
அடுத்த தலைப்பு கவிதைமணி பகுதிக்கு தொடர்ந்து உங்கள் கவிதைகளை அனுப்பும் கவிஞர்களுக்கு நன்றி! அடுத்த வாரத்திற்கான தலைப்பு ‘சினிமா’. உங்கள் கவிதைகளை askdinamani@dinamani.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். ’தீபாவளி’ என்ற தலைப்பில் சிறப்பு கவிதையும் வரவேற்கப்படுகின்றன. |
1) ஆயிரம் பொய் சொல்லி….
எந்த நேரத்தில்
இதை ஆயிரங்காலத்துப் பயிர்
என்றார்களோ......
விதைவிதைப்பதை விட
களையெடுப்பதே அதிகமாகிவிட்டது.
மனதை விடுத்து
உடலின் தேவைகள்
அதிகமானதால்
மணம் வீச வேண்டிய மலர்கள்
வாடி துர்நாற்றமடிக்கின்றன.
ஆயிரம் பொய் சொல்லி
அழகாய்ச் செய்யலாம் எனச்
சொன்னாலும் சொன்னார்கள்
அத்தனையும் பொய்யாயிற்று.
காதல் கடிமணம்
முதுமைவரை கூடவரும்......
காலைவரை கூட
கூட வராத மனங்கள்
காலை வாரி விடுகின்றன.
அவசர யுகம்
உள்ளங்கைகளிலேயே
உறவாடி ஓடிவிடுகின்றன...
பொருத்தங்கள் பார்க்காது
சேர்ந்து வாழ எண்ணிச்
சேராமலேயே மனங்கள்.....
சிரமதசையில் தான்
திருமணங்கள்.
குடும்ப நீதிமன்றங்கள் தாம்
தீர்மானிக்கின்றன
வாரிசுகளின் வாழ்க்கையை
தந்தையிடமா....தாயிடமா என.
பாவம் குழந்தைகள்.
உடனடித் தேவை இங்கே
ஒட்டி உறவாடும்
கூட்டுக்குடும்பங்களே....
திருமணங்களின்
ஆயுளை நீட்டிக்கும்!
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.
2) திருமணம் எனும் நறுமணம்
சிறகடிக்கும் இளம் ஆணின் பெண்ணின்
சிருங்கார உணர்வுக்கு வடிகாலாய்
சமூகம் செய்து வைத்தது ஒரு வைபவம்
அன்பு மணம் கமழும் திருமணம்
அனைத்தும் மறந்துவிடும் அதிசய கணம்
இரு மனம் சேர்ந்தே ஆகிவிடும் ஒரு மனம்
இனி வாழ்வில் எதுவும் சேர்க்காது கனம்
வளமும் வனப்பும் சேர்ந்திடும் தினம் தினம்
வாழ்வே ஆகிவிடும் ஒரு பூங்காவனம்
-கவிஞர் ஏகாந்தன், டெல்லி
3) நூறாண்டு காலம் வாழ்க!
ஒன்றாய் இணைந்தது
இருமனங்கள் !
முக்கனியின் இனிமையும் மறந்தது
நான்கு கண்களின் இணை பார்வையிலே
ஐங்கரத்தானை துதித்து
ஆறு திக்கு உறவுகளை அழைத்து
ஏழு வண்ணங்களில் அலங்கரித்து
எட்டு எழுத்துக்களாம் சுபமுகூர்த்தம் நடந்திட
ஒன்பது கிரகக்காரர்கள் அனுகூலமாய்
பத்து பெருக்கல் பத்து ஆண்டுகள்
நிறைவாய் வாழியவே
-சா. சந்திரசேகர், கோவை
4) இரவல் வாழ்க்கை
படித்தது போதும் கால் கட்டு போடுவோம்
தாத்தாவின் ஆலோசனை அரங்கத்தில்...
கவர்ண்மெண்ட் மாப்பிள்ளை விட
சாஃப்ட்வேர் இஞ்சினியர் தான் உசிதம்
அப்பாவின் ஆதிக்கத்தில்.....
உள்ளூர் வேண்டாம் வெளிநாடு பார்ப்போம்
அண்ணணின் அலட்டலில்...
அம்மி மிதித்து அருந்ததி பார்க்க வேண்டாம்
ஸ்டார் ஹோட்டலில் வரவேற்பு போதுமே..
வங்கி கணக்கில் சில லட்சங்கள் போதும்
மாமனாரின் எளிமையில்?!.....
மடிசார் வேண்டாம் சோளி போட்டுக்கோ
நாத்தனாரின் பெருந்தன்மையில்....
டயட்டை கடைபிடி இல்லையேல்
பெருத்து விடுவாய் - கையில் எடுத்த
பாதுஷாவை நாசுக்காய் பிடுங்கிய
மாமியாரின் கரிசனத்தில்...
முதலிரவில் மாத்திரை தந்து
இப்போது வேண்டாமே குழந்தைப் பேறு
சிட்டிஸன்ஷிப் கிடைக்கட்டும்
பிறகு பார்க்கலாம்
புதுக் கணவனின் புத்திசாலித் தனத்தில்...
இதில் எங்கே தொடங்கியது?.
"என் இயல்பை மறந்த இரவல் வாழ்க்கை"
-ஹேமா பாலாஜி, சென்னை
5) இரு மனம்
இருமனம் இணைந்ததை
இருமனச் சொந்தங்கள்
ஊருக்கே அறிவித்தல்
திருமணம்
அன்பெனும் பெருவெளியில்
அச்சங்கள் ஏதுமின்றி
ஈருடல் தொலைதல்
திருமணம்
தாயாகிக் கனியவும்
தந்தையாகி முதிரவும்
ஈருயிர் தயாராதல்
திருமணம்
ஒருவர் குறையை
இன்னொருவர் அறிந்து
குறைக்க முயலுதல்
திருமணம்
ஒருவர் நிறையை
இன்னொருவர் மதித்து
கூட்ட நினைத்தல்
திருமணம்
ஒருவர் அருமையை
இன்னொருவர் புரிந்து
சேர்ந்து வாழ்தல்
திருமணம்
ஒருவர் வெறுமையை
இன்னொருவர் உணர்ந்து
இட்டு நிரப்புதல்
திருமணம்
ஒருவர் சோகங்கண்டு
இன்னொருவர் கண்கள்
கண்ணீர் உகுத்தல்
திருமணம்
ஒருவர் இன்பங்கண்டு
இன்னொருவர் இதழ்கள்
புன்னகை மிகுத்தல்
திருமணம்
தோற்றம் பலநூறு
மாற்றம் கண்டாலும்
அன்பைப் பொழிதல்
திருமணம்
உயிர் இருக்கையில்
இன்னோர் உயிரை
இரவலாய்ப் பெறுதல்
திருமணம்
இதயம் இரண்டாகி
விட்டுக் கொடுத்தலில்
இன்பம் காணுதல்
திருமணம்
வயது முதிர்ந்தாலும்
ஒருவர் மீதொருவர்
பைத்தியமாய் இருத்தல்
திருமணம்
நீ இன்னொருவர்
சொந்தமானாலும் நீ
எப்போதும் நீயாயிருத்தல்
திருமணம்
-நிரஞ்சன் பாரதி, 9884839158
6) பெற்ற மனம்
பெண்ணின் மணமென்னும் போதினிலே – அந்தப்
பெற்றோரின் உள்ளம் கலங்குவதேன்?
கண்ணின் மணியாய் வளர்ந்தவளோ – தாலி
கட்டி யவனுடன் செல்வதனால்.
மைந்தன் திருமணம் ஆனபின்பும் – தாய்
தந்தையர் நெஞ்சம் கலங்குவதேன்?
மந்திரம் போட்டவள் சொற்படியே – பிள்ளை
வாழ்ந்திடச் செல்லும் தனிக்குடியால்.
உள்ளம் இரண்டையும் ஒன்றிணைக்கும் – இந்த
உன்னதக் கல்யாண தீபவொளி
தள்ளாடும் பெற்றோரை ஆழ்த்திடுமோ – ஒரு
தாபத் தனிமை இருட்டினிலே ?
-பசுபதி, கனடா
7) கணினி யுகம்
உறவுகள் பல உலகினில் உண்டு !
போற்றுதலுக்குரியவவை அவையாவுமெனினும்
சந்ததிகள் கிளை போல் பரவி உறவுகள் பெருகுவதற்கு
வித்தாவதால் திருமண உறவே முதன்மையானது !
பார்வை புலன்களுக்கும் தவறான
எண்ணங்களுக்கும் திரையிடுவதுடன்,
ஒருவர் மற்றவருக்கு ஆடையாவதால்
திருமண உறவே புனிதமானது !
கணினி யுகத்தில் நாகரிக வளர்ச்சியில்
திருமணம் எனும் சொல்லே அகராதியுடன் நின்று விடுமோ?
நொடியில் "வேண்டாம் " என்ற முடிவு வேண்டாமே
பொறுமையே இனிமையான இல் வீட்டின் சாவி !
நிலையா மனதின் இச்சையால் அறிவு மயங்காது
அறிவின் ஆணைப்படி நடந்தால் வாழ்வு செழிக்கும் !
கடுந் தழல் கதிரவனும், குளிர் மதியும் ஒன்றையொன்று
தொடராவிட்டால் பகலேது ? இரவேது ?
எதிரெதிர் துருவங்களே எளிதில் இணையும் !
வேறுபாடுகளின்றி வாழ்வில் இனிமையேது ?
மனங்கள் வேறுபடினும் வெட்டி விடாமல்
ஒட்டி வாழ்ந்தால் ஒன்று படும் வாழ்வு !
விடையே இல்லாத கேள்வியும் இல்லை,
தீர்வே இல்லாத பிரச்சினைகளும் இல்லை !
சருகு போல் உயிர் உதிருமுன் விட்டுச் செல்லலாம்
நன் மக்களை, எடுத்துச் செல்லலாம் நல்லறங்களை! !
-ம. அஹமது நவரோஸ் பேகம் , புரசைவாக்கம், சென்னை
8) இதயங்களை அலங்கரியுங்கள்!
ஊரார் திருமணங்களில்
ஓரமாக ஒதுங்கியே இருக்கிறார்கள்
வயதையும் இளமையையும்
தொலைத்த
முதிர்கன்னிகள்!
வெளியில்
விழும் எச்சிலைகளின்
மிச்சம்
மீதிகளின் சுவையுணர
மண்டபத்தின் பின்புறம்
அழுக்குடை
இந்தியர்கள்!
சிலரின்
ஆடம்பர
அழைப்பிதழ்ச் செலவில்
திருமணங்கள் ஆயிரம்
திருப்தியாய் நடத்தலாம்
என்று
எண்ணுகின்றன
ஏழை மனதுகள்!
பெற்றோரைக்
கடனில்
கண்ணீரில் மூழ்கடிக்காமல்
எளிய திருமண விழாக்கள்
இனி வேண்டும்!
வெற்று ஆடம்பரங்களை
வெளி அலங்காரங்களை
விலக்கி-
அன்பால்
பண்பால்
இதயங்களை அலங்கரியுங்கள்!
அப்போது…
உலக அழகெல்லாம்
உங்களை ஆராதிக்கும்!
-கோ. மன்றவாணன், கடலூர், 9944006276
9) மங்கல வாழ்க்கை!
மங்கலவாத்யம் முழங்கியது
குலதெய்வ ஆசிகளும் பெருகியது
பெரியோர் வாழ்த்துக்களும் கூடியது
மணமக்கள் உள்ளங்களும் ஆனந்த கூத்தாடியது !
வலதுகாலடி அவள் எடுத்துவைக்க
அதிலே கொலுசொலியும் சேர்ந்திசைக்க
மங்கலமாதர்கள் ஆரத்தி சேர்க்க
வந்தாள் மகாலட்சுமி, வாசர்கோலம்இட, திருவிளக்கேற்றி வைக்க
உள்ளம் பூத்துக்குலுங்க அதனால் மேலும்பூரிப்படைய
பெண்ணொருத்தி ஆனாள் குலமங்கையென !
கண்ணாளன் போக்கேதன் போக்கென மாற்றினாள்
கணவனின் பெற்றோரை தன் பெற்றோர் எனக் கொண்டாள்
நான் என்பதை ஒழித்து நாம் என்னும் எண்ணம்பெற்றாள்
நல்ல மகவை ஈன்றெடுத்து நல்லதாயும் ஆனாள்
பாலூட்டி சீராட்டி வையகம் வாழ்விக்க தன் மகவை வளர்த்தாள் - இவள்தான்
தன் மகனை சான்றோன் என கேட்டதாயோ !
பத்தினிதெய்வமே ! வாழ்கஉன்புகழ் ! வளர்கஉன்தியாகம் !
- இராசத்தியமூர்த்தி, சென்னை. 9940286330
10) நீயின்றி நானில்லை
நீ உண்டபின் அதே இலையில்
அதே இலையில் நான் சாப்பிடுவதில்லை
வேலை முடித்து உன் வரவிற்காக
விழிமேல் வழி வைத்து
காத்திருப்பதும் இல்லை!
ஒருவர் உறங்கிவிட்ட பொழுதுகளில்
மற்றவர் விழித்திருப்பது
வாடிக்கையாகிவிட்டது
நம் கால நேரங்களில்
மாற்றங்கள் இருக்கலாம்
ஆனால் காதலில் இருந்ததில்லை
ஓர் கூரையின் கீழ்
ஒன்றாகவே உண்டும் உறங்கியும்
கழித்த நாட்களின் ஈர நினைவுகள்
புத்தம் புதிதாய் என்னுள் இருக்கிறது
அன்றில் பறவையைப் போலத்தான்
அங்கு உன்னுடன் வாழ்கிறேன்!
- மித்ரா சென்னை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.