"கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை சரியானதா?' என்ற கேள்விக்கு  வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது சரியானதே. மாநில மக்களின் கல்வித் திறனை மேம்படுத்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு மாநில அரசுக்கு உரியது.
Published on
Updated on
3 min read

எண்ம உலகம்
 கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது சரியானதே. மாநில மக்களின் கல்வித் திறனை மேம்படுத்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு மாநில அரசுக்கு உரியது. இது எண்ம உலகில் நாம் நடைபோடும் காலகட்டம். ஒவ்வொரு வீட்டுத் தலைவிக்கும் வங்கியில் கணக்கு உண்டு. கிராமத்துப் பிள்ளைகளுக்கும் கல்வி எட்டியாக வேண்டும். மத்திய அரசு என்ற முறையில் ஒரே கருத்தை மாநிலங்களில் திணிப்பதைவிட மாநிலங்களின் பன்முக கலாசாரத்தைப் போற்றும் விதமாக கல்வி மாநிலப் பட்டியலில் இடம்பெற வேண்டும். கல்வியில் ஒருங்கிணைப்பு, உயர்கல்வி தர மேம்பாடு போன்ற நிலையிலேயே மத்திய அரசு இருந்தால் போதும்.
 நா. ஜெயராமன், பரமக்குடி.
 இடர்ப்பாடுகள்
 மாநிலங்களுக்கான கல்வி வளர்ச்சி சார்ந்து திட்டமிடுவதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் முழு அதிகாரம் மாநில அரசிடம் இருப்பதுதான் சரியானது. மண் சார்ந்தும் மக்களின் வாழ்க்கை சார்ந்தும் கல்வி முறை இருக்க வேண்டும். நாடு முழுவதும் ஒரே விதமான கல்வி என்பது பல்வேறு இடர்ப்பாடுகளை உருவாக்கும். புதிய கல்விக் கொள்கையின் சில அம்சங்கள் பல மாநிலங்களுக்கு ஏற்புடையதாக இல்லாததற்கும் இதுவே காரணம். கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தால் மாநில அரசுகள் தமது மாநிலத்திற்கு ஏற்ற கல்வியை வடிவமைத்துக் கொடுக்க முடியும். கல்விக்கான நிதி ஒதுக்கீட்டையும் மாநில அரசுகள் தாராளமாக செலவு செய்ய வழிபிறக்கும்.
 மா. பழனி, தருமபுரி.
 முற்றுப்புள்ளி
 கல்வி முன்பு மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் சில மருத்துவப் பல்கலைக்கழகங்கள் தனித்தனியாக தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடத்திக்கொண்டிருந்தன. கல்வி பொதுப்பட்டியலுக்கு போன பின்னர், அந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கல்வியில் அரசியல் கூடாது. மாணவர்கள் நலனை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால் என்னென்ன சிக்கல்கள் என்பதைப் பட்டியலிட்டு அவற்றை எப்படித் தீர்ப்பது என்று சிந்திக்க வேண்டும். இந்தியா எங்கும் மாணவர்கள் கல்வித் தரம் ஒரே சீராக இருக்க, கல்வி பொதுப்பட்டியலில் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
 சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
 கேள்விக்குறி
 கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட்டால் மத்திய அரசால் தலையிட இயலாது. அனைத்துமே மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்க வேண்டும் எனில் மாநில சுயாட்சி என்பது கேள்விக்குறியாகிவிடும். மேலும், மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட மொழியைத் திணிக்கவும் கல்வி பொதுப்பட்டியலில் இருப்பது வழிகோலும். மாநில அரசு தன்னுடைய மாநில மொழியையும், மாநில கலாசாரத்தையும் இழக்கக்கூடிய நிலை ஏற்படும். மேலும் மத்திய அரசு, அதிகாரத்தை தன் கையில் வைத்துக்கொண்டு கடமையை மாநில அரசுகள் செய்ய நிர்ப்பந்திக்கும் சூழல் உருவாகும். எனவே கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது நல்லது.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 பொறுப்பு
 கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தால்தான் ஆரம்ப கல்விக்கான பாடத் திட்டத்தை வகுக்க முடியும். பொதுப்பட்டியலில் இருந்தால், மத்திய அரசின் திணிக்கப்பட்ட பாடத்திட்டத்தை ஏற்க வேண்டி இருக்கும். உயர்கல்வியைப் பொறுத்தவரை அது மாநிலப் பட்டியலிலோ பொதுப்பட்டியலிலோ இருப்பின் அது அகில இந்திய அளவில் நடைமுறைப்படுத்தப்படுவதால் தரமான கல்வி பெற வழிவகுக்கும். ஆக கல்வியைப் பொறுத்தவரை ஆரம்பக் கல்வி மாநிலப் பட்டியலிலும், உயர்கல்வி பொதுப்பட்டியலில் இருப்பது நலம் பயக்கும். எந்த பட்டியலில் இருந்தாலும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுகளுக்கு உள்ளது.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 வேறுபாடுகள்
 மாநில பாடத்திட்டத்திற்கும் மத்திய அரசு பாடத்திட்டத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அது மட்டுமல்லாமல், கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு பாடத்திட்டம், மொழி போன்ற பல்வேறு பிரச்னைகளால் அதிகமான மாணவர்கள் நீட் போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடிவதில்லை. மேலும், மாணவர்களுக்கு முன்பு போல பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவம், பொறியியல் மற்றும் அனைத்து படிப்புகளின் வினாத்தாள்களும் அமைய வேண்டும். எனவே கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
 ந. கண்ணையன், கிருஷ்ணகிரி.
 பாதிப்பு
 அகில இந்திய அளவில் நடத்தப்படும் "நெட்' போன்ற தகுதித் தேர்வுகளிலும், போட்டித் தேர்வுகளிலும் பங்கு கொள்ள அனைத்து மாணவர்களையும் தயார் செய்ய ஒரே மாதிரியான கல்விக் கொள்கை அவசியம். பொதுப்பட்டியல் என்றாலும் அரசியல் சாசன விதிகளின்படி அதில் மாநில அரசின் பங்கும் உண்டு என்பதால் மாநில அரசின் பரிந்துரைகளும், கருத்துகளும் புறக்கணிக்கப்படுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மாநிலங்களில், வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் அமரும்போது கல்வித் துறையில் செய்யும் மாற்றங்களால் பாதிக்கப்படுவது மாணவ சமுதாயத்தினரே. எனவே கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதே நல்லது.
 கே. ராமநாதன், மதுரை.
 விவேகம்
 கல்வி என்பது ஒரு மனிதனை முழுமையாக்கும் சாதனம். பலதரப்பட்ட கலாசார வேறுபாடுகளை உடைய இந்நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலான கல்விக் கொள்கையினை வகுப்பதே விவேகமானது. மாநிலப் பட்டியலில் கல்வி இருக்கும்போது வேலைவாய்ப்புக்கோ தொழில் தொடங்க அண்டை மாநிலங்களுக்கு செல்வதற்கோ இடையூறு ஏற்படலாம். பொதுப்பட்டியலில் கல்விக் கொள்கை இருக்கும்போது நாட்டின் எந்த மாநிலத்திலும் எந்த ஒரு பிரஜையும் தொழில் தொடங்குவதோ வேலைவாய்ப்பு பெறுவதோ மிகவும் எளிதாகும். எனவே, கல்விக் கொள்கை பொதுப்பட்டியலில் தொடர்வதே கல்வித்துறை சிறக்க உதவும்.
 சி.ஆர். குப்புசாமி, உடுமலைப்பேட்டை.
 அபத்தம்
 கல்வியை பொதுப்பட்டியலிருந்து முழுமையா மாநிலப் பட்டியலுக்கு மாற்றும் கோரிக்கை அபத்தமானது. மாநிலப் பட்டியலில் கல்வி கொண்டு வரப்பட்டால், அப்போது ஒவ்வொரு மாநிலமும் தனது பாடத்திட்ட அளவில் மத்திய நிர்வாகத் துறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும். குடிமைப் பணிகளில் மாநில வாரியாக ஒதுக்கீடு என்ற கோரிக்கையும் வரும். மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள துறைகளுக்கும் மாநில நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளுக்குமிடையே ஒருங்கிணைப்பை எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில் அனைத்து மாநில வரலாறு, கலாசாரம் உள்ளடக்கிய பாடத்திட்டம் இன்றியமையாதது.
 சி. இரத்தினசாமி, புதுப்பாளையம்.
 நியாயம்
 அந்தந்த மாநிலங்களின் கலாசாரம் பண்பாடு, வரலாறு சார்ந்த செய்திகளை அம்மாநிலங்களில் வசிக்கும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டம் அமைய, கல்வி மாநிலப் பட்டியலில் இருப்பதே சிறந்ததாகும். மேலும், அந்தந்த மாநிலத்திலுள்ள சமூக ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார புள்ளிவிவரங்கள் அனைத்தும் அம்மாநிலத்தில் பேசப்படும் மாநில மொழியின் வழியே, கிராமப்புற மாணவர்களுக்கு தெரிவிப்பதற்கு கல்விக் கொள்கை மாநிலப் பட்டியலில் இருப்பதுதான் வழிவகுக்கும். இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மக்கள் வாழ்ந்துவரும் சூழலில் கல்விச் சார்ந்த கொள்கையைத் தீர்மானிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு இருப்பதே நியாயம்.
 க. இளங்கோவன், நன்னிலம்.
 ஆதிக்கம்
 மத்திய அரசு கல்வித்துறையில் தன்னுடைய முழு ஆதிக்கத்தையும் செலுத்துகிறது என்று மாநில அரசுகள் கருதுகின்றன. தமிழக முதலமைச்சரும் அண்மையில் கல்வி மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். அனைத்து கல்வி நிறுவனங்களும் அறிவியல் பூர்வமான சிந்தனைகளை மட்டுமே மாணவர்களுக்கு வழங்க வேண்டும். கல்வி, மாநிலப் பட்டியலில் இருந்தால்தான், மாநிலங்கள் தங்களுடைய கலாசாரம், வரலாறு, பண்பாடு பற்றிய கருத்துகளை சுதந்திரமாக பாடத்திட்டத்தில் சேர்க்க முடியும். மாநிலத்தின் உரிமையை மத்திய அரசு மதிக்க வேண்டும். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே சரியானது.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 தரம் குறையும்
 கல்வி பொதுப்பட்டியலில் தொடர்வதுதான் அனைத்து மக்களுக்குமான சிறந்த, பாதுகாப்பான நடைமுறையாகும். பல மாநில அரசுகளின் பக்குவமற்ற செயல்பாடுகள் மாணவர்களின் கல்வியை பாழாக்கும் நிலையில் உள்ளன. மேலும், நீட் போன்ற அனைவருக்கும் பொதுவான தேர்வுகள் பொதுப்பட்டியலில் கல்வி இருப்பதால் மட்டுமே சாத்தியமாகின்றன. மாநிலப் பட்டியலுக்கு கல்வி மாற்றம் பெற்றால் தேர்வு முறைகளின் தரம் குறையும் ஆபத்து உள்ளது. மேலும், தகுதியற்ற மனிதர்களின் வரலாறுகளை வருங்கால சந்ததியினர் வலிந்து படிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர். கல்வி பொதுப்பட்டியலில் தொடர்வதே அனைத்துப் பிரிவினருக்கும் நல்லது.
 சோம. இளங்கோவன், தென்காசி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com