பேயென பெய்யும் மழை: வாசகர்கள் கவிதை

மும்மாரி இல்லாத போது...முப்போகம் விளையாத போது...நீண்ட தவமிருந்து...நிலம் வேண்டி நிற்பதெல்லாம்...ஆண்டுக்கு ஒருமுறை....பேயென பெய்யும் மழை அல்ல!
பேயென பெய்யும் மழை: வாசகர்கள் கவிதை
Updated on
9 min read

வறட்சியின் போது வேண்டினோம் பெய்தாய்!

வெள்ளத்தின் போதும் பெய்வது முறையோ?

தண்ணீர் இன்றி வாடியது துன்பம் என்றால்

தண்ணீரில் மூழ்கி வாடியது பெருந்துன்பம்!

பெய்யும் மழை உயிர்த்துளி என்றோம்!

பெய்த மழைக்கு உயிர்கள் இரையானது!

ஆற்றில் தண்ணீர் ஓட மழை வேண்டினோம்

ஆனால் சாலையில் படகில் செல்லும்படியானது!

அளவிற்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல

அடைமழையும்  நஞ்சுதான் உணர்ந்தோம்.

மொட்டை மாடியில் மூன்று நாள் தவித்தனர்

மறுபடியும் முதலில் இருந்து பெய்வது சரியா?

கழுதைக்கு கல்யாணம் செய்வித்தது தவறு தான்

கண்மூடித்தனமாக செய்ததற்கு வருந்துகின்றோம்

பெய்யென பெய்த மழையே இனி நாங்கள்

போதும் என்கிறோம் நின்று விடு! வாழ விடு!

மூன்று மாதத்து மழையை ஒரு நாளில் பொழிந்தாய்

மூழ்கி தத்தளிக்கும்படி ஆனது வாழ்க்கை!

அழைத்த போதும் வந்தாய் சரி இப்போது

அழையா விருந்தாளியாய் வருவது ஏனோ?

குடை மழைக்கு காட்டும் கருப்புக்கொடி என்றார்

குடை பிடிக்கிறோம் மழையே போய்விடு!

இரமணன் சொன்ன போது வரவில்லை சில நாள்

இரமணன் சொல்லாத போதும் வருவது ஏனோ?

சாரல் மழையில் நனைந்து மகிழ்ந்ததுண்டு

சாடும் மழையாக நீ ஆனது ஏனோ?

விடுமுறை என்றதும் மாணவர்கள் மகிழலாம்

விடுமுறையில் தொழிலாளிக்கு கூலி கிடைப்பதில்லை!

வெளியேற முடியாமல் தவித்தனர் பலர்

வீடு மூழ்கி வேதனையில் வீழ்ந்தனர் சிலர்!

சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள் ஆனால்

பெருதுளி மாபெரும் வெள்ளமாகி வாட்டியது

வெயிலே வா! வா! மழையே போ! போ!

வேதனையில் பாடும்படி ஆனது இன்றோ!

ஆங்கிலப்பள்ளியில் பயிலும் குழந்தைகள்

அடிக்கடி பாடினர் மழையே போ! என்று

இப்போது தான் அந்தப்பாட்டு பொருளுடையதானது

இப்போதைக்கு மழையே வராதே போ! போ!

ஏரி குளம் கண்மாய் கால்வாய்களில் தேக்கலாம்

எல்லாவற்றையும் ஆக்கிரமித்து வீடு கட்டி விட்டோம்

பெய்யென பெய்த மழையே இனிமேல்

பெய்யென வேண்டும்போது மட்டும் வா!.

- கவிஞர் இரா. இரவி !

==========

வான்முகில் வளாது பெய்கவென
வாயார வாழ்த்துப் பாடி
வையத்தில் விழாக்கள் தோறும்
மனமாரப் பாடி நிற்போம்

வாழ்த்தினைக் கேட்டு விட்டு
வானுறை தேவர் எல்லாம்
வையகம் வாழ்க எண்ணி
மாமழை பொழியச் செய்வர்

வரண்டு நிற்கும் பூமியெல்லாம்
வான் மழையக் கண்டுவிட்டால்
மகிழ்வு கொண்டு வானோக்கி
மனதார நன்றி சொல்லும்

வயல்நிறையும் குளம் நிறையும்
வயலுழுவார் மனம் மகிழும்
தினமும் மழை பெய்கவென
தீர்மானம் எடுத்தும் நிற்பார்

அகமகிழ வைக்கும் மழை
ஆபத்தைத் தந்த திப்போ
அனைவருமே மழை பார்த்து
அலமந்தே நின்று விட்டார்

பார்க்கு இடம் எல்லாம்
பாய்ந்தோடும் வெள்ள மதால்
பரி தவித்து நிற்கின்றார்
பல இடத்தில் மக்களெலாம்

நீர் பெருகி நிற்பதனால்
நிவாரணப் பணிகள் எல்லாம்
யார் செய்வார் எனவேங்கி
நாளும் அவர் அழுகின்றார்

மேடைகளில் ஏறி நின்று
வாய் கிழியப் பேசியவர்கள்
அறிக்கைகளை விட்டு விட்டு
அவர் பாட்டில் இருக்கின்றார்

ஆளுகின்ற கட்சி தனை
அனுதினமும் திட்டி நிற்கும்
எதிர்க் கட்சிக் காரரெலாம்
இதை வைத்தே திட்டுகின்றார்

எதிர்க் கட்சித் திட்டினுக்கு
ஏற்ற பதில் சொல்லவதிலே
இதைச் சாட்டாய் கொண்டுள்ளார்
ஏறி நிற்கும் அரியணையார்

வாதங்கள் புரிவதிலும் வழக்குகள் இடுவதிலும்
பேதங்கள் யாதுமின்றி பேயாட்டும் போடுகின்ற
சாதனைச் செம்மல்கள் சராசரி மக்களது
வேதனைகள் புரியாது விடுகின்றார் அறிக்கைமழை !

வடிகால்கள் அமைக்கவென வந்திருக்கும் பணமெல்லாம்
வட்டாட்சி மாவட்டம் மந்திரிகள் வசமாகும்
மழைவந்த பின்னாலே மழைவெள்ளம் தனைப்பார்த்து
மந்திரிகள் மற்றவர்கள் மாடிநின்று படமெடுப்பார் !

அவர்களது தொலைக்காட்சி அதைக்காட்டிப் பணமாக்கும்
அவதிப்படும் மக்கள்தமை ஆருமே பார்க்கார்கள்
அவர்நிலையை பெரிதாக்கி அனுதாபம் தேடியவர்
அவர்பொருட்டு வரும்நிதியை அமைதியாய் சுருட்டிநிற்பார் !

வெள்ளப் பெருக்குக்குக்காய் வேதனையாய் இருப்பதுபோல்
வெள்ளை வேட்டிசட்டையுடன் விதம்விதமாய் கதைவிடுவார்
உள்ளமெலாம் அழுதபடி ஓர்வழியும் புரியாமல்
வெள்ளத்தில் அகப்பட்டார் விழிபிதுங்கி நிற்பார்கள் !

மாடிவீட்டில் வசதியுடன் மனைவி மக்களோ டிருப்பார்
மாவெள்ளப் பாதிப்பால் மகிழ்வையெல்லாம் இழந்துநிற்கும்
மக்கள்தமை மனங்கொள்ளா மாமனிதராய் இருப்பர்
மக்களெலாம் வெள்ளத்தில் மரணத்தை அணைத்துநிற்பார் !

பொறியியல் படித்தவர்கள் பொறுப்புதனை அறிந்தவர்கள்
நெறிமுறையில் செயல்பட்டால் நீரழிவு  வந்திடுமா
அறநெறியைக் கடைப்பிடித்து ஆட்சிதனை ஆற்றிவிடின்
அநியாய வெள்ளமது அனைவரையும் அழிக்காதே !

குடிகளைக் காக்கவேண்டும் குறையெலாம் போக்கவேண்டும்
நடித்திடும் செய்கைதன்னை நாட்டிலே அகற்றவேண்டும்
அரசியல் செய்கின்றாரும் அதிகாரம் செய்கின்றாரும்
நினைவெலாம் தூய்மைபெற்றால் நெடுந்துயர் அகன்றேயோடும் !

- எம். ஜெயராமசர்மா ,அவுஸ்திரேலியா

=============

மும்மாரி இல்லாத போது...

முப்போகம் விளையாத போது...

நீண்ட தவமிருந்து...

நிலம் வேண்டி நிற்பதெல்லாம்...

ஆண்டுக்கு ஒருமுறை.....

...பே யென பெய்யும் மழை அல்ல!

மானுடம் காப்பது தன் பொறுப்பே யென பெய்யும் மழை...!

மண்ணை மலரச் செய்வது தன் சிறப்பே யென பெய்யும் மழை...!

உயிரினம் வாழ தானும் ஒரு உறுப்பே யென பெய்யும் மழை...!

-மணி'லா

============

பேயெனப் பெய்யும் மழை

காலச்சக்கரத்தில் கோளாறு                        

தடம்புரண்டன மேகங்கள்

தாறுமாறாய் கொட்டுகிறது

பேய் மழை.

- கவிஞர். ம. ராஜ்குமார்

============
 

முழுநேர (தமிழ்)முனைவர் பட்ட  ஆய்வாளர்

நவீன இந்திய மொழிகள் துறை

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்

- அலிகர், உத்திரப் பிரதேசம்.

=========

மழை அதன் அருமை தெரிந்தே

அந்நாளில் பாடினான் தமிழன்

'மாமழை போற்றுதும்' என்று அவனுக்கும்

காலங் கடந்த ஞானம்தான்

பூம்புகார் கடலில் மூழ்கி விட்டது!

கண்கெட்ட பிறகே "சூரிய நமஸ்காரம்"

செய்ய துடிக்கும் மனித குலம் - இதற்குத்

தமிழன் மட்டும் விதிவிலக்கா? 

காடுகளை வெட்டிக் கழனி ஆக்கினான்

சங்க கால அரசன்

கழனிகளை விற்றுக்

காலனி ஆக்கினான்

எம்கால அரசன் - விளைவு

முந்நீர் பழந்தீவுகளாய் தண்ணீரில்

தமிழனின் கூரைகள்! யார் காரணம்

ஒருவர் மட்டுமல்ல

பருவ மழை ஒரு பருவத்தில் மட்டும்

பரிதவிக்க விட்டுவிடுகிறது! 

எங்கே செல்வாள் பூமித்தாய்

கடலுக்குத் தன் பேரக்குழந்தைகளைக்

காண ஆசைதான் - யார் விட்டார் வழி

முடக்கப்பட்டது மழைநீர்!

தாத்தா - பாட்டிகளைக் காண வழியில்லை

கண்டு விட்டால் சென்றுவிடும்

மழைக் குழந்தைகள் - இது

தாய் முகம் காண சேய்யின்

தவிப்பு!

கிராமங்களில் பெய்தால் மகிழ்ச்சி

உழவனுக்கு!

நகர்பறங்களில் பெய்தால் தளர்ச்சி - அரசு

ஊழியனுக்கு!

வேண்டுவோர்க்கு மட்டும் பெய்ய

நீ மட்டும் ஏன் விலைபோகவில்லை

போயிருந்தால் உனக்கும்

போக்குக் காட்டி இருக்கலாமல்லவா!

இனி வருத்தப்பட ஓன்றுமில்லை

எல்லாம் வடகிழக்குப் பருவத்துப்

பெண்ணின் மோகம்!

தமிழ் மறவனின் மீதுள்ள காதலால்

முத்த மழையைப் பெய்யெனப்

பெய்யாமல் 'பேய்யெனப் பெய்ந்துவிட்டாள்'

அவளுக்குத் தவிப்பு அடங்கி விட்டது

எங்களுக்குத் தவிப்பு ஆரம்பித்து விட்டது

வடகிழக்குப் பருவப் பெண்ணே!

உன் அன்பைப் "பேய்யெனப் பெய்யும் மழை"யாக இல்லாமல்

'பெய்யெனப் பெய்யும் மழை'யாக் கொடு

தரணி சிறக்கட்டும்!   

- இரா. கண்ணன், அலிகர், உத்திரப்பிரதேசம்

===============

கடலில் கட்டுமரம் செலுத்திடின்

கட்டாயம் கைதும் மரணமும் என்பதால்

கட்டற்ற காட்டாறாக வெள்ளம் புகுந்து

கட்டுமர கலையை வளர்த்ததோ இம்  மாமழை!!

கற்புடையாள் பெய்யென பெய்யும் மழை

கட்டற்று பேயென பெய்த மழையானதோ இன்று ?

ஊருணி நிறைந்திருந்த இடம் யாவும்  கட்டிடமாய்

ஊர்முழுக்க உருட்டி நிற்க, வீடு பேறு பெறாமல் ஊரெங்கும் நிறைந்து நோய் பரப்பும்

ஊருணி நீரை வைத்தும் வைதும் யாது செய்வோம்?!

பெற்றிடு பேருண்மை என்று

பேதை மழை உரைத்ததா?!

முப்போகம் விளைந்த நிலங்களை எல்லாம்

எப்போகமும் விளையாது வீடாக்கிவிட்டோம்!

இனிவரும் காலத்தில்  இப்பூமியின் கதியென்ன?!

இற்றையோடு முடியுமா இயற்கையின் இரைச்சல்?!

முறையான வடிகால் திட்டம்  கொண்டு வீடுகளின்

முற்றத்தில் முடங்கிய  நீரினை  வடித்திடுவோம் 

ஏரியில் முறையுடனே காக்க மறந்த நீர்தனை

ஏற்புடைய வழியில் வடித்திடுவோம் கடல்நீருடனே

நீர் உயர்ந்து  குடி அழியாமல் 

நீர்  உயர குடி உயரும் என்போம்!!

அடுத்த அடைமழையில் பேய்மழை அல்ல, பெரிதுவக்க

ஆனந்தம் மழை பெய்தது  என்போம்!!!

-டெய்சி ஜெயப்ரகாஷ், கலிஃபோர்னியா

==============

ஓய்வின்றி எமக்கு ஒளிகொடுக்கும் கதிரோன்போல்

காய்தல் இன்றி இரவில் குளிர்ச்சி தரும் மதிபோல்

வாய்மூலம் மகிழ்ச்சிதரும் சோலைக்குயில்போல்

தாய்மழையே! உனையும் கருணையுடன்  நீர்தரவேண்டினோம்!

ஆயின்நீ இன்று செய்தது மெத்தசரியா? சிந்தனைசெய்!

ஓய்தலின்றிப் பெய்தே சேய்களெம்மைத் துன்புறுத்தலாமோ?

சேய்கள் தாங்குவரோ? எனச் சற்றும் கருதலையோ?..எனின்

பேய்நீ என உன்னைநாம் திட்டப் போவதில்லை!..

காய்ந்த ஏரிதான், வயல்தான் என அதில் வீடுகட்டினோம்!

தாயே! அது..பிழைதான்! மன்னிப்பாய்!....நீ பிழைசெய்யாதே!

- கவியோகி வேதம் பெங்களூரு

=============
 

மனிதர் முறைதவற

மழையும் முறைதவறும்.......

இனியும் பிழைபொறுக்க

இயற்கையிடம் பொறுமையில்லை....

நீர்நிலைகள் தடம்மாறி

நிறைநிலைகள் இடம்மாறி

ஏரி,குளம்,குட்டை எல்லாமும்

எப்படியோ தொலைந்தனவே......

வயல்வெளியும், மரஞ்செடியும்,

வனங்களும் காணாது

நிலைகுலைந்தால்.........

தெய்வமும் கைவிடும்,

உய்வதற்கோர் வழியின்றிப்

பெய்கின்ற பெருமழையும்

அய்யகோ இனியென் செயும்

பேயெனவே பெய்யும்!

               "இளவல்" ஹரிஹரன், மதுரை

===============

பேயென பெய்யும் மழை

மழை

மில்லி மீட்டரில்

பதிவாவதாகச் சொல்கிறார்கள்

ஆனால்

அது

கொல்லி மீட்டரில் பதிவாகிக்

கொலைகள் தினந்தோறும்!

பேய்மழையே…

உன்னால்

மருத்துவர் காட்டில் நோய்மழை

சீறிய மழையால் பாதித்த

சின்னக் கவிஞன் நானும்

மீள முடியவில்லை

அதனால்

கவிதை கொஞ்சம்

நமுத்துதான் போய்விட்டது!

மதராஸ் மாநிலத்துக்குத்

தமிழ்நாடு எனப் பெயர்மாற்றம்

செய்தவர் கழக அண்ணன்;

தமிழ்நாடு என்பதை

மழைநாடு என

மாற்றியவர் கார்மேக வண்ணன்!

நாங்கள்

வீட்டைவிட்டு

வெளியே வரமுடியவில்லை

வெள்ளமாய்

வீட்டுக்குள் புகுந்த நீ

வெளியேற வழியில்லை

எழும்பி நிற்கின்றன

ஏரி குளங்களில்

ஆகாயம் தொடும்

அரசுக் கட்டடங்கள்

குளத்துப் புறம்போக்கில்

குடிசை கட்டியவன்தான்

வெள்ளத்துக்குக் காரணமாம்!

கோன் எவ்வழி

குடி அவ்வழி

கொட்டும் நீர் செல்ல ஏதுவழி?

நிலங்களையும் பத்திரங்களையும்

நீ அழித்துவிட்டாய்

நிலஅபகரிப்பு, நிலமோசடி என

உன்மீது

வழக்குகள் தொடுக்க

வழக்கு மன்றங்கள் போதாது!

கடும்வெறியோடு

கல்விச் சான்றிதழ்களையும் அழிக்க

உன்னால் முடிகிறது என்றால்

நீ

பேய்மழை என்பது உண்மைதான்!

அந்தச் சான்றிதழ்களை வாங்க

அலையும்போதுதான் தெரியும்

பேய்மழையை விட

கொடூரமானது

அதிகாரிகளின் முகம்!

 -கோ. மன்றவாணன்

===========

வீதிகளில் இறங்கி பொதுமக்கள்

சாலை மறியல்

இந்த முறை

அவர்கள் கையில்

காலி குடங்களைக் கானோம்

  - என். சுப்பிரமணியம்

=============

பயன்தரவே  பொழிந்தேன்

பேயெனப் பெயர் பெற்றேன்

பட்டா போட்டது யார்?

பேராசை மனிதா - என்னிடத்தை!

கரைகொண்ட குளமாய் ஆறாய் 

வரையறை கொண்டே

வாரி வழங்கினேன்

வாரியது யார் - என் வளத்தை!

பாராமுகம் நான் காட்ட

பரிதவித்தாள் பூமி அன்னை

பாராயோ வறட்சியை என்றதால் 

பரிந்து வந்தேன் பார்செழிக்க

மண்செழிக்கப் பெய்யும்  மழையை

மனச்சான்று இன்றிப் பழிக்கிறாய்

'பேயெனப் பெய்யும் மழை' என்று,

பேயெனப்  பேராசை நீ கொண்டு!

 -கிரேஸ் பிரதிபா.வி

=============

வறண்டுபோன பூமிகண்டு கலங்கி

வாடி வதங்கிப்போயிருந்த ஏழை

வயிற்றைத் தடவிக்கொண்டு

வானத்தைப் பார்த்தது உண்மைதான்

ஏகத்துக்கும் துன்பப்பட்டவன்

மேகத்தைப் பார்த்து வேண்டி

வேகமாக வரச்சொன்னதும் நிஜந்தான்

விரைவாக வந்த நீ

காரியம் முடித்துக்

கடந்துசெல்வாய் என்றுதான்

எப்போதும்போல் எதிர்பார்த்திருந்தான்

வந்து இறங்கியதே

வளைத்துத் தாக்கத்தான் என்கிற

வானுலகத் திட்டத்தை அந்த

பூலோக அப்பாவி அறிந்தானில்லையே !

   --கவிஞர் ஏகாந்தன், டெல்லி

============
 

வானம்பார் பூமியென்றெம் மண்ணுலகை ஏன்படைத்தாய்?!”

வானத்தை எட்டியதே மழைவேண்டும் கதறல்கள்.

சொக்கட்டான் நிறுத்திவிட்டுத் துயருற்ற தேவிக்குப்

பக்கத்தில் இருந்தவனோ பதிலிறுத்தான் சலிப்புடனே.

“ஒருகாசு கொடுத்தாலென்? ஒருகோடி கொடுத்தாலென்?

உருப்படியாய்ச் சேமிக்கத் தெரியாத மக்களுக்கு! “

“போதாதோ ஒருசூடு புத்தியுள்ள மாட்டுக்கு?

தாதாவே! தந்திடுவாய்! “ தர்மபத்னி சொல்கேட்ட

மாயவனும் ஆழிமழை வருணனுக்கோர் ஆணையிடப்

பேயெனவோர் கனமழையும் பெய்ததுகாண் சென்னையிலே! 

                                         ---பசுபதி, கனடா

=============

மழையே வருக..

பயிர்கள் செழிக்க..

மாநிலம் தழைக்க..

மழையே பொழிக.

மக்களைக் காக்க.

காட்டில் பெய்தாலும்

வீட்டில் பெய்தாலும்

மழை நல்லது.

மழை இல்லையென்றால்

மனிதர்க்கு வாழ்க்கையில்லை;

நீரின்றி அமையாது உலகு.

மழையின்றி கிடையாது நீர்.

மழையை வரவேற்போம்;

மழை சென்று குடியேற

ஏரிகளை அமைப்போம்;

கால்வாய்களை சீரமைப்போம்;

குளங்களை விரிவுபடுத்துவோம்;

நதிகளை புதுப்பிப்போம்.

பெய்யெனப் பெய்தாலும்..

பேயெனப் பெய்தாலும்..

எல்லாம் நன்மைக்கே

என்ற நிலை செய்வோம்.

மழையே..மழையே..

வருடம் தவறாமல்

எங்கள் தேசத்திற்கு

வளம் தர வா.

மழையே..மழையே..

பருவம் தவறாமல்

எங்கள் மக்களுக்கு

பலன் தர வா.  

    - கு.காந்தி ராஜா, சென்னை

===========

கருணை  இல்லதாவனென

வருண பகவாணை

வர்ணணை செய்யாதீர்கள்!

மன்மத வருடத்தில்

மாரி அதிகம் உண்டென்று

முன்னோர்கள் கூறியதையும்

வானிலை அறிக்கையையும்

நாம் குறிப்பால் உணர்ந்து

ஏரி குளங்களை தூர் வாரி

அழிந்த ஆறுகளை மீட்டெடுத்து

பட்டுக் கம்பளம் விரித்து

மழையை வரவேற்று இருக்கலாமே!

மழை நீர் சேகரிப்பு தொட்டித் திட்டம்

பெயரளவில் இல்லாமல் உண்மையாகவே

கட்டப்பட்டு இருந்தால் தண்ணீர்

தட்டுப்பாட்டை தவிர்த்து இருக்கலாமே!

இயற்கை தன் கடமையை செய்கிறது

நம் கடமைகளை நாம் செய்யாமல்

இயற்கையை பழிப்பது நியாயமோ?

நாம் வாழ வந்த வாடகை வீடான

இப்புவியில் இருந்து கொண்டு

இதன் உரிமையாளரான  இயற்கையை

வஞ்சிப்பது தான் நியாயமோ?

வீட்டின் உரிமையாளர் சில வருடங்கள்

வரவில்லை என்பதனால் அவர் தங்கும்

தாழ்வான பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ததும்

அவரை அவர் இருப்பிடத்தை  தேடி

அலைய செய்வதும் அவர் குற்றமா?

வீட்டின் உரிமையாளரின் விருப்பப்படி தான்

வீட்டின் கட்டமைப்பு இருக்கும்

அதற்கேற்றார் போல வாழ நாம் தான்

பழகிக் கொள்ள வேண்டும்

ஏரி குளங்களில் பூக்கள் பூத்து

பூங்காவாக காட்சியளிக்கும் அதே

ஏரி குளங்களில் மண்ணைப் போட்டு

மூடினால் பகலில் ஜொலிக்கும்

இரவில் மினுமினுக்கும் தகவல்

தொழில்நுட்ப பூங்காவாக உருவெடுக்கும்

ஏரிகளையும் குளங்களையும்

அடுக்குமாடி குடியிருப்புகளாகவும்

தகவல்தொழில்நுட்ப பூங்காக்களாகவும்

 மாற்றிய நிலப்பரப்புகளில் பெய்த

மாரியின் அளவை விட மேற்குத்தொடர்ச்சி

 மலையோர மாவட்டங்களில் பெய்த

மாரியின் அளவே சதவிகிதத்தில் அதிகம்

ஜீவராசிகளின் வற்றாத வாழ்விற்கு வழிவகுத்த

ஜீவநதி மூலங்களின் வாயில் மண்ணைப்

போட்டு மூடுவது உயிருள்ள ஜீவன்களை

சிதையில் இடுவதற்கு ஈடானது

பெய்யென பெய்த மழையை

கண நேரம் சிந்தித்து

கன மழை என்றே கூறுவோம்

பேய் மழை என்றல்ல!!!

  -தேவி நாகராஜ், போடிநாயக்கனூர் ,

============

மனிதருக்கு

அருளாய்  வருவது

ஏனோ 

அழிவைத் தந்தது! 

இயற்கையாய்

இன்பம் தருவது

ஏனோ

இன்னலைத் தந்தது!  

மண்ணுக்கு

வரமாய் வருவது

ஏனோ

சாபமென மக்களை சா(மா) ய்த்தது!

பெய்யென பெய்யும் மழை

பேய்யென சீற்றம் கொண்டதால்

பாழானது

பயிர்களும் உயிர்களும்,,,

அழகுமழைஅடைமழையானதால்

அழிவுக்குள்ளானது

வாழ்க்கைகளும் வாழ்வாதாரங்களும்,,,

இயற்கைக்கு எதிராய் _ பல செயல்பாடுகள்!   _   அதனால்

இயற்கையும் செய்ததோ பெருங்கேடுகள்!

உன்னோடு போராட

இயலாத வெற்று மனிதர்களோடு

இயற்கையே ஏன்

உனக்கும் தகராறுகள்,,,

வான்மழை ஓட வழியுமற்று!

வாசல்தோறும் சிமிண்ட்சாலைமுட்டு!

மழைநீர் குடிக்க மண்ணுமற்று!

மக்களையும் காக்க முடியாமல் போயிற்று!!

இயற்கையை காக்க

தவறுவதால்  

இயற்கைக்கே  இரையா(க்)கும் தண்டனைகளா? -

"இறைவா"

இனியும் வேண்டாம் இந்நிலைகளென

இருகரமேந்தி

இறைஞ்சுகிறோம் உம் மக்களாய்.....

- மலிக்கா முத்துப்பேட்டை

==============

வானம்  "பேயென  பெய்த மழை" யால்

உயிரை கையில் பிடித்துக் கொண்டு

பூமி

திக்கற்று ஓலமிட்டு

அழுகலாயிற்று

மழை வேண்டி நாமோ

காத்திருக்கிறோம் நம்

உயிரை  வாங்க மழை

காத்திருக்கிறது என்று

இன்றல்லவோ புரிகிறது

ஓடைகள் நிறைந்தது இங்கே

பாடைகள் முறிந்தது

ஏரி குளங்கள் மறைந்தது இவ்வளவு

தானா வாழ்க்கை என நம்பிக்கை

குறைந்தது

ஆது பாது ஏதும் தோது இல்லா நிலை

உருவானது

ஒரு வாழ்வு முடிந்தது மறு

வாழ்வு தொடறுமோ தொடறாதோ   மாற்றி

அமைப்பானோ

மாட்டானோ  எல்லாம் இப்போது

தோற்று வித்தவன் கையில்

இதயம்  இருந்தோர்

மனம் இரங்கினர் அமைப்புகளும்

அணுகினர் உதவினர்

இவர்களும் ஆண்டவன்

அனுப்பிவைத்த ரூபங்கள் தானோ

என்று மனதில்

தோன்றவும் செய்தன

உண்ணக்கேட்கலாம் அதையும்

உரிமையோடு கேட்க மனதில் தயக்கம்

உடுத்தக் கேட்கலாம் அதையும்

நம்மைப் போன்று

உடுத்தாதிருப்போரே அதிகம்

மும்மாரி பெய்ய எத்தனை

சடங்குகள் தெய்வங்களுக்கு

இங்கணம் பேயென பெய்ய வேறெவர்

என்ன சடங்கை செய்து தொலைத்தனரோ

யாரறிவார்

அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்

- வேளாங்கண்ணி - மும்பை

===========

மழையின் க(வி)தை

தூசும், தும்பும், புகையுமாக

மாசு பட்ட காற்றில்

தொலைந்து போன மேகங்கள் 

தென்மேற்குப் பருவ மழையை

பிரசவிக்கத் தவறின !

வெக்கையில் மக்கள் தாகித்திருந்தனர்  

நீர் வற்றி நிலம் வறண்டு போனது.

தாகம் தீர்க்கவும், தங்கடம் போக்கவும்

நல்லோர் பொருட்டால் வந்ததே

வடகிழக்குப் பருவ மழை !

மீனம்பக்கத்திலும், நுங்கம்பக்கத்திலும்

மழையின் பதிவுகள் மேகத்திற்குத் தெரியாததால்

மீண்டும், மீண்டும் கொட்டித் தீர்த்தது !

மக்களும் திட்டித்  தீர்த்தனர் !

நீர் நிலைகளும், நிலங்களும், காடுகளும்

அவையவையாக இருந்திருப்பின்

இவை போன்ற சேதங்கள் நிகழ்ந்திருக்குமா?

எல்லாம் தெரிந்த வித்தகர்கள் மாற்றியது

இயற்கையின் அமைப்பை அல்ல,

தங்களின் தலைவிதியை அன்றோ?

''பேய்''அடைமொழிக்கு மழையின் தவறென்ன?

தவறுகளிலிருந்து பாடம் கற்க வேண்டியது மக்களே.

''வேண்டாம்'' என்றால் வாராது பொய்த்து விடும்.

''போதும்'' என்றால் பொறுத்திருக்கும்.

''பெய்'' எனக் கூடிப்  பிரார்த்தித்தால் ,

வேண்டும் பொழுதெல்லாம்  பெய்யும் !

- ம.அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை

=============

நம்ம ஊரில் மழை பெய்யுமா என

தினம் தினம் ஒரு கேள்வி

சும்மா இல்லாம வருண பகவானுக்கும்

நித்தமும்  ஒரு " அர்ச்சனை "

இப்போ சொல்லுங்க

நம் சென்னை மக்களே

இந்த மழை போதுமா

இன்னும் கொஞ்சம் வேணுமா

இப்போ கேட்பது வருணன்

ரமணன் அல்ல !!!

நாம் அழைத்து

நம்ம வீட்டுக்கு வந்து தங்க 

விருந்தாளி வருணனுக்கு

இடம் கொடுக்கலியே

அவர் வரும்போது தங்கும்

மனையும் அவர் இடமும்

இப்ப நம்ம பிடியிலே .

நம் வேதனை நீக்க..

நாம் கருணை மனு கொடுத்து

நம்மிடை வந்த வருணனுக்கே  

இந்த சோதனை ..

தன் மன வேதனை பொறுக்காமல்  

வருணன் வடிக்கும் கண்ணீர் அல்லவா

இப்போ "பேய் என பெய்யும் மழை"

இந்த நிலை...

--கே.நடராஜன், ஆஸ்திரேலியா

==============

ஐப்பசியில் மழைபொழிந்தால் - இங்கு

அத்தனையும் தழைக்குமென்பர்!

இப்படி நீ பொழிந்தபடி - இன்று

எம்நாட்டை அழிப்பதுமேன் ?

எப்பசியோ தீரவென - நீ

இவ்வாட்டம் போடுகிறாய்?

எப்பாவம் செய்தமென -எமை

இன்றழிக்க ஆடுகிறாய்?

மன்னவரை ஒழித்தவர்கள் - தாமே

மந்திரியாய் ஆனவர்கள்

பொன்வயலில் புரளுகின்றார் - பெரும்

போதையிலே உருளுகின்றார்!

தன்னரிய வாக்களித்தோர் - இன்று

தத்தளித்துத் தவித்திடவே

இன்னலெனும் கடற்படுதல் - அது

இன்றுனக்கும் உடன்பாடோ!

மாளிகைகள் கட்டியின்று - அதில்

மந்திரிமார்  வாழுகின்றார்!

தூளிகட்டும் இடமுமின்றி - வெறும்

தொங்குமரக் கிளையினிலே

ஆளவந்த குழந்தைகளை - அங்கே

அன்புடனே தூங்கவிட்டோம்!

நீள்மரங்கள் நீமுறித்தாய்! - இனி

நிழலேதும் எமக்கில்லை!

வானமே கூரையென - நாங்கள்

வாழ்வாங்கு வாழ்ந்துவந்தோம்!

மானமே பெரிதென்று - இங்கு

மண்தரையில் கிடந்திருந்தோம்!

ஈனமிகு அரசியலால் - பெரும்

இன்பத்தில் மிதப்பவர்கள்

ஊனமுடை உள்ளத்தோர் - அவர்

உயிரை நீ பறிக்காயோ!

கண்ணாகியாம் பெண்ணொருத்தி - தன்

கந்தகமா முலையெறிந்து

வண்ணமிகு மதுரையினை - ஓர்

வளர்நெருப்பில் எரியவிட்டாள்!

மண்புவியில் தீயவரை

மட்டுமவள் கரியவிட்டாள் !

கண்ணெதிரில் ஏழையரை - நீ

கண்ணீரில் ஆழ்த்துகிறாய்!

விண்ணதிர வீழ்மழையே - அந்த

வீணரையே மாய்த்துவிடு!

தூயவர்கள் துடிக்கின்றார் - அவர்

துயர்நெருப்பில் வெடிக்கின்றார்!

மாசுடையோர் வாழுகின்றார் - அவர்

வளத்தையெலாம் நீக்கிவிடு!

காசுபண முதலைகளாம் - அந்தக்

கயவர்களைப் போக்கிவிடு!

பேய்மழையாய்ப் பெய்துவிடு! -அந்தப்

பேயர்களைக் கொய்துவிடு!

 - சிவ. சூரியநாராயணன்.

=============

விளை நிலங்கள்

விலை நிலங்களாக

பயிர் வளர்த்த வயல் வெளிகள்

வற்றி வறண்ட மனைக் கூறுகளாக..

விற்றுப் போன விவசாயிகள்

விட்டுப் போன பெருமூச்சுகளால்

சூழப்பட்டிருக்கும்

அடுக்ககங்களை அரவணைத்து தழுவியதோ

பேயென பெய்த மழை

ஏரிகள் வீடுகளாய் உருமாற

வீடுகளை  ஏரிகளாக்கி

எள்ளி நகையாடுகிறதோ..

பேயென பெய்யும் மழை

 - பி.எஸ் கமலா பார்த்த சாரதி, சென்னை

============

தூறும் மழைதான் துயரம் துடைக்கும்

மீறும் பிழையால் மிதமும் உடைக்கும்

இடைமழை வரம்தரும் இயல்பில்  நல்லதாம்

அடைமழை  நகரம் அழிப்பதில் தொல்லைதாம்

முகிலும் முகிலும் மோதிடும் வேளையில்

திகிலும் மிகைத்திடும் திகில்தான் சூழுமே

சூறைக் காற்றுச் சுழலும் சொந்தம்

பாறை  மேலே படரும் சந்தம்

உயிர்களும் மழையை உயிராய் எண்ணும்

பயிர்களும்  மழையை பசியா(ற) உண்ணும்

வானம்  அழுது வடித்து வழியும்

ஈனம் பொழுதில் இடிந்து ஒழியும்

நிலத்தை மழைத்துளி நெகிழ்ந்து  நிறைக்கும்

நலத்தை விதைத்திட நிலமும் சிரிக்கும்

மண்ணில் மழைத்துளி மலரும் வாசனை

எண்ணி  மகிழ்வதால் இனிமை வீசுமே

   -அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

============

கணல் கக்கிய கதிரவனின் வெம்மை

தணிக்க தண்ணீர் பஞ்சபேயை ஒட்ட

வாடி நின்ற பயிர் காக்க நீ

வருவாய் என எதிர்பார்த்து

காத்திருத்தோம் பல நாளாய்

வந்தாயே உன் வலிமை காட்ட எங்கு

காணிணும் நிறைவாக நின்றாய்

கட்டிடமாய் நின்ற உன் இடங்களை

காணாமல் நீ தவித்தாயயோ? மாயமான

உன் இடங்களை தேடி பரிதவித்து

அலைத்தோயோ? பெய்தாலும்

பொய்தாலும் உன் இடங்களை நாங்கள்

காக்க வேணும் என்று பாடம்

சொல்ல வந்த பேய்மழையோ?

-லட்சுமிபாலா பெத்தேரி

============

வானடுத்த புகழ்விளங்கும் வண்டமிழன் மாநிலம்!

கானடைத்த நிலவளத்தில் கழனிகண்ட ஊர்ப்புறம்

தானுடைத்து வாழிடங்கள் தகர்த்தெடுத்து வாயிலா

மானுடத்தின் வேரசைத்து மனமுலுக்கும் மாமழை!

நீண்டெழுந்து நிலம்விழுங்கும் நீரலைகள் ஊரினைத்

தாண்டுகின்ற ஒருகணத்தில் சவம்நிறைத்துப் போயின!

ஆண்டுநின்ற நற்குணங்கள் அவைவிடுத்து மூர்க்கமாய்த்

தாண்டவத்தில் மானுடத்தைத் தகர்த்தொழித்த மாமழை!

பாதையின்றி பரிதவிக்கும் பயணியர்கள் ஓர்புறம்!

வீதியெங்கும் வேரறுந்து வீழ்சவங்கள் ஓர்புறம்!

சூதுகொண்ட அரசியலார் சுயநலத்தின் சூழ்ச்சிபோல்

மோதியெங்கும் மானுடத்தின் மூச்சடைக்கும் மாமழை!

காடழித்து நதிதவழ்ந்த கரையழித்துப் புள்வளர் 

கூடழித்துக் குஞ்சழித்துக் குலமழித்த போதெலாம்

மூடருக்குத் துன்பமில்லை; முறைமறந்து மாமழை

வீடழித்த போதுமட்டும் வினவிநிற்றல் என்முறை?

மாந்தருக்கு மட்டுமில்லை மண்ணுலகம்; ஈங்கதைச்

சார்ந்திருக்கும் கோடிகோடி தாவரங்கள் மாவினம்

சேர்ந்திருக்கும் சூக்குமத்தைத் தெளிந்துளத்தி லன்பினைத்

தேர்ந்தெடுத்தல் மானுடத்தின் தேவையாகிப் போனதே!

  - சந்தர் சுப்ரமணியன்

==============

"பேயெனப் பெய்யும் மழை"  தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு

யாசகம்

உங்கள் கவிதைகளை askdinamani@dinamani.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com