
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடருவாரா? என்ற கேள்வி தற்போது காங்கிரஸாரிடையே எழுந்துள்ளது.
கடந்த வாரம் இளங்கோவனுக்கு எதிராக அணி திரண்ட அதிருப்தி தலைவர்கள் சிலர், அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கடந்த சனிக்கிழமை சந்தித்து புகார் தெரிவித்தனர்.
சோனியாவுடன் சந்திப்பு: இதைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் இளங்கோவனுக்கு எதிரான அதிருப்தி தலைவர்கள் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சந்தித்தனர். சுமார் 45 நிமிடங்கள் இச்சந்திப்பு நடந்தது.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், கே.வி. தங்கபாலு, முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் குமரி அனந்தன்,
எம். கிருஷ்ணசாமி, தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கோபிநாத், இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவர் காளன், முன்னாள் எம்பி கே.எஸ். அழகிரி, முன்னாள் எம்எல்ஏ எச். வசந்த குமார், ஆர். தாமோதரன், வள்ளல் பெருமான், டி.என். முருகானந்தன் ஆகியோர் இச்சந்திப்பின் போது உடனிருந்தனர்.
இளங்கோவனின் செயல்பாடு குறித்து முதலில் தங்கபாலு, அவரைத் தொடர்ந்து வந்தவாசி கிருஷ்ணசாமி, கோபிநாத் உள்ளிட்டோரும் பேசினர். சிதம்பரம் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனமாக இருந்தார். ஒட்டுமொத்தக் குழுவினரின் பேச்சும், நோக்கமும் "இளங்கோவனை மாற்றியே தீர வேண்டும் என்பதாக இருந்தது' என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
துரோகம் இழைத்தார் இளங்கோவன்: இச்சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கே.வி. தங்கபாலு கூறியதாவது: "யாரையும் மதிக்காமல் சமூக அக்கறையுடன் சிந்திக்காமல் மனம் போன போக்கில் செயல்படுவதையும், பேசுவதையும் இளங்கோவன் வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒரு காலத்தில் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை இழிவாக விமர்சித்து பாடியவர் கோவன். காங்கிரஸூக்கு பாடை கட்ட வேண்டும் என்று பிரசார முழக்கமிட்டவர். அவரைப் போன்ற நபர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் போது அதை எதிர்த்தது மட்டுமன்றி, கோவனுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்துவதாகவும் இளங்கோவன் அறிவித்துள்ளார். உண்மையில் காங்கிரஸ் தலைவராக இருக்கவே அவருக்கு அருகதை இல்லை. காங்கிரஸின் நெறிகளையும் கொள்கைகளையும் கடைப்பிடிக்காமல், கட்சிக்கு அழியாத பழியையும் துரோகத்தையும் இளங்கோவன் இழைத்து வருகிறார். அவரை இனி நாங்கள் கட்சித் தலைவராக ஏற்க முடியாது என்பதை காங்கிரஸ் தலைமையிடம் திட்டவட்டமாகக் கூறினோம்' என்றார் தங்கபாலு.
அவசர அழைப்பு-தில்லியில் இளங்கோவன்: இதற்கிடையே, காங்கிரஸ் மேலிட அழைப்பின்பேரில் தில்லிக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திங்கள்கிழமை மாலை வந்தார். அவர் சோனியா காந்தியை செவ்வாய் அல்லது புதன்கிழமை சந்தித்து தனது நிலைப்பாடு தொடர்பாக விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத் தலைமைக்கு எதிராக புகார் தெரிவிக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், அது பற்றி ஊடகங்களிடம் பேசுவதைத் தவிர்ப்பது வழக்கம். ஆனால், முதல்முறையாக இளங்கோவன் மீது புகார் தெரிவித்தவுடன், அந்த விவரத்தை செய்தியாளர்களிடம் தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் விவரித்தனர். இந்த நெருக்கடியைத் தொடர்ந்து, இளங்கோவன் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடருவாரா என்ற கேள்வி காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.