
சுவாமிஜியைப் பழமைவாதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதுபோலவே அவரது மேலைநாட்டுச் சீடர்களையும் மற்ற மேலை நாட்டினர் ஏற்றுக் கொள்ளவில்லை. என்னதான் சுவாமிஜி உங்களை ஏற்றுக் கொண்டாலும் அவர் உங்களை மரியாதையுடன் நடத்தவில்லை. தலைப்பானை அணியாமல் உங்களிடம் வந்து பேசிக் கொண்டிருப்பதிலிருந்தே இது உங்களுக்குப் புரியவில்லையா?' என்று அவர்கள் கேட்டனர். 'இரண்டு நாட்டினரிடையேயும் இருந்த முட்டாள் தனங்களைக் கண்டு எங்களுக்குள் சிரித்துக் கொண்டோம்' என்று எழுதுகிறார் மிஸ் மெக்லவுட்.
பாலமுல்லாவிலிருந்து ஜீலம் நதி வழியாகப் படகு வீடுகளில் அவர்கள் ஸ்ரீநகருக்குப் புறப்பட்டனர். கண்கொள்ளாக் காட்சிகள் நிறைந்த ஒரு பயணமாக ஒரு கிராமத்தை அவர்கள் கடந்து செல்ல நேர்ந்தது. சுவாமிஜி அவர்களை அந்தக் கிராமத்தினுள் அழைத்துச் சென்றார். அங்கே முஸ்லிம் பெண் ஒருத்தியை அவர்களுக்கு அறிமுகம் செய்தார். அந்தப் பெண் கம்பளி நெய்துகொண்டிருந்தாள். மருமகள்களும் பேரக் குழந்தைகளும் அவளுக்கு உதவினர். சென்ற வருடம் சுவாமிஜி காஷ்மீர் வந்திருந்தபோது அவளைச் சந்தித்திருந்தார். அப்போது நடந்த நிகழ்ச்சியை அவர் நினைவுகூர்ந்தார்.
அன்று அவளிடம் தாகத்திற்குத் தண்ணீர் கேட்டார் அவர். அவளும் அவளிடம் அம்மா, நீ எந்த மதத்தைச் சார்ந்தவள்?' என்று கேட்டார். அவளிடம் ஒரு பெருமிதம் தென்பட்டது. கம்பீரமான குரலில், 'அல்லாவின் கருணையால் நான் ஒரு முஸ்லிம் என்று பதில் அளித்தாள் அவள். ஒரு முஸ்லிமாக இருப்பதில் அவளுக்கு இருந்த பெருமை சுவாமிஜியை மிகவும் கவர்ந்தது. ஒவ்வோர் இந்தியனிடமும் இந்தப் பெருமை, தனது மதத்தில் பெருமை, தனது பாரம்பரியத்தில் பெருமை, தனது கலாச்சாரத்தில் பெருமை, தனது முன்னோர்களில் பெருமை இருக்குமானால் இந்தியாவின் தலைவிதியே வேறுவிதமாக இருந்திருக்கும் என்று ஒருவேளை அவரது உள்ளம் நினைத்திருக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.