவர் இருக்கக்கூடாது. ஆளுநர் பதவி நடுநிலையோடு இருக்க வேண்டிய பதவி. தங்களோடு ஒத்துப்போகவில்லை என்பதற்காக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய அதிகாரம் கோருவது தவறு.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.
கேலிக்கூத்து
ஆளுநர் என்பவர், மத்திய அரசின் பிரதிநிதியாக மாநில அரசின் செயல்பாடுகளை கண்காணித்து மத்திய அரசுக்கு அறிக்கைகள் கொடுக்கக் கடமைப்பட்டவரே தவிர மாநில அரசின் கொள்கைகளுக்கு அவர் உடன்பட வேண்டும் என்பது அவசியமில்லை. தங்கள் விருப்பத்திற்கு கட்டுப்படாத, தாங்கள் அனுப்பும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர்களை மாநில அரசுகள் பதவி நீக்கம் செய்யலாம் என்பது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிவிடும். அதே நேரத்தில், ஆளுநர்கள் மத்திய அரசின் பிரதிநிதி என்றாலும் நேர்மையாகச் செயல்பட வேண்டியதும் அவசிய
மானது.
மா. பழனி, தருமபுரி.
அபத்தம்
இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்குட்பட்டு மாநில அரசு செயல்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது போன்ற அதிகாரம் கொண்டது ஆளுநர் பதவி. ஒட்டுமொத்த நாட்டிற்கும் குடியரசுத் தலைவர் இருப்பதுபோல ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஆளுநர் இருக்கிறார். தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய சட்டப்பேரவைக்கு அதிகாரம் வழங்க மாநில ஆளுங்கட்சி கோருவது அபத்தமானது. அப்படி நடந்தால் அது மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கும் சீர்கெட வழிவகுப்பதாகிவிடும்!
கே. ராமநாதன், மதுரை.
எச்சரிக்கை
இது மிகவும் தவறான கோரிக்கை. ஆளுநர் தனது கடமையைச் செய்வதால் மாநில மக்கள் நலன் பாதிக்கப்படுகிறதா என்றுதான் மாநில அரசு பார்க்க வேண்டும். அண்மைக்காலமாக, ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவை என்ற எண்ணம் மேலோங்கியதன் விளைவுதான் இந்த அபத்தமான கோரிக்கை. சூழ்நிலைக்கேற்ப மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஆளுநர் செயல்பட வேண்டும். மத்திய அரசு நியமித்த ஆளுநரோடு இணக்கமான உறவை வைத்துக் கொள்வதுதான், மாநில வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு மாநில அரசு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.
சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
ஒத்துழைப்பு தேவை
ஆளுநர் என்பவர் மத்திய அரசின் பிரதிநிதி. அவருக்கு என சில அதிகாரங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளன. சில முக்கிய பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளுநரின் ஒத்துழைப்பு தேவை. ஆளுநர் என்பவர் இல்லாவிட்டல் மாநிலங்களில் நடைபெறும் சட்ட மீறல்களைத் தடுத்து நிறுத்த முடியாது. எந்தவொரு மாநிலத்திற்கும் ஆளுநர் என்பவர் கட்டாயம் தேவை. நாட்டிலுள்ள பல மாநிலங்களில் ஆளுநர்கள் மாநில அரசோடு சுமுகமாகத்தான் இருக்கிறார்கள். எனவே, ஆளுநரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தவறு.
எஸ்.வி. ராஜசேகர், சென்னை.
கடமை
மக்களின் பேராதரவுடன் ஆட்சி அமைக்கும் கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்குவதே முறையாகும். ஆளும் கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டால் அதனை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டியது அவருடைய கடமை. மாநில அரசுடன் கருத்து மோதல் ஏற்படுத்திக் கொள்வது ஆளுநருக்கு ஏற்புடைய செயல் அல்ல. மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசு, தன் கட்சியில் இருக்கின்ற மூத்தவர்களுக்கு ஆளுநர் பதவி வழங்குகிறது. அவர்கள் மாநில அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல. எனவே, இக்கோரிக்கை சரியே.
ந. சண்முகம், திருவண்ணாமலை.
பொருத்தமற்றது
மாநில அரசையே பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும் அதிகாரம் படைத்த ஆளுநரை, பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோருவது அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்குப் பொருத்தமற்றதாகும். ஆளுநர்தான் ஒரு மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தைத் தொடங்கி வைக்கவும், முடித்து வைக்கவும் அதிகாரம் பெற்றவர். தேவையெனில் சட்டப்பேரவையை முடக்கிவைக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. அப்படியிருக்க, அவரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை சட்டப்பேரவைக்குத் தர இயலுமா?
அ. கருப்பையா, பொன்னமராவதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.