அரசுத் தேர்விற்கான அரங்கம்: வேதியியல் தொகுப்பு

ஒரு கரைசலின் தொகைசார் பண்பு அதில் கரைந்துள்ள துகள்களின் எண்ணிக்கையை பொறுத்து அமைகிறது. துகள்களின் வேதித் தன்மையைப் பொறுத்து அமைவதில்லை. எனவே
அரசுத் தேர்விற்கான அரங்கம்: வேதியியல் தொகுப்பு
Updated on
6 min read

தொகைசார் பண்புகள்

* ஒரு கரைசலின் தொகைசார் பண்பு அதில் கரைந்துள்ள துகள்களின் எண்ணிக்கையை பொறுத்து அமைகிறது. துகள்களின் வேதித் தன்மையைப் பொறுத்து அமைவதில்லை. எனவே தொகை சார் பண்புகள் எனப்படுபவை கரைசலில் உள்ள கரைபொருளின் பண்பாகும். பொதுவாக கரைபொருளானாது ஆவியாகாத தன்மை உடையதாகக் கருதப்படும்.

* ஆவி அழுத்தக் குறைவு, கொதிநிலை உயர்வு  உறைநிலைத் தாழ்வு, சவ்வூடு பரவல் அழுத்தம் ஆகியன தொகைசார் பண்புகள் ஆகும்.

பெக்மன் வெப்பநிலைமானி

* பெக்மன் வெப்பநிலைமானியானது மிகக்குறைந்த வெப்பநிலை மாற்றத்தை அளக்கப் பயன்படுகிறது. பெக்மன் வெப்பநிலைமானி கரைப்பான் அல்லது கரைசலின் உறைநிலை வெப்பநிலையின் தனிமதிப்பை நிர்ணயிக்கப் பயன்படுத்த முடியாது. எனவே இது வகைப்படுத்தப்பட்ட வெப்பநிலைமானி எனப்படும். 0.01K வெப்பநிலை வேறுபாட்டையும் எளிதாக அளக்கலாம்.

வெப்ப இயக்கவியலின் முதல் விதி

* ஆற்றல் ஒரு வகையிலிருந்து மற்றொரு வகைக்கு மாற்றக்கூடியது. ஆனால், ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.

என்தால்பி (அ) வெப்பக்கொள்ளவு

* பெரும்பான்மையான வேதிவினைகள் மாறாத அழுத்தத்தில் நிகழ்த்தப்படுகின்றன. மாறாத அழுத்தத்தில் அமைப்பின் வெப்ப மாற்றத்தை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படும் புதிய வெப்ப இயக்கவியல் நிலைச் சார்பு வெப்பக் கொள்ளவு அல்லது என்தால்பி (H) எனப்படும்.

* ஒரு வேதிச்சேர்மத்தின் எரிதல் என்தால்பி மாற்றத்தை பாம் கலோரிமீட்டரின் மூலம் கண்டறியலாம்.

சவ்வூடு பரவல் அழுத்தம்

* சவ்வூடு பரவல் அழுத்தம் எனப்து ஒரு கூறு புகவிடும் சவ்வின் வழியே சவ்வூடு பரவல் நிகழாதவாறு கரைசல் பகுதியில் செலுத்தப்படும் குறைந்த அழுத்தமாகும்.

* ஒரு கரைசல் மற்றொன்றை விட குறைந்த அல்லது அதிக சவ்வூடு பரவல் அழுத்தத்தைப் பெற்றிருந்தால் முறையே ஹைப்போடோனின் அல்லது ஹைப்பர் டானிக் கரைசல் எனப்படும்.

* வெவ்வேறு சேர்மங்களைக் கொண்ட இரு கரைசல்கள் ஒரே வெப்பநிலையில் சமமான சவ்வூடு பரவல் அழுத்தங்களைப் பெற்றிருந்தால் அவை ஐசோடானிக் கரைசல்கள் எனப்படும்.

* சவ்வூடு பரவல் அழுத்தம் தொடர்பான விதிகளில் 1. பாயில் - வாண்ட் ஹாப் விதி 2. சார்லஸ் - வாண்ட் ஹாப் விதி ஆகியன முக்கியமானவை.

* மாறாத வெப்பநிலையில் ஒரு கரைசலின் சவ்வூடு பரவல் அழுத்தமானது கரைசலின் செறிவுக்கு (C) நேர் விகிதத்தில் இருக்கும். அதாவது மாறாத வெப்பநிலையில்  என்பது வோலார் செறிவாகும். இதுவே பாயில் வாண்ட் விதியாகும்.

* செறிவு மாறாமல் இருக்கும்போது, ஒரு கரைசலின் சவ்வூடு பரவல் அழுத்தமானது ( ) வெப்பநிலைக்கு நேர் விகிதத்திலிருக்கும்.

தொங்கல்கள்

* ஒரு பிரிகை ஊடகத்தில் மிதந்து கொண்டிருக்கும் துகள்களைக் கொண்ட கலவை தொங்கல் எனப்படும். உதாரணமாக சுண்ணாம்புத் தூளும் நீரும் கலந்த கலவை தொங்கல் எனப்படும்.

* தொங்கலை வடிகட்டி நீரையும், சுண்ணாம்புத் துகள்களையும் பிரிக்கலாம்.

* தொங்கல் பொதுவாக 1000 nm (1 nm = 10-9 m) அளவுடைய பெரிய துகள்களைப் பெற்றிருக்கும். எனவே தொங்கல் ஒரு பல்படித்தான கலவை ஆகும்.

* நீருடன் களிமண்ணைக் கலந்தால் ஒரு தொங்கல் உண்டாகிறது. தொங்கலின் வழியாக ஒளி கடந்து செல்வதில்லை.

* எண்ணெயும் நீரும் கலப்பதில்லை. எண்ணெய் நீரின் மீது மிதக்கிறது. அக்கலவை வேகமாகக் கலக்கினால் கலங்கிய திரவம் உருவாகிறது. இதுவே பால்மம் ஆகும். இவ்வூடகத்தில் எண்ணெய்த் துளிகள் மிதக்கின்றன.

கூழ்மங்கள்

* கூழ்மங்கள் மிகவும் சிறிய துகள்களைப் பெற்ற தொங்கல்கள் ஆகும். கூழ்மங்களில் உள்ள துகள்கள் சாதாரணக் கண்ணால் பார்க்க முடியாத அளவிற்கு மிகச் சிறியவை. இவை ஒளிக்கற்றையைச் சிதறடிக்கின்றன.

கூழ்மங்கள் அடிப்பரப்பில் வீழ்படிவதில்லை. எ.கா. பால், மை, தயிர், புகை ஆகியன.

* கூழ்மங்களில் உள்ள துகள்களை நுண்ணோக்கி மூலம் மட்டுமே பார்க்கலாம்.

* ஒவ்வொரு கூழ்மத்திற்கும் இரு பகுதிகள் உண்டு 1. பிரிகை நிலைமை எ.கா. பாலில் உள்ள கொழுப்பு, பனியில் உள்ள நீர்த்திவலைகள் ஆகியன. 2. பிரிகை, ஊடகம் எ.கா. பாலில் உள்ள நீர், பனியில் உள்ள காற்று ஆகியன.

* நீர்மக் காற்றுக் கரைசலுக்கு உதாரணம் பனிமூட்டம். திண்மக் காற்றுக் கரைசலுக்கு உதாரணம் புகை நுரைப்புக்கு உதாரணம் சோப்பு நுரை. பால்மத்திற்கு உதாரணம் பால். கரைசலுக்கு உதாரணம் பெயிண்ட் திண்ம நுரைப்புக்கு உதாரணம் இரப்பர் நுரை. களிக்கு உதாரணம் வெண்ணெய் ஆகும்.

* கூழ்மங்களை இரண்டு முறையில் வகைப்படுத்தலாம். முதல்நிலை பிரிநிலை, பிரிகை ஊடகம் இவற்றிற்கு இடையே காணப்படும் கவர்ச்சியைப் பொறுத்ததாகும். இரு நிலைகளுக்கும் இடையே காணப்படும் கவர்ச்சி விசை அதிகமாக காணப்படும் கூழ்மங்களை கரைப்பான் விரும்பும் கூழ்மங்கள் (லையோஃபிலிக் கூழ்மம்) என்று அழைப்பர். உதாரணம் நீரில் கோந்து.

* இரு நிலைகளுக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசை குறைந்து காணப்பட்டால் அத்தகைய கூழ்மங்களுக்கு கரைப்பான் வெறுக்கும் கூழ்மங்கள் அல்லது லையோஃபோபிக் கூழ்மம் என்று பெயர். உதாரணம் கந்தகம் நீரில் கரைந்து கிடைக்கும் கூழ்மம்.

* பிரிநிலை மற்றும் பிரிகை ஊடகத்தின் தன்மையைப் பொறுத்து கூழ்மங்களை 8 வகைகளாகப் பிரிப்பர்.

* வாயுவில் வாயு கூழ்மம் தோன்றுவதில்லை. காரணம் வாயுக்கள் ஒன்றோடொன்று கலந்து உண்மைக் கரைசலையே தோற்றுவிக்கும்.

பிரெளனியன் இயக்கம்

* இராபர்ட் பிரெளன் என்ற அறிஞர் கூழ்மக் கரைசலை ஒரு மீளநுண்ணோக்கியின் வழியாக காணுகையில் அத்துகள்கள் அங்குமிங்கும் தாறுமாறாக ஒழுங்கின்றித் திரிந்து கொண்டிருப்பதைக் கண்டறிந்தார். துகள்களின் இந்த இயக்கம் பிரெளனியன் இயக்கம் எனப்படும்.

கூழ்மங்களின் பயன்கள்

* பொதுவாக மருந்து தயாரிப்புகளில் கூழ்மக் கரைசல்கள் பயன்படுகின்றன. ஜெலட்டினால் நிலைப்படுத்தப்பட்ட வெள்ளிக் கூழ்மக் கரைசல் கண்நோய் மருந்தாகவும், கூழ்மத் தங்கமும், கூழ்ம கால்சியமும் டானிக்குகளாகவும் பயன்படுகின்றன.

* கந்தகக் கூழ்மம் நுண்ணுயிர் பூச்சிக்கொல்லியாகவும், மெக்னீசியா பால்மம் வயிறு சார்ந்த தொந்தரவுகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

அமிலங்கள்

* அமிலம் என்ற வார்த்தை அசிடஸ் என்ற இலத்தீன் மொழிச் சொல்லிருந்து எடுத்தாளப் பட்டுள்ளது. இச்சொல்லின் பொருள் புளிப்பு என்பதாகும்.

* புளிப்புச் சுவையுடைய தாவரங்கள் மற்றும் தாதுப்பொருட்களிலிருந்து அமிலங்கள் பெறப்படுகின்றன.

* நீரில் கரைக்கப்படும்பொழுது ஹைட்ரஜன் அயனிகளைக் கொடுக்கும் சேர்மம் அமிலம் எனப்படும். அல்லது அமிலம் என்பது இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ஹைட்ரஜனைக் கொண்டுள்ள ஒரு பொருள் ாகும்.

* இருப்பினும் ஹைட்ரஜன் உள்ள எல்லாச் சேர்மங்கலும் அமிலங்கள் அல்ல. உதாரணமாக மீத்தேன் (CH4), அம்மோனியா (NH3), மற்றும் குளுக்கோஸ்  (C6 H12 O6) ஆகியவை அமிலங்கள் அல்ல.

* தாவரங்களிலிருந்தும் விலங்குகளிலிருந்தும் பெறப்படும் அமிலங்களின் கரிம அமிலங்கள் (Organic Acids) எனப்படும். எ.கா. சிட்ரிக் அமிலம், பார்மிக் அமிலம் ஆகியன.

* தாதுப்பொருட்களிலிருந்து பெறப்படும் அமிலங்கள் கனிம அமிலங்கள் (Inorganic Acids) எனப்படும். எ.கா.ஹைட்ரோகுளோரிக் ்மிலம், சல்பூரிக் அமிலம் ஆகியன.

* உயிரற்ற கனிமத் தாதுக்களிலிருந்து கிடைக்கப் பொறுபவை கனிமச் சேர்மங்கள் ஆகும். எ.கா. சாதாரண உப்பு, தாமிர சல்பேட், கால்சியம் கார்பனேட் ஆகியன.

* தாவரம், உயிரனம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கப் பெறுபவை கரிமச் சேர்மங்கள் ஆகும். எ.கா.சர்க்கரை, யூரியா, மெத்தனால் ஆகியன.

* ஒரு பொதுவான வாய்பாட்டால் தொடர்புபடுத்திக் குறிக்கப்படும் ஒரு தொகுதி அல்லது ஒரு குழுச் சேர்மங்களுக்கு ஓரின வரிசை என்று பெயர். எ.கா. ஆல்கேன் வரிசை. ஆல்கஹால் வரிசை ஆகியன.

* ஒரே மூலக்கூறு வாய்ப்பாடு உடைய சேர்மங்கள் வேறுபட்ட அமைப்பு வாய்ப்பாடும், வேறுபட்ட பண்புகளையும் பெற்றிருப்பதே மாற்றியம் அல்லது ஐசோமெரிசம் எனப்படும்.

* மாற்றியங்கள் இரு வகைப்படும் அவை கட்டுமான மாற்றியம் மற்றும் முப்பரிமான மாற்றியம் ஆகியன.

தினசரி வாழ்வில் பயன்படும் சில அமிலங்கள்

* சிட்ரிக் அமிலம் - சிட்ரஸ் பழங்கள் (எலுமிச்சை, ஆரஞ்சு)

* லாக்டிக் அமிலம் - புளித்த பால்

* பார்மிக் அமிலம் - எறும்பு மற்றும் தேனீக்களின் கொடுக்கு.

* பியூட்டிரிக் அமிலம் - நாளான அல்லது கெட்டுப்போன வெண்ணெய்

* டார்டாரிக் அமிலம் - புளி, திராட்சை, ஆப்பிள்.

* அசிட்டிக் அமிலம் - வினிகர் (காடி)

* மாலிக் அமிலம் - ஆப்பிள்

* யூரிக் அமிலம் - சிறுநீர்

* ஆக்ஸாலிக் அமிலம் - தக்காளி

* ஸ்டீயரிக் அமிலம் - கொழுப்புகள்

* கோலிக் அமிலம் - பித்த நீர்

* கார்பாலிக் அமிலம் - சோடா நீர்

* ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் பொதுபெபெயர் மியூரியாட்டிக் அமிலம் (HCL) ஆகும்.

* சல்பூரிக் அமிலத்தின் பொதுப் பெயர் விட்ரியால் எண்ணெய் அல்லது வேதிப்பொருட்களின் அரசன் (H2SO4) ஆகும்.

* நைட்ரிக் அமிலத்தின் பொதுப்பெயர் அக்குவா போர்ட்டிஸ் (HNO3) ஆகும்.

* கனிம அமிலங்கள் நிறமற்ற நீர்மங்கள் சில நேரங்களில் கந்தக அமிலம் இலேசான பழுப்பு நிறத்திலும், அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலம் இலேசான மஞ்சள் நிறத்திலும் காணப்படுவதற்குக் காரணம் அவற்றில் உள்ள மாசுக்கள் ஆகும்.

* கனிம அமிலங்கள் மிகுந்த அரிக்கும் தன்மை கொண்டவை.

* சில கரிம அமிலங்கள் நிறமற்ற வெண்மையான திண்மங்களாகும். எ.கா. பென்சாயிக் அமிலம்.

* அமிலங்கள் புளிப்புச் சுவையுடையவை. அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை சிவப்பு நிறமாக மாற்றும். அமிலங்கள் ஃபினாப்தலின் நிறங்காட்டியுடன் எவ்வித நிறமும் தருவதில்லை. அமிலங்கள் மீத்தைல் ஆரஞ்சு நிறங்காட்டியுடன் இளஞ்சிவப்பு நிறம் தருகின்றன.

* அமிலங்கள் காரங்களுடன் (ஆல்கலிகள்) வினைப்பட்டு உப்பும் நீரும் உருவாகிறது. இவ்வினை நடுநிலையாக்கல் வினை என்கிறோம்.

காரங்கள்

* நீர்மக் கரைசல்களில் ஹைட்ராக்ஸில் அயனிகளைத் தரவல்ல உலோக ஆக்சைடு மற்றும் ஹைட்ராக்சைடு சேர்மங்கள் காரங்கள் எனப்படும். எ.கா. சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH), பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (KOH), கால்சியம் ஹைட்ராக்சைடு (Ca (OH)2,  கால்சியம் ஆக்சைடு (CaO), சோடியம் ஆக்சைடு (Na2O) ஆகியன.

* நீரில் கரையும் காரங்கள் ஆல்கலிகள் எனப்படும். எ.கா. NaOH, KOH ஆகியன. ஆல்கலி என்ற சொல் தாவர சாம்பல் என்று பொருள்படும்.

* தாவரங்களின் சாம்பலில் பெரும்பகுதி சோடியம் கார்பனேட்டும், பொட்டாசியம் கார்பனேட்டும் ஆகும்.

* எல்லா ஆல்கலிகளும் காரங்கள், ஆனால் எல்லா காரங்களும் ஆல்கலிகள் அல்ல.

* காரங்கள் நிறமற்றவை, மணமற்றவை, ஆனால் இரும்பு மற்றும் தாமிர ஹைட்ராக்சைடுகள் குறிப்பிட்ட நிறத்தைப் பெற்றிருக்கும். காரங்கள் ஒருவித கசப்பான சுவையுடையவை.

* காரங்கள் சிவப்பு லிட்மஸ் தாளை நீலநிறமாக மாற்றும் காரங்கள் மீத்தைல் ஆரஞ்சுடன் மஞ்சள் நிறத்தைத் தருகின்றன. காரங்கள் பினாப்தலினுடன் இளஞ்சிவப்பு நிறத்தைத் தருகின்றன.

* காரங்கள் ஒரு சிறந்த மின்கடத்தி ஆகும். சோடியம், பொட்டாசியம், கால்சியம், பேரியம் ஹைட்ராக்சைடுகள் தவிர பெரும்பான்மையான காரங்கள் நீரில் கரைவதில்லை.

* காரங்கள் அமிலங்களுடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் உருவாக்குகின்றன. இவ்வினை நடுநிலையாக்கல் வினையாகும்.

* காரங்கள் அலுமினியம், ஜிங்க் (துத்தநாகம்), டின் (வெள்ளீயம்) போன்ற உலோகங்கலுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகின்றன.

* அரிக்கும் தன்மையை அதிகமாகப் பெற்றுள்ளமையால் சோடியம் ஹைட்ராக்சைடு எரிசோடா என்றும், பொட்டாசியம் ஹைட்ராக்சைடு எரி பொட்டாஷ் எனவும் அழைக்கப்படுகின்றன.

அர்ஹீனியஸ் கொள்கை

* அர்ஹீனியஸ் கொள்கைப்படி, அமிலம் என்பது நீர்க் கரைசலில் ஹைட்ரஜன் அயனிகளைக் கொடுக்கக் கூடிய பொருள் காரம் என்பது நீர்க்கரைசலில் ஹைட்ராக்சைடு அயனிகளைக் கொடுக்கக் குடிய பொருளென்றும் வரையறுக்கப்படுகின்றன.

லெளரி-பிரான்ஸ்டெட் கொள்கை

* இக்கொள்கைப்படி அமிலம் என்பது புரோட்டாணை (ஹைட்ரஜன் அயனியை) கொடுக்கக் குடிய பொருள். காரம் என்பது புரோட்டானை ஏற்கக் கூடிய பொருள்.

PH  அளவீடு

* ஹைட்ரஜன் அயனிகளின் செறிவைப் பொறுத்து அமிலத் தன்மை அல்லது காரத்தன்மை அறியப்படுகிறது. PH என்பது அதன் ஹைட்ரஜன் அயனிச் செறிவின் பத்தை அடிப்படையாகக் கொண்ட மடக்கையின் எதிர்மதிப்பு ஆகும். இது மோல்/லிட்டர் என்ற அலகில் குறிக்கப்படுகிறது. PH = -log10 (H+)

* சில கரைசல்களின் PH மதிப்புக்கள் கீழே தரப்பட்டுள்ளன. இரத்தம் (7.3 - 7.5), உமிழ்நீர் (6.5 - 7.5), சிறுநீர் (5.5 - 7.5) காபி (4.5 - 5.5), இரைப்பை நீர் (1.0 - 3.0), குளிர்பானங்கள் (3.00), பால் (6.5), கடல் நீர் (8.5) ஆகும்.

உப்புக்கள்

* பொதுவாக ஒரு அமிலமும், காரமும் நடுநிலையாக்கல் வினையில் ஈபோது உருவாகும் அயனிச் சேர்மங்களே உப்புக்கள் ஆகும். அம்மோனியம் உப்புக்கள், உலோக குளோரைடுகள், நைட்ரேட்டுகள், பால்பேட்கள், சல்பேட்கள், கார்பனேட்டுகள் ஆகியவை உப்புக்கள் ஆகும்.

* சோடியம் குளோரைடு, பொட்டாசியம் குளோரைடு, சோடியம் சல்பேட் ஆகியவை எளிய உப்புக்கள் ஆகும்.

* சோடியம் பை சல்பேட், பொட்டாசியம் பை சல்பேட், சோடியம் பை கார்பனேட் ஆகியன அமில உப்புக்களுக்கு உதாரணங்கள்.

* கார மக்னீசியம் குளோரைடு, காரலெட் குளோரைடு ஆகியவை கார உப்புக்களுக்கு உதாரணங்கள்.

* பொட்டாஷ் படிகாரம், மார் உப்பு ஆகியன இரட்டை உப்புகளுக்கு உதாரணங்கள்.

* சோடியம், பொட்டாசியம் கார்பனேட், சலவைத் தூள் ஆகியவை கலப்பின உப்புக்கள் ஆகும்.

* பொட்டாசியம் பெரோ சயனைடு, சோடியம் ஜிங்க் சயனைடு ஆகியன அணைவு உப்புக்கள் ஆகும்.

* அமிலங்களும், காரங்களும் ஒன்றோடொன்று வினைபுரிந்து உப்பையும், நீரையும் உருவாக்கும் வினைக்கு நடுநிலைக்கல் என்று பெயர்.

தினசரி வாழ்வில் பயன்படும் உப்புக்கள்

* சாதாரண உப்பு - சோடியம் குளோரைடு (NaCl)

* சலவைச் சோடா - நீரேற்றப்பட்ட சோடியம் கார்பனேட் (Na2 CO3 10H2O)

* ரொட்டிச் சோடா - சோடியம் பை கார்பனேட் (NaHCO3)

* சோடா சாம்பல் - நீரற்ற சோடியம் கார்பனேட் (Na2CO3)

* சால் அம்மோனியாக் - அம்மோனியம் குளோரைடு (Na4 Cl)

* ப்ளீச்சிங் பவுடர் (சலவைத் தூள்) - கால்சியம் ஆக்சிகுளோரைடு (CaOCl2)

* சுண்ணாம்புக்கல் - கால்சியம் கார்பனேட் (CaCO3)

* நைட்டர் - பொட்டாசியம் நைட்ரேட் (KNO3)

* சிலிசால்ட் பீட்டர் - சோடியம் நைட்ரேட் (NaNO3)

* ஹைப்போ - சோடியம் தயோசல்பேட் (Na2S2O3)

* முகரும் உப்பு - அம்மோனியம் கார்பனேட் (NH4)2 CO3

* எப்சம் உப்பு - நீரேற்றப்பட்ட மெக்னீசியம் சல்பேட் (MgSO4 7H2O)

* பாரிஸ் சாந்து - நீரேற்றப்பட்ட கால்சியம் சல்பேட் (CaSO4 2H2O)

* வெள்ளை விட்ரியால் (வெண் துத்தம்) - நீரேற்றப்பட்ட ஜிங்க் சல்பேட் (ZnSO4 7H2O)

* நீல விட்ரியால் (மயில் துத்தம்) - நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட் (CuSO4 5H2O)

* பச்சை விட்ரியால் (பச்சை துத்தம்) - நீரேற்றப்பட்ட பெர்ரஸ் சல்பேட் (FeSO4 7H2O)

* ஒரு அமிலமும் காரமும் வினைபுரிந்து முற்றிலுமாக நடுநிலையாக்கல் நடைபெறுவதால் எளிய உப்பு கிடைக்கிறது. இவ்வாறு கிடைக்கும் எளிய * உப்புக்களில் இடப்பெயர்ச்சி அடையக் கூடிய ஹைட்ரஜன் அயனிகள் இருக்காது.

* சோடியம், பொட்டாசியம் போன்ற உலோகங்களின் உப்புக்கள் நிறமற்றவை. எ.கா. NaCl. KCl

* தாமிரம் (காப்பர்), இரும்பு (அயர்ன்), குரோமியம் போன்ற உலோகங்களின் உப்புக்கள் நிறமுடையவை. எ.கா. காப்பர் சல்பேட் (நீலநிறம்), பொட்டாசியம் * டைக்குரோமேட், (ஆரஞ்சு - சிவப்பு நிறம்), பெர்ரஸ் சல்பேட் (இளம்பச்சை நிறம்)

* பொதுவாக உலோக உப்புகள் நீரில் கரையும் திறன் உடையவை. ஆனால் சில உலோகங்களின் கார்பனேட்டுகள், ஆக்சைடுகள், சல்பேட்டுகள் நீரில் கரைவதில்லை. எ.கா. கால்சியம் கார்பனேட்

* பெரும்பான்மையான உப்புகள் அதிக உருகுநிலையும், கொதிநிலையும் உடைய திண்மங்கள் ஆகும்.

* உலோக உப்புக்களின் நீர்மக் கரைசல்கள் சிறந்த மின் கடத்திகள் ஆகும். எனவே உப்புக் கரைசல்கள் மின்பகுளிகள் என அழைக்கப்படுகின்ரன.

* சில உப்புக்களில் அவற்றின் ஒவ்வொரு மூலக்கூறுடனும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட நீர் மூலக்கூறுகள் வலுவின்றி பிணைக்கப்பட்டுள்ளன. அத்தகைய உப்புகளுக்கு நீரேற்றப்பட்ட உப்புகள் என்று பெயர்.

* நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டை நீலத் துத்தம் அல்லது மயில் துத்தம் என்பர். இது நீல நிறப் படிக உப்பாக இருக்கும்.

இணையத்தில் இணைந்திருங்கள். தொடர்ச்சி நாளை பார்ப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com