தீபாவளி - வாசகர்களின் சிறப்புக் கவிதை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தினமணி வாசகர்கள் அனுப்பிய சிறப்புக் கவிதைகள்..
1) வாழ்வை கொண்டாடும் தீபாவளி!
முன்னிரவில் புதுத்துணிகள்
தரையில் பரப்பி
தூங்கும் குழந்தையின்
தோள் மேல் அளவு
வைத்துப் பார்த்து
சிரிக்கும் நேரம்
மதிய நேரத்தில்
கண்ணாடியணிந்த தாத்தா
பட்டாசு விலையையும்
சீருடை கழட்டாத பேரன்
பட்டாசு வகைளையும்
பார்த்துக்கொள்ளும் நேரம்
அச்சு முறுக்கும், அதிரசமும்
செய்ய வயர் கூடையும்,
ரப்பர் செருப்புமாக
கிராமத்து அத்தை
வீடு வந்து சேரும் நேரம்
வெளிநாட்டுக் கணவன்
மழை நாள் தீபாவளியின்
காலையில் பெட்டிகளுடுடன்
வேடிகளுக்கு நடுவே
ஆட்டோவில் தெருமுனை
நுழையும் நேரம்
இனிப்பும, கந்தகமும்,
புகையும், தொலைபேசி சிரிப்பும்,
சிதறிய பட்டாசுத் தாள்களும்,
சினிமா விளம்பரங்களும்
கூடிக் கலைக்கும் நேரம்
தீபாவளியையும், வாழ்வையும்
கொண்டாடும் நேரம்.
- டோடோ, சென்னை
2) ஒரு வெளிச்சத்தின் விடியல்!
வரும் பகலுக்கு
கட்டியங்கூறும் விதமாய்
வெடிச்சத்தங்கள்!
மண்ணில் இருந்தால்
கதிரவன் வருகிறானா
என அறியமுடியாத காரணத்தால்
வானேறிப் பறந்து
அவனை வெகு தூரத்தில்
பார்த்த இன்பத்தில்
பூவாய்த் தெளித்துப் பூரிக்கும் ஏவுகணை!
இருட்டைக் கிழித்துச் சென்ற
ஏவுகணையின் ஏற்றத்தில்
செருக்கேறும்
ஆயிரம் வாலாவின்
அட்டகாசச் சிரிப்பு!
இருளே! உன்னை என் புகையால்
மூடி, இல்லாதபடி செய்கிறேன் பார்
என்னும் விதமாய் புகையைக் கக்கித்
தோற்றத்தை மறைக்க முயலும்
பாம்பு மாத்திரைகள்!
தூங்கிக் கிடக்கும் இருளின் முதுகைத்
தீயால் உரசி ஒளிப்பொறிகளை
வாரியிறைக்கும் கம்பி மத்தாப்புகள்!
தானே சூரியன் என்றெண்ணி
தரையில் சுழன்று
வெளிச்சத்தின் வீரியத்தைக் காட்டி
இருளை விரட்ட எத்தனிக்கும்
சங்குச் சக்கரங்கள்!
சோம்பேறி இருளை
அடித்துக் கிளப்ப,
தீச்சுடரைத் திரட்டித் தேய்க்கும்
சாட்டைகள்!
ஒளியின் ஒவ்வொரு வண்ணத்தையும்
தம் குட்டித்தீக் கொழுந்துகளால்
கொலுவைக்கும் மத்தாப்புகள்!
அத்தனை தீக்குழந்தைகளும்
இருளெரிக்க
ஏன் இவ்வளவு
ஆர்ப்பரிக்கின்றன?
ஓ! வெளிச்சப் புடவையை
விளாசியபடி
விடியல் தாய், வீதி நுழைந்து விட்டாள் -
கைகளில் கதிரவன் என்னும்
சோற்றுக்கிண்ணம் ஏந்தியபடி!
-சந்தர் சுப்ரமணியன்,
3) தீப ஒளி
வெடிக்கின்ற வெடியாலே பயன்தான் உண்டோ
வெறும்சத்தம் கேடுதனைக் காதில் செய்யும்
வெடிக்கின்ற போதுவரும் புகையின் நஞ்சு
வெளிவானின் காற்றினிலே மாசைச் சேர்க்கும்
கடிதாக மூக்கிற்குள் நுழைந்து சென்று
கட்டுடலின் இதயத்தில் அடைப்பைச் செய்யும்
குடியிருக்கும் குடிசைகளை எரியச் செய்யும்
குழந்தைகளின் உடலில்தீப் புண்ணைச் செய்யும் !
பட்டாசு தொழிற்சாலை பலரின் வாழ்வைப்
பரிதாப நிலைக்காக்கி உயிரைப் போக்கும்
சிட்டாகப் பறக்கின்ற சிறுவர் கல்வி
சிதறடித்தே ஏழ்மையினைப் பணமாய் ஆக்கும்
விட்டிற்போல் மக்கள்தமை வீழச் செய்தே
வீணாகக் காசுதனைக் கரியாய் ஆக்கும்
பட்டாடை பளபளப்பு பட்டுப் பூச்சி
பாடையிலே வருதல்போல் வருமிவ் வின்பம் !
தித்திக்கும் இனிப்பாக நெஞ்சம் கொள்வோம்
தீபத்தின் ஒளியாக ஊருக் குழைப்போம்
புத்தாடை ஏழையர்க்கே தைத்த ளிப்போம்
புதுச்சுவையின் உணவுதனை இல்லார்க் கீவோம்
மத்தாப்பு சிரிப்புதனை அவரில் காண்போம்
மகிழ்ச்சிதனைப் பிறரோடு பகிர்ந்து கொள்வோம்
சித்தத்தில் தீமைக்கே வேட்டு வைத்து
சித்தரிப்போம் பொதுவிழாவாய் மதங்கள் விட்டே !
- பாவலர் கருமலைத்தமிழாழன்
4) சுடர் வானில் மிகும் ஒளி!
தித்திக்கும் இனிப்புகளை எண்ணி
திளைத்திருந்தது மனம் ஆசைகளுடன்
தீ சுடர் வானில் வரும் முன்
தீங்குகளை நீக்கினோம் உடலினின்றும் மனதினின்றும்
குழந்தைகள் எண்ணியிருந்த
எண்ணங்கள் மலர்ந்த நன்நாள்
கவலைக்கு இடம் கொடுக்காமல் இங்கு
வந்து புகுந்து கொண்ட பொன் நாள்
-சா. சந்திரசேகர், கோவை - 641001.
5) தீபத் திருவிழா
தீபாவளித் திருநாள் மகிழ்ச்சி பெருக்கும் நன்னாள்
சிறியவர் முதல் பெரியவர் வரை மனம் களிக்கும் ஓர் நாள்!
பிரம்ம முஹூர்தத்தில் எழுந்திருப்பு
கங்கா ஸ்நானம் என புத்துணர்ச்சிகுளிப்பு
புத்தாடை அணிந்தவுடன் உடலுக்கு ஓர் மருந்து
தெய்வ சந்நிதியில் சேவிப்பு பெரியவர்களின் ஆசி என வாழ்த்து!
கையிலே மத்தாப்பு மனதிலே ஆனந்த களிப்பு
அதிர்வேட்டு முழக்கம் ஆனந்த முழக்கம்
தரைசக்கரம் என ஆனந்த அலைகள்
கொம்புவாணம் போல் பூரித்த வாழ்க்கை
சுற்றத்தாரோடு சுவைமிக்க உண்டியிலே தோய்ந்த நாக்கு – என்பதான இந்நாளில்
துன்பம் தீயிலே தூசாகட்டும்!
ஆனந்தம் மண்ணிலே நிலைக்கட்டும்!
வேண்டிய அனைத்தும் கிடைக்கட்டும்!
இன்பம் பலபலவே பெருகட்டும் !
-இரா.சத்தியமூர்த்தி, சென்னை
6) தீபப் பெருவிழா போற்றுவோம்!
தெய்வக் கண்ணனைக் கொண்டாடும் – இந்தத்
தீபா வளித்திரு நாளினிலே
பொய்மை இருட்டினைப் போக்கிடுவோம் – நம்
புந்தி எனுமகல் விளக்கெடுத்தே !
குளிக்கும் நீரினில் கங்கையென – அன்பு
கொடுக்கும் நற்குணம் பொங்குகவே !
களிப்பைப் பகிர்ந்திடும் நன்னாளில் – நாம்
அளிப்போம் உதவியை வறியவர்க்கே!
அரக்கன் நரகனின் வதத்தினிலே – உதவி
அளித்த பாமையை மறப்போமா?
கருணை காட்டிடும் தாய்க்குலமும் – தீக்
கயமை அழிப்பதில் முன்வரட்டும் !
வெட்டிச் செலவுகள் தவிர்த்திடுவோம் – இன்று
வெடிப்போம் சினத்தினைப் பட்டாசாய்!
நட்பின் சுடர்களைத் தூண்டிடுவோம் – இந்
நாட்டின் பெருவிழாப் போற்றிடுவோம் !
-பசுபதி, கனடா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

