மும்பையில் சுவாமிஜி....

சுவாமிஜியின் மேலைநாட்டுப் பயணங்கள் பாரிஸ் மற்றும் எகிப்துடன் நிறைவுற்றது.
மும்பையில் சுவாமிஜி....
Published on
Updated on
1 min read

சுவாமிஜியின் மேலைநாட்டுப் பயணங்கள் பாரிஸ் மற்றும் எகிப்துடன் நிறைவுற்றது. கெய்ரோவிலிருந்து 1900 நவம்பர் 26ம் நாள் தாய் நாட்டிற்குப் புறப்பட்ட சுவாமிஜி பயணம் செய்த கப்பல் பம்பாயை டிசம்பர் 6 அல்லது 7ம் நாள் அடைந்தது. தாம் வருவதுபற்றி சுவாமிஜி இந்தியாவில் யாருக்கும் தெரிவிக்கவில்லை. எனவே சுவாமிஜியை வரவேற்க யாரும் செல்லவில்லை. பம்பாய் துறைமுகத்திலிருந்து தமது ஐரோப்பிய உடையிலேயே ரயில் நிலயம் சென்று பாம்பே-ஹௌரா விரைவு ரயிலுக்காகக் காத்திருந்தார் சுவாமிஜி. சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் சுவாமிஜியை அங்கே அடையாளம் கண்டு கொண்டார். அவர் சுவாமிஜியின் சொற்பொழிவுகளைச் சென்னையில் கேட்டவர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, ரயில் வரும்வரை சுவாமிஜியுடன் பேசிக் கொண்டிருந்தார் அவர்.

டிசம்பர் 9 இரவு. சுவாமிஜி வருவது பேலூர் மடத்திலும் யாருக்கும் தெரியாது. சுவாமிஜி மடத்தை அடைந்தபோது இரவு உணவிற்கான மணி அடித்துவிட்டிருந்தது, துறவியர் இரவு உணவிற்குச் சென்றுவிட்டிருந்தார்கள். சாப்பிட்டுக் கொண்டிருந்த அவர்களிடம் வேலைக்காரன் ஒருவன் ஓடிப்போய், ஐரோப்பியர் ஒருவர் வந்து கொண்டிருக்கிறார். அவர் முக்கிய வாசலுக்கு அருகிலுள்ள சுவரில் ஏறிக் குதித்து, மைதானத்தைக் கடந்து, மடத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் என்றான். ஓரிரு துறவியர் வெளியில் வந்து பார்த்தனர். அவர்களால் நம்பவே முடியவில்லை. ஓ சுவாமிஜி வந்துவிட்டார், சுவாமிஜி வந்துவிட்டார் என்று அவர்கள் கூக்குரலிட்டனர். அதைக் கேட்டு உள்ளே இருந்த துறவியர் வெளியில் ஓடி வந்தார்கள். எங்கும் மகிழ்ச்சி ஆரவாரமும், 'சுவாமிஜி, சுவாமிஜி" என்ற ஒலிகளும் நிறைந்தன. சுவாமிஜி அவர்களிடம், தாமதமாக வந்தால் எங்கே சாப்பிட எதுவும் கிடைக்காமல் போய்விடுமோ என்றுதான் சுவரேறிக் குதித்து ஓடி வந்தேன்' என்றார் தமக்கே உரியநகைச்சுவை சிறிதும் குறையாமல்! பின்னர் துறவியர் அவரை அழைத்துச் சென்று, அவருக்குப் பிடித்த கிச்சுடி பரிமாறினர்.

சுவாமிஜி கல்கத்தாவைத் தொட்டாரோ இல்லையோ ஆஸ்த்மா அவரிடம் ஒட்டிக் கொண்டது. அதனால் மிகவும் அவதிப்பட்டார் அவர். இரவு வேளைகளில் ஜன்னி காணும் அளவிற்கு நோய் சிரமம் கொடுத்தது. சுவாமிஜி அதைப் பற்றி கவலைப்படவில்லை ஒருவேளை, கவலைப்பட நேரமும் இல்லை! அடிக்கடி கல்கத்தா சென்றார், சில இரவுகள் பலராம் போஸின் வீட்டில் தங்கினார். தமது தாய், உறவினர்கள், நண்பர்கள் என்று பலரைச் சென்று கண்டார். மற்ற நேரங்களில் பொதுவாக அவரது வாழ்க்கை மடத்திலேயே கழிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com