
ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாத வருமானம் உள்ளவர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப கார்டுகளுக்கு இப்போதுள்ள நிலையில் அரிசி வழங்குவது இயலாது என்று முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
உணவு நிலைமை மாநிலத்தில் முன்பு இருந்ததைவிட இப்போது எவ்வளவோ பரவாயில்லை என்றபோதிலும் ஏழை, எளிய மக்கள் சமுதாயத்தின் மிகுந்த நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு மலிவு விலையில் அரிசி கொடுக்கவேண்டி உள்ளது.
ஏற்கெனவே இருபது கிலோ என்று நிர்ணயிக்கப்பட்டது, உணவுத் தட்டுப்பாடு நிலை காரணமாக குறைந்த வருமானதாரர்களுக்கு ஓரளவுக்குக் குறைக்கப்பட்டு பரவலாக விநியோகிக்கப்படுகிறது.
தற்போது அரிசி விலை சற்று இறங்கியுள்ளது. உணவு நிலையில் மிக கஷ்டமான காலத்தை ஓரளவுக்கு சமாளித்துவிட்டோம். ஒத்துழைத்த அனைத்து மக்களுக்கும் நன்றி.
முன்பு கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்ற கம்பு இப்போது ஒரு ரூபாய் அறுபது காசுக்கு கிடைக்கிறது. ஓரளவுக்கு உணவு தானிய விலை குறைந்துவருகிறது.
ஆந்திரா போன்ற உபரி மாநிலங்களில் இருந்து 30 ஆயிரம் டன் அரிசி வாங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையெல்லாம் வைத்துக்கொண்டு உணவு நிலைமையை சமாளித்து வருகிறோம்.
விளைச்சல் பெருகி, பழையபடி குடும்ப அட்டைக்கு இருபது கிலோ அரிசி வழங்கும் நிலைமை முன்னேறும் வரையில், மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு குடும்ப அட்டை மூலம் அரிசி கொடுப்பது என்பது இப்போதைக்கு இயலாது என்றார் எம்.ஜி.ராமச்சந்திரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.