இந்த நாளில் அன்று
(12.03.1964)
புதிய உணவு தானிய வியாபார லைசன்ஸ் உத்தரவு விவரம் - சர்க்கார் விதித்த விலைக்கு மேல் விற்கக்கூடாது
தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் தேதி அமலுக்கு வரும் புதிய உணவு தானிய வியாபாரிகள் லைசன்ஸ் உத்தரவின் கீழ் மத்திய அல்லது ராஜ்ய சர்க்கார் நிர்ணயித்த விலைக்கு அதிகமான விலையில் எந்த உணவு தானியத்தையும் லைசன்ஸ் உள்ள வியாபாரி விற்க முடியாது.
லைசன்ஸ் இல்லாமல் யாரும் உணவு தானிய வியாபாரத்தில் ஈடுபட முடியாது. நெல், அரிசி, கோதுமை, மைலோ, சொர்க்க சோளம், தினை வகைகள், பருப்புகள் ஆகியவற்றுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.
ஆரம்பக் கையிருப்பு, எந்த இடத்தில் இருந்து எந்த அளவு பெறப்பட்டது, பெறப்பட்ட அல்லது அகற்றப்பட்ட அளவு, முடிவு இருப்பு ஆகியவற்றைக் காட்டும் அன்றாக கணக்குகள் உள்ள ரிஜிஸ்தரை ஒவ்வொரு தானியத்துக்கும் லைசன்தாரர் வைத்திருக்க வேண்டும்.
உற்பத்தியாளராகவும் உள்ள லைசன்ஸ்தாரர் தன் சொந்த உற்பத்தியை தனியாக அன்றாட கணக்கில் காட்ட வேண்டும்.
கையிருப்பு வரத்து, விற்பனை ஆகியவற்றைக் காட்டும் அறிக்கைகளை இரு வாரத்துக்கு ஒருமுறை லைசன்ஸ் அதிகாரிக்கு வியாபாரி அனுப்ப வேண்டும்.
தன்னிடம் விற்பனைக்கு இருக்கும் உணவு தானியங்களின் விலைப்பட்டியலை ஸ்தல முக்கிய மொழிகளில் நன்கு தெரியும் இடத்தில் வியாபாரி வைத்திருக்க வேண்டும்.
தன்னிடம் பதிவு செய்துகொண்டு இருக்கும் சில்லறை வியாபாரிகளுக்கு மட்டும், லைசன்ஸ் அதிகாரியின் கட்டளைகளுக்கு இணங்க மொத்த வியாபாரி விற்க வேண்டும்.
ஒவ்வொரு வாடிக்கைக்காரருக்கும் லைசன்ஸ்தாரர் சரியான ரசீது வழங்க வேண்டும்.
இருப்புகள், கணக்குகளை லைசன்ஸ் அதிகாரி அல்லது சர்க்கார் தணிக்கை செய்ய எல்லா சமயங்களில் எல்லா வசதிகளையும் லைசன்ஸ்தாரர் அளிக்க வேண்டும்.
ஹேஷ்ய பேரங்களில் லைசன்ஸ்தாரர் ஈடுபடக்கூடாது. விற்பனைக்காக உள்ள உணவு தானியத்தை விற்க மறுக்கக்கூடாது. விற்பனையின்போது மார்க்கெட் நிலவரத்துக்கு அதிகமான லாப விகிதத்தில் அல்லது உணவு தானிய மொத்த வியாபாரத்துக்கு வியாபாரிகள் பிரதிநிதித்வ குழு விதித்த லாப அளவுக்கு அதிகத்தில் விற்கக்கூடாது.
வருட வர்த்தகம் ரூ.25 ஆயிரத்துக்கு அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் ரூ.500, ரூ.25 ஆயிரத்துக்கும் ரூ.50 ஆயிரத்துக்கும் இடையே இருந்தால் ரூ.750, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் ரூ.1000 லைசன்ஸ் அதிகாரியிடம் வியாபாரி டிபாசிட் கட்ட வேண்டும்.
லைசன்ஸ் நிபந்தனைகளை அல்லது அத்யாவசிய பண்ட சட்ட உத்தரவுகளை லைசன்ஸ்தாரர் அல்லது அவருடைய ஆள் மீறினால் லைசன்ஸ் ரத்து செய்யப்படும். அவரிடம் உள் இருப்பு பற்றி லைசன்ஸ் அதிகாரியின் கட்டளைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
டிபாசிட் பறிமுதல் அவசியம் என கருதப்பட்டால், அது பூராவும் அல்லது ஒரு பாகம் ஒரு உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.