"அதிகரித்துவரும் ஆணவக் கொலைகளுக்கு ஜாதிய உணர்வுதான் காரணமா' என்ற கேள்வி குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று எண்ணும் போக்கு மக்களிடையே மறையாதவரை இங்கு ஆணவப் படுகொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கும்.
Published on
Updated on
3 min read

சிதைந்த கனவு

உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று எண்ணும் போக்கு மக்களிடையே மறையாதவரை இங்கு ஆணவப் படுகொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கும். காற்றைப்போல் காதலும் மனித உடல்களுக்குள் புகுவது இயற்கையின் படைப்பு. காதலர்களைக் கொண்டாடாமல் இருந்தால்கூட பரவாயில்லை; கொல்லாமல் இருக்க வேண்டும். படித்து முன்னேறிவிட்டால் ஜாதி உதிர்ந்துவிடும் என்ற நோக்கில் சீர்திருத்தங்களைச் செய்த சீர்திருத்தவாதிகளின் கனவைச் சிதைத்தது இந்தப் படுகொலை. ஜாதியை மறப்போம்; மனிதத்தை வளர்ப்போம்.

வேல்முருகன், ராமாபுரம்.

சிந்தனையில் மாற்றம்

சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? 23 வயதேயான ஒருவர் சக மனித உயிரைக் கொலை செய்திருக்கிறார் என்றால், அவரது சிந்தனையில் ஜாதிய உணர்வு எந்த அளவுக்கு புரையோடிப் போய் உள்ளது என்பதையும், அதற்கு அவர் சார்ந்துள்ள சமூகம் மற்றும் பெற்றோரின் பங்கே காரணம் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. "தன்னைவிட ஒருவன் தாழ்ந்தவன்' என்ற ஜாதிய உணர்வே ஆணவக் கொலைகளுக்கான மூல காரணம். சக மனிதனை மனிதனாகப் பார்க்கும் சிந்தனை மாற்றம் ஒன்றே இந்தக் கொடுமைக்குத் தீர்வு.

அஹமத் அலி, புழல்.

சட்டமே தீர்வு

ஆணவக் கொலைகள் தற்போது அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஜாதி வெறியர்கள் இருக்கும் வரை ஜாதிய உணர்வும் நிலைத்து நிற்கும்; இன்னும்கூட அதிகமாகும். மக்கள் முற்றிலும் தவறாக ஜாதி வேற்றுமையைக் கையில் எடுத்திருப்பது மிகவும் ஆபத்தானது. சமத்துவபுரம் போன்ற குடியிருப்பு இருந்தாலும், மக்கள் மனம் இன்னும் திருந்தவில்லை. அரசு மிகக் கடுமையான சட்டம் இயற்றினால் மட்டுமே ஆணவக் கொலைகளைத் தடுக்க முடியும்.

கே.விஸ்வநாதன், கோவை.

மனமாற்றம் தேவை

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்துவரும் ஆணவக் கொலைகளுக்கு ஜாதிய உணர்வே முக்கியக் காரணம் என்பது கசப்பான உண்மை. இச்செயல்கள் மேலும் தொடராமல் இருக்க மத்திய, மாநில அரசுகளால் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது ஒரு புறமிருக்க, மக்களின் மனமாற்றமே நிரந்தரத் தீர்வாக இருக்கும். இது தொடர்பாக மக்களின் புரிதலே தகுந்த விடையளிக்கும். மக்களின் மனதில் மாற்றம் தேவை.

என்.கே.ராஜா, சென்னை.

சமுதாய மனப்பாங்குதான்...

உயர்ந்த, தாழ்ந்த எனப் பகுக்கப்பட்ட ஜாதி அடிப்படையில் எதிர்ப்பை காதல் எதிர்கொள்கிறது. குடும்பத்தின் மரியாதையைக் காப்பதற்காகவே ஆணவக் கொலைகள் நடைபெறுவதாக காரணம் கூறப்படுகிறது. இது சமூக நீதிக்கும் மனித உரிமைக்கும் எதிரானது. சட்டம் இருந்தபோதும் செயல்படாத சமுதாய மனப்பாங்குதான் இந்த வன்முறைக்கு ஊக்கம் தருகிறது. கல்வி, விழிப்புணர்வு, சமத்துவம் போன்றவைதான் இதற்கான நீடித்த தீர்வுகள். ஒவ்வோர் உயிரும் சமமான மதிப்புடையது என்பதை நாம் உணர வேண்டும்.

சா. முகம்மது ஹுசைன், அறந்தாங்கி.

கலாசார மாற்றம்

விரைவான நகரமயமாக்கல் மற்றும் பாரம்பரிய கட்டமைப்புகள் மீது மோதல் போன்ற மாற்றங்கள் நிகழ்ந்துவரும் காலம் இது. கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வரும் இளைஞர்கள் சுதந்திரத்துக்கும், பழைய கட்டுப்பாடுகளுக்கும் இடையே சிக்குகிறார்கள். முக்கியமாக பொருளாதாரச் சுதந்திரம், தலைமுறை இடைவெளி, பெற்றோர்களின் பழைமைவாதத்தை ஏற்காத போக்கு போன்ற வெவ்வேறு கோணங்களில் உள்ள தளங்களில் இயங்கும்போது, உள்ளூர் பழைமைவாதத்தால் வலுவானவர்கள் தங்கள் ஆதிக்கத்தை இழக்கும் பயத்தால் இப்பாதகம் நிகழ்கிறது.

மா.ராதிகா, சில்லத்தூர் வடக்கு.

பெற்றோருக்கு பொறுப்பு

பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை வழங்கினாலும், அவர்களுக்கு ஒழுக்கத்தையும், எளிமையான வாழ்க்கை முறையையும், சமூகத்தையும், கலாசாரத்தையும் மதிக்கும் பண்பையும் கற்றுக் கொடுப்பதில் தவறிவிடுகிறார்கள். ஆணவக் கொலைகள் ஜாதி உணர்வால் மட்டுமே நிகழ்கின்றன என்று நாம் முழுமையாகக் குறை கூறமுடியாது. வெறும் மனிதனாக இருப்பது மட்டும் போதாது; மனிதநேயத்துடன் வாழ்வதே இன்றைய காலகட்டத்தின் தேவையாகும். பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு நமது கலாசாரம், ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு குறித்தும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

கு.நாகராஜன், கரூர்.

தவறான வழிகாட்டல் தானே...

"ஜாதி இரண்டொழிய வேறில்லை' என்று ஆரம்பப் பள்ளியில் பயின்றோம். ஆனால், அதே பள்ளியில் என்ன ஜாதி என்ற கேள்வியை அன்றுமுதல் இன்றுவரை மறக்காமல் கேட்கிறார்கள். "ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று மகாகவி பாரதியார் பாடியதைக் கேட்டிருக்கிறோம். ஆனால், அந்த வார்த்தையின் பொருள் புரிந்தும் ஏற்க மறுக்கிறது மனித மனது. ஜாதியின் பெயரால் இருக்கும் அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும். ஜாதி தீயில் குளிர்காயும் குரூரர்களின் தவறான வழிகாட்டல் தடுக்கப்பட வேண்டும்.

ப.நரசிம்மன், தருமபுரி.

பகுத்தறிவு தேவை

கல்வி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்குப் பகுத்தறிவும், சுய சிந்தனையும் முக்கியமே. ஆதலால், வேர்விட்டு ஊறிப்போய்க் கிடக்கும் ஜாதியப் பெருமை பெரும்பாலான ஆணவக் கொலைகளுக்கு முக்கியக் காரணி என்பதில் துளியும் மாற்றுக் கருத்து இல்லை. ஜாதிக்கு ஒரு சாமி, இந்தக் கல்லூரியில் இந்த ஜாதியினருக்கே முன்னுரிமை எனப் பிரித்துவைத்து சிறு வயது முதலே ஜாதியமும், பாகுபாடும் சொல்லித் தரப்படுகிறது. இவற்றைக் கல்வி மட்டுமே களைந்துவிடும் என நினைப்பது அறியாமை; பகுத்தறிவே ஜாதியத்தைத் தடுத்தறுக்கும்.

மு.கார்த்திக் தினேஷ், தென்காசி.

கண்காணிப்பில் சங்கங்கள்...

பொதுவாக கிராமப் பகுதியில் ஜாதிய கட்டமைப்புகள் அதிகமாக உள்ளன. ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும்போது இதைத் தெளிவாக அறிய முடியும். இந்நிலை மாறவேண்டுமானால் அரசின் உதவி மூலம் கல்வி, பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்து கிராமங்கள் நகரங்களாக மாற வேண்டும். ஜாதி அமைப்புகள், ஜாதி சங்கங்களின் செயல் பாடுகளை அரசு கண்காணிக்க வேண்டும். மக்களின் சிந்தனை மாற்றத்தால் மட்டுமே ஆணவக் கொலைகளைத் தடுக்க முடியும்.

ரமீலா ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.

ஐந்தறிவு உயிரினங்களே மேல்...

அதிகரித்துவரும் ஆணவக் கொலைகளுக்கு ஜாதிய உணர்வு மட்டுமே காரணம் அல்ல; அதுவும் ஒரு காரணம். மனித மரபணுக்களில் ஆழப்பதிந்துள்ள ஜாதிய உணர்வு மனிதனை மனிதனாக்குகிறதா? ஐந்தறிவுள்ள உயிரினங்கள் ஆறறிவுள்ள மனிதனைவிட மேலானவை. அவை தம் இனத்தை தாமே அழிப்பதில்லை. நாம் மக்கள் என்பதும், மாக்கள் அல்ல என்பதும் மரபணுவில் பதிந்துள்ளதே! இதை வெளிக்கொணர ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். புனித நூல்கள், திருக்குறள் போன்ற அறநூல்கள் எடுத்துரைத்த அறநெறிகளை நம் மனதில் பதியவைக்க வேண்டும்.

விஜயலட்சுமி ராஜசேகரன், கடலூர்.

கல்வியால் தீர்வு

தமிழகத்தில் பல்வேறு ஜாதி அமைப்புகள் உள்ளன. அவை தங்கள் சமுதாயம் குறித்து உயர்வாகப் பேசுவதாலும், நாம் இந்த மண்ணை ஆட்சி செய்த பரம்பரை என்றும், மற்ற ஜாதியினர் நமக்கு கீழானவர்கள் என்றும் பிரசாரம் செய்கின்றனர். இப்படிப்பட்ட புகழ் வார்த்தைகளை நம்பி இளைஞர்களும் தவறான பாதையில் சென்றுவிடுகின்றனர். இதைத் தவிர்க்க நாம் சார்ந்திருக்கும் ஜாதியால் அல்ல; கல்வியின் மூலமாக கிடைப்பதில்தான் பெருமை இருக்கிறது என்பதை உணர்ந்து நடக்க முயற்சிக்க வேண்டும்.

ப.சுவாமிநாதன், பட்டுக்கோட்டை.

ஜாதி அரசியலே வேர்

இந்தியாவின் பொருளாதாரம் மூன்றாம் இடத்திலும் புவி அரசியலில் முக்கியத்துவம் பெற்றதாக மாறிக் கொண்டிருக்கும் போதிலும் இந்த ஜாதிய உணர்வுகள் குறைந்தபாடில்லை. நமது ஜாதி படிநிலை அமைப்பும், ஜாதி அரசியலும் இதற்கு வேர்கள் போன்றவை. ஜாதிய திரைப்படங்களோ எரிகிற நெருப்பில் ஊற்றும் நெய். தேசிய குற்றப் பதிவகத்தின் புள்ளி விவரங்களும் ஆணவப் படுகொலைகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதாகவே தெரிவிக்கின்றன. உறுதியான சட்டமும், தண்டனைகளும், கல்வியும் சேர்ந்தால் மட்டுமே இதற்குத் தீர்வு கிட்டும்.

தமிழரசி, சென்னை.

கட்சிகளும் காரணம்

அரசியல் கட்சிகள் ஜாதியை ஒழிப்பேன் எனக் கூறுகின்றன. ஆனால், தங்கள் கட்சியின் சார்பாக, குறிப்பிட்ட தொகுதியில் உள்ள அதிகப்படியான ஜாதியைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக நியமனம் செய்கின்றன. அமைச்சரவையிலும் ஜாதிவாரி பிரதிநிதித்துவமே வழங்கப்படுகிறது. அரசியல்வாதிகள் முன்முயற்சி எடுத்து ஜாதி வெறியை ஒழிக்க முன்வரவேண்டும். சட்டம் மட்டுமல்ல; அதை நிறைவேற்றும் ஆட்சியாளர்களும், பிற அரசியல்வாதிகளும் இதில் அடக்கம்.

டி.சேகரன், மதுரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com