"குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளது' குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

Published on
Updated on
3 min read

தகுதியானவர்

பொது சேவை மற்றும் எளிமையான வாழ்க்கைக்கு முன்மாதிரியாகச் செயல்பட்டுவரும் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது சரியான முடிவாகும். அரசியலில் நேர்மையானவர் என்ற காரணத்தால் அவரைத் தேர்வு செய்தது மிகவும் பொருத்தமானது. ஜனநாயகத்தைக் காக்கும் மிகப் பெரிய பொறுப்புக்கு தகுதியானவராக சி.பி.ஆர். இருப்பார் என்பது உண்மை.

என்.வி.சீனிவாசன், புது பெருங்களத்தூர்.

நாட்டின் நலன் கருதி...

இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஒருமனதாக கடமையாற்றும் பொறுப்புணர்வுடன் இருப்பவர் குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர். நடைமுறையில் அரசியல் உள்நோக்கத்துடன் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; அது ஏற்புடையதல்ல. நிதர்சனத்தில் ஆகச் சிறந்த தலைமைப் பண்பு இருந்தாலும், எதிர்க்கட்சிகள் அவர்களை ஏற்க முன்வருவதில்லை. குடியரசுத் துணைத் தலைவர் தேசத்தின் தலைவர். கட்சியின் வழிவந்த தலைவராக கடமையாற்றக் கூடாது. நாட்டின் நலன், முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

கீதா அசோக், கோவை.

நடுநிலை இருக்காது

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை தே.ஜ. கூட்டணி அறிவித்திருப்பது அரசியல் சார்பானதாகும். தமிழகத்தைச் சேர்ந்த அவர் நல்லவர் மற்றும் வல்லவர்தான். ஆனாலும், கட்சிப் பொறுப்பிலும், ஆளுநர் பொறுப்பிலும் இருந்தவர் மாநிலங்களவையில் நடுநிலையுடன் எப்படிச் செயல்படுவார் என்று எதிர்பார்க்க முடியும்? மாநிலங்களவைத் தலைவரைப் பொருத்தவரை கட்சி சார்பற்றவராக இருப்பதே சிறப்பு. அந்த வகையில், தோற்றாலும் ஜெயித்தாலும் "இண்டி' கூட்டணியின் தேர்வே சரியானது.

அ.கருப்பையா, பொன்னமராவதி.

பரப்புரைக்கு உதவும்...

தமிழர் ஒருவரை குடியரசுத் துணைத் தலைவராக ஆக்கியிருக்கிறோம் என்று 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பரப்புரை செய்ய உதவலாமே அன்றி வேறெந்தப் பயனும் இதனால் ஏற்படப் போவதில்லை. தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாக பாஜக மீதான விமர்சனத்தை மடைமாற்றம் செய்ய இந்தத் தேர்வு பயன்படும். வழக்கமாக, பாஜக தனது மூத்த தலைவர்களுக்கு, அவர்களின் அரசியல் வாழ்வின் கடைசிக்காலத்தில் ஆளுநர் பதவி போன்றவற்றை அளிக்கும். அந்த வகையில், இந்த முறை தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு குடியரசு துணைத் தலைவர் பதவி வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

க.சக்திவேல், கும்பகோணம்.

அரசியல் உத்தி

சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது அவர் சார்ந்த கட்சியின் நம்பகத்தன்மைக்கு உகந்த சரியான தேர்வு என்பதைத் தவிர, எந்த நன்மையும் நடக்கப் போவதில்லை. தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற மொழியுணர்வை தமிழக மக்கள் மனதில் ஏற்படுத்துவதன் மூலம் திமுகவுக்கு நெருக்கடியையும், தமிழகத்தில் தங்களது கட்சியின் வாக்கு வங்கியை வளர்த்துக் கொள்ளவும் முடியும் என்ற அரசியல் உத்தியாகத்தான் இது பார்க்கப்படுகிறது.

குமரி கிருஷ்ணன், கன்னியாகுமரி.

மொழி அரசியல்!

தமிழக மக்களை தன் பக்கம் திருப்பும் முயற்சியாகத்தான் பார்க்க முடிகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ளவரை பாஜக நிறுத்தினாலும் வெல்வது உறுதி. தமிழ், தமிழர் எனப் பேசும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவே சி.பி.ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை "இண்டி' கூட்டணி நிறுத்தியிருப்பதால் சந்திர

பாபு நாயுடு, சந்திரசேகர ராவ், ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு நெருக்கடி உருவாகியுள்ளதையும் மறுப்பதற்கில்லை. அரசியல் கட்சிகள் ஆடும் சதுரங்க ஆட்டத்தில் மொழி அரசியல் கலந்து விட்டதும் வேதனையே.

ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

காலூன்ற வாய்ப்பு

முரண்பாடுகள், அடக்குமுறைகள், சூழ்ச்சிகள், தன்னலம் மிகுந்துள்ளதாக மத்தியில் ஆளும் கட்சி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தமிழகத்தில் பாஜக காலூன்ற இது ஒரு வாய்ப்பு என்றும் கூறலாம். 'இண்டி' கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டியை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயன்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சுதர்சன் ரெட்டியை ஆதரிப்பது ஜனநாயகம் மற்றும் கோட்பாட்டு அளவில் சரியான முடிவு.

ஆ.லியோன், மறைமலைநகர்.

அரசியல் "செக்!'

திமுகவுக்கு "செக்' வைத்தார் மோடி. தெலுங்கு தேச கட்சிக்கு "செக்' வைத்தார் மல்லிகார்ஜுன கார்கே. அடுத்து வரவுள்ள தமிழக, ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்கு இவர்கள் இந்த விஷயத்தைப் பயன்படுத்துவார்கள். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அரசியல் பின்புலம் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி. அரசியல் பின்புலம் இல்லாத "இண்டி' கூட்டணி வேட்பாளர் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வெற்றி பெற்றால் அரசமைப்பு சாசனம் பாதுகாக்கப்படும்.

ரமிலா ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.

ராஜதந்திரம்

தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற ராஜதந்திரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும். கடந்த 1984, 1987}இல் போட்டியிட்ட ஆர்.வெங்கட்ராமனை தமிழர் என்று ஆதரிக்காமல் எதிர்த்தே வாக்களித்தது திமுக. தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆதரிக்கவில்லை. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த காம்ப்ளேவையும், கேரளத்தைச் சேர்ந்த நீதியரசர் கிருஷ்ணய்யரையும் ஆதரித்தும்,1989}இல் நடந்த தேர்தலில் திமுக வென்று காங்கிரஸ் கனவு தகர்ந்ததும் வரலாறாகும். திமுக மற்றும் அதிமுக வலுவாக இருக்கும் வரை பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியாது.

அ.செய்யது முகம்மது, மேலப்பாளையம்.

பெருமையே...

அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய ஓர் எளிய தொண்டர். அந்த வகையில், அரசியல் நகர்வுகளை எளிதில் புரிந்துகொள்ளும் திறன் பெற்ற ஓர் அரசியல் தலைவர், மக்களவை முன்னாள் உறுப்பினர் மற்றும் ஆளுநர் என்ற அவரது தகுதி, இந்தப் புதிய பதவிக்கும் நிச்சயம் வலு சேர்க்கும். அதேநேரம், முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனுக்குப் பிறகு தேசிய அரசியலில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பதவியை வகிக்க இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனின் தேர்வு தமிழகத்துக்கு நிச்சயம் பெருமையே.

வெ.க.சந்திரசேகரன், வெள்ளக்கிணறு.

நடுநிலையுடன்...

குடியரசு துணைத் தலைவர் பதவி என்பது முக்கியம் வாய்ந்ததாக இல்லை என்றாலும், மாநிலங்களவையை நடத்தும் பொறுப்பு உள்ளது. சி.பி.ராதாகிருஷ்ணன் ஆரம்பத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ். தொண்டர். பின்னர், பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக இருந்தவர். எந்த ஆளும் கட்சியாக இருந்தாலும், தமக்கு தேவைப்படி நடப்பவர்களைத்தான் வைத்துக் கொள்வர். நல்லவர் என்றால் நடுநிலையாக நடக்க வேண்டும், இல்லை என்றால் முன்னவர் நிலைதான். அதைத் தவிர, இதில் பெருமை கொள்வதற்கு வேறு ஏதுமில்லை.

நா.குழந்தைவேலு, மதுரை.

அரசியல் கணக்கல்ல

அரசியல் கணக்கை மனதில் வைத்து தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு தே.ஜ. கூட்டணி சார்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக பரவலாகப் பேசப்பட்டாலும், அது முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அதேநேரத்தில், சி.பி.ராதாகிருஷ்ணன் எல்லா விதத்திலும் பொருத்தமானவர் என்று சொல்ல முடியும். கொள்கைப் பிடிப்புடன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி மாறாமலும் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக, வாரியத் தலைவராக, ஆளுநராக எந்தக் காலத்திலும் சர்ச்சைகளுக்கு உட்படாதவராகவும் இருந்து வருகிறார்.

சி.ரத்தினசாமி ,பொல்லிக்காளிபாளையம்.

களம் பரபரப்பானது

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளது, மாநிலத்தின் ஆளுங்கட்சியான "இண்டி' கூட்டணியைச் சேர்ந்த திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகவே பார்க்கப்படுகிறது. மேலும், பாஜக வலுவாக உள்ள கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இது கைகொடுக்கும் என்ற நோக்கில் அமைந்துள்ளது. இரு கூட்டணிகளுமே தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளதால் அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.

பா.சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

அரசியல் கணக்கு

சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருப்பது பாஜகவின் வளர்ச்சிக் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கிறது . தமிழகத்தில் அந்தக் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும் என்ற கணக்குதான். தமிழகத்தில் மத அரசியல் அணுகுமுறை ஒரு மாதிரியாகத் திரிந்துபோய் விடுகிறது என்பதுதான் எதார்த்தம். "இண்டி' கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளது மதத்துக்கு எதிரான ஜாதி அமைப்பு என்பதும் எதார்த்தம்.

ஆர்.ஜி.பாலன், திசையன்விளை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com