தண்ணீர் - வாசகர் கவிதைகள்

கவிதைமணி பகுதிக்கு தொடர்ந்து கவிதைகள் எழுதும் கவிஞர்களுக்கு நன்றி! அடுத்த வாரத்திற்கான தலைப்பு ‘திருமணம்’.
Updated on
5 min read

கவிதைமணி பகுதிக்கு தொடர்ந்து கவிதைகள் எழுதும் கவிஞர்களுக்கு நன்றி! அடுத்த வாரத்திற்கான தலைப்பு ‘திருமணம்’.

உங்கள் கவிதைகளை askdinamani@dinamani.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

  1. தண்ணீர்

அலை சத்தம் வரும் 

திசை தெரியவில்லை

நல்ல நீர் உப்பு நீர்

வித்தியாசம் தெரியவில்லை

நடக்கும் தூரந்தான் கடல்

என்பதும் தெரியவில்லை

கடற்கரை வீட்டின்

மாடியறை மீன் தொட்டியில்

கடல் போகும் ஆசை கொண்டு

கண்ணாடியில் மோதிக்கொள்ளும்

மீன்களுக்கு

===

நீராடையில்லாத பாறைகள்

பாசியறியாத படித்துறைகள்

ஆறில்லாத ஆற்றுப்பாலங்கள்

நீரில்லாத மணல் பாளங்கள்

வெற்றுக் கண் வாராவதிகள்

குளத்து உள் உறை கிணறும் 

காய்ந்து கிடக்க..

வண்ண மயமானது எங்கள்

வாழ்வு மட்டும்

பச்சை மஞ்சள் நீலம் என

குடங்கள் தூக்கி 

லாரியின் பின்னே

ஓடியபடி.

===

எப்போதோ

நுரை பொங்கி, சுழித்து,

இரு கரை தளும்பி, 

பள்ளி முடிந்த 

குழந்தையின் வேகத்தில் 

நகரும் நீரெங்கும் 

நீல ஆகாயம் 

பிரதிபலித்திருக்க

தன் பிம்பம் தண்ணீரில் 

பார்த்தை குளிரோடு

நினைத்ததுகொண்டது

நீர்ப்பறவை..

வேறொரு நாளில்

அனல் பறக்கும்

மணல் திட்டில்

அலைஅலையாக 

சுட்டபடி நகரும் 

தன் நிழல் பார்த்து

பெருமூச்சோடு போனது

மணல் பறவையாக

===

புதிதாய் பிறந்த குழந்தை போல்,

காற்றுக்கும் மேகத்துக்கும்

எண்ணமில்லாமலும்.

வண்ணமில்லாமலும்

பிறந்தவன் நான்

விழுவதும் எழுவதும்

என்னியல்பு

தாமரையிலை என்னைச் சேர்க்காது

இருந்தாலும் விழுவேன்

செம்மண் என்னைப் பழுப்பாக்கும்

இருந்தாலும் விழுவேன்

கடல் என்னை உப்பாக்கும்

இருந்தாலும் விழுவேன்

மீண்டும் மீண்டும் மேகமாய் எழுவேன்

மழையாய் விழுவேன் – 

பம்புசெட்டு அறையின் மேலிருந்து

கிணற்றில் விழும்

சலிக்காத சிறுவன்

போலவே  !

====

வாய்க்காலில் 

நீர் குறைந்த நிலைமை

சொப்பு வைத்தாடும்

சிறுமிகள் வரை 

சேர்ந்தது தெரிந்தது..

"ஒரு தம்ளர்

தண்ணீ ஊத்தி

ஒரே பூ பூத்தது !! "

- டோடோ, அம்பத்தூர், சென்னை

**

2)

காலில் மிதித்தாலும்...

கையில் நனைத்தாலும்...

உச்சி முகர்ந்தாலும்...

கச்சை நனைத்தாலும்...

கண்டுகொள்ளாமல்....

மணல் பூக்களுக்கு தண்ணீர் வார்த்தபோது...

அலையாய் சிரித்தது...

...வாண்டுக் கூட்டமும்,

...வங்காள விரிகுடாவும்!

***

தண்ணீர் தேசம்...

கடல் கன்னி...

பாய்மரம் கப்பல்...

சிப்பிக்குள் முத்து...

சிறகடிக்கும் மீன்கள்...

சர்வதேச எல்லை...

அவ்வப்போது சிந்தும் ரத்தம்...

எல்லாமே இருந்தும்...

பட்டா போட முடியலியே...

உஷ்ண காற்றில் சலித்துக்கொண்டார்...

விடிவெள்ளி கார்மேகம்!

-மணிலா

3)

தண்ணீர்தாம் பூமிக்குத் தாயாம் ! நம்மைத்

தாய்அன்பால் காப்பதுபோல் தண்ணீர்த் தாயைக்

கண்போல நாம்பேணிக் காக்கா விட்டால்

கண்ணீரில் நாளும்நாம் துடிக்க வேண்டும் !

மண்மீதில் சிறுபுல்லும் முளைப்ப தற்கு

மழைஈயும் தண்ணீரே உயிராம்1 அந்தத்

தண்ணீரைச் சேமித்துக் காக்கா விட்டால்

தார்பாலை ஆகுமிந்தத் தாரும் வாழ்வும் !

முன்னோர்கள் ஊர்சுற்றி அகழி வெட்டி

முழுநீரைத் தேக்கிவைக்க இலஞ்சி கூவல்

நன்னீராய் சிறைகுளமாம் கிணறு தன்னில்

நாற்புறமும் கரையமைத்தே ஏரி தன்னில்

நன்றாக மழைநீரைத் தேக்கி வைத்து

நல்லபடி நிலத்தடியில் காத்த தாலே

பொன்போல முப்போகம் வயல்வி ளைத்துப்

பொலிந்திருந்தார் தாகமின்றி நிறைந்த வாழ்வாய் !

நீர்தேக்கும் ஏரிகுளம் குட்டை யெல்லாம்

நிரவியதை மனைகளாக்கி விற்று விட்டோம்

நீர்பாய்ந்த ஆற்றினிலே கழிவு நீரை

நிரப்பியதைச் சாக்கடையாய் மாற்றி விட்டோம்

ஊர்நடுவே ஆழ்துளையில் கிணறு தோண்டி

உறிஞ்சியெல்லா நீரினையும் காலி செய்தோம்

சீர்பெறவே காடுமலை காத்து வானம்

சிந்துகின்ற தண்ணீரைக் காப்போம் வாழ்வோம் !

( அகழி-ஊரைச்சுற்றி கால்வாய்போல் வெட்டியிருப்பர். 2.சிறை- மழைநீரின் ஒரு துளியையும் வீணாக்காமல் சேமிக்கும் நீர்நிலை.3.இலஞ்சி- பல்வகைக்காய்ப் பயன்படுத்தும் நீர்நிலை.4.கூவல்- பள்ளத்தில் தேங்கிநிற்கும் நீர்நிலை. சங்க இலக்கியங்களில் உள்ள பெயர்கள் இவை)

- பாவலர் கருமலைத்தமிழாழன்

4)

உடலுக்கு உயிர் ஆதாரம்

உயிருக்கு நீர்ஆதாரம்

நீருக்கு மழை ஆதாரம்

மழைக்கு இயற்கை ஆதாரம்!

இரண்டு மடங்கு ஹைட்ரஜனும்

ஒரு மடங்கு பிராணவாயுவும் சேர்ந்தால் தண்ணீர் - இதை

பல மடங்கு நாம் உழைத்து

சேமித்தால்தான் நமக்கு உயிர்நீர் - என்பதால்

பல் விளக்கும் போதும்

நீராடும் போதும் மற்றும்

பல தேவையின் போதும்

சிக்கனமாய் பயன்படுத்துவோம்!

கசிவுகளை அடைப்போம்

கண்மாய்கள் காப்போம்

கணமேனும் சிந்திப்போம்

எதிர்காலம் வாழ வழிவகை செய்வோம்

இதை வறட்டு வாய்மொழி ஆக்காமல்

உறுதிமொழி என ஏற்போம் உலகத்தீரே !

- இரா.சத்தியமூர்த்தி

5)

வைர ஊசியாய் பூமியில் இறங்கி

நதியாய் நடை பழகி

மானிடர் தாகம் தீர்க்கும்

நீர் அமுது நீ!

கனிகளில் சாறாய்

தென்னையில் இளநீராய்

பயிர்களின் ஜீவனாய்

மனிதர் உயிர் வாழ

இன்றியமையாத உயிர் நீர் நீ!

உலகம் தன்னச்சில்

ஒழுங்காய்ச் சுழல

நாகரிகம் தழைத்து

மானுடம் மேம்படச் செய்யும்

வாழ்வாதாரமும் நீ!

- கமலா பார்த்தசாரதி

6)

மனிதனுக்கே  மண்ணாசை அதிகம்

என்பார் ஞானியர் ;

ஆனால் உனக்கன்றோ

மண்ணாசை அதிகம் ;

 உன்னைப் பொறுத்தவரை

 நில அபகரிப்புச்

சட்டம் என்பது

செல்லுபடி ஆகாதோ ?

 மனிதர்க்குக் கிடைக்காமல்

நீ மரணிப்பாய்

என்பதை ஏற்கலாகாது !!

 மண்ணில் நீ

இல்லாது போனாலும் உடனே

கண்ணில் வருகிறாயே

கண்ணீராக.....

**

 கீழ் நோக்கிப் பாய்ந்தாலும்

எப்போதும் ‘மேல்’  ஆனவள் நீ ;

 சுவையே இல்லாவிடினும்

நிறைய சுவைக்கப்படுகிறாய் ;

 நிறமே இல்லையெனினும்

உலகிற்கு வண்ணம் கொடுக்கிறாய் ;

 ‘பூத’ங்களில் ஒன்றானாலும்

அனைவராலும் நேசிக்கப்படுகிறாய் ;

 எதை நினைக்கிறானோ

அதுவாகவே மாறுபவன் மனிதன் ;

எதை நனைக்கிறோயோ

அதுவாககவே மாறுபவள் நீ

இன்றைய காலகட்டத்தில்

விண்ணில் இருந்தாலும்

மண்ணில் இருந்தாலும்

கண்ணில் மட்டும்

அகப்படாமல் இருப்பது நீ ;

**

 நீரே !!

கண்கள் கலங்கினால்

நீ வருகிறாய் 

ஆனால் நீ கலங்கலாக

வந்தால் நிராகரிக்கப்படுகிறாய் ;


என்னே விந்தை நீ !!!

தண்ணீரே !!

உன்னைக் குடித்தால்

நீ உயிர் கொடுக்கிறாய்

உன்னை அடித்தால்

நீ உயிர் பறிக்கிறாய் ;

ஓரெழுத்தை மாற்றினால்

தலையெழுத்தையே மாற்றுகிறாயே !!

என்னே விந்தை நீ !!!

துன்பம் வந்து

கண்களினின்று வழிகையில்

உப்புக் கரிக்கிறாய் !!

இன்பம் வந்து

கண்களினின்று வழிகையில்

தித்திக்கிறாய் !!!

என்னே விந்தை நீ !!!

 - நிரஞ்சன் பாரதி, 9884839158


7) தண்ணீர்

தண் எனும் குளிர்ச்சி கொண்டமையால் 

தண்ணீர் என்ற பெயரோ?

உலகிற்கும், உயிர்களுக்கும் ஆதாரம் நீயென்றாலும் 

மழையின் வரவே உன் உருவம் !

நீ( ர் ) இன்றி வற்றிப் போன நீர் நிலைகளும் 

வறண்ட நிலங்களும்  ஏனிப்படி ஆயின?

மரங்களுக்கும், உனக்கும் உள்ள உறவு பற்றிய 

புரிதல்கள் மனிதர்களுக்கு அற்றுப் போனதால் தானோ?

ஆர்ப்பரிக்கும் அலைகள் கடல்

அமைதியான அழகு ஆறு 

பீறிட்டுப் பெருகும்  ஊற்று 

ஆரவாரமாகக் கொட்டும் அருவி

சல சலவென சப்தமிடும் ஓடை

என வடிவு பலவாயினும்  

நீர் என்ற பெயரே பொதுவானது !

உப்பு நீர், நன்னீர் என சுவை வேறு படினும் 

என்ன நீரானாலும் சங்கமிக்கும் இடம் ஒன்றே!

சிந்தித்து உணரும் மாந்தருக்கு பாடம் ஒன்று இதிலுண்டு!

மதம்,மொழி, நாடென மக்கள் வேறுபட்டாலும் 

மனித குலம் என்ற பெயரே பொதுவானது!

நல்லவர், கெட்டவர் யாராயினும் 

சந்திக்கும் இறைவன் ஒருவனே!

- ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை

8) தண்ணீரின் கண்ணீர்

கலசத்தில் நீர்நிரப்பிக் கடவுளை உள்ளழைக்க

வலிமைமிகு மந்திரங்கள் மனமொன்றிச் சொல்லிநின்றேன்.

வழிபாடு முடியுமுன்னே வந்துநின்றாள் நீர்த்தேவி.

விழிகளிலே நீர்பொங்க விளித்தனள்: “மானுடனே!  

பரிசுத்தம் வேண்டாமா பரிபூர்ண பலன்கிட்ட?

அருகதையும் எனக்குளதோ ஆண்டவனை உள்ளிறக்க?

ஆறுகளில் சேர்த்துவிட்டாய் ஆலைகளின் கழிவுகளை ;

நாறுதே மாசுகளால் ஞாலத்துச் சூழலெல்லாம்! 

பூதமென்னுள் நஞ்சிட்டுப் பூதனையாய் மாற்றிவிட்டாய்!

மாதவனும் எனையுறிஞ்சி மறுபிறவி தருவானோ? “ 

 -பசுபதி, கனடா 

9)

‘தண்ணீர்’-.க் கவிதையா கேட்கிறீர்?

எதற்கய்யா வம்பு?

காவிரித் தண்ணீர் பற்றி இப்போ

கவிஞன் எழுத இயலுமா?

கர்நாடகத் தமிழனும் அடிப்பானே!

மின்சாரம் தரமறுக்கும்

தமிழ்நாட்டானே! உனக்குக் காவிரியா வேண்டும்?

கேட்பானே!.. எதற்கய்யா வம்பு?

குளம்நிறைய வெட்டி ‘மழைநீர்’ சேமிக்கா

நம் அரசியல்வியாதியின்

ஊழல்தண்ணீர் பற்றியும் எழுத

கவிஞனுக்குப் பயமே!

பேசாமல்,

தேங்காய்க்குள் ஒளிந்திருக்கும்

இளம் ‘தண்ணீர்’ பற்றி எழுதலாம்!

காலைநுனியில் இலையின்மேல்

கவியும் ‘தண்ணீர்’ பற்றி எழுதலாம்!

சகதிநீக்கி வெளிவரும் தவளைத்தோல்

‘தண்ணீர்’ பற்றி எழுதலாமே!..இல்லை!!

எல்லாப்பூவின் இதழ் அடியில்

இனிப்புற ஒளிந்துள ஆரோக்கிய--

‘தண்ணீர்’ பற்றி எழுதட்டுமா?

வரி-அடி கிடைத்தால் வருத்தமில்லை!

தடி-அடி கிடைத்தால்..?..........

- கவியோகி வேதம்

10)

தண்ணீர் அடுத்த நூற்றாண்டில்….

சொட்டு மருந்துப் பாட்டிலில்

தண்ணீர் விற்கப்படும்.

அதை வாங்க

நீண்ட வாpசையில்

நிற்பார்கள் மக்கள்!

கேப்சூலில்

தண்ணீரை விற்க

பன்னாட்டு நிறுவனங்கள்

படையெடுக்கும்.

தண்ணீரை

வேற்றுக் கிரகத்திலிருந்து

விண்ணூர்தியில் கொண்டுவர

அதிநவீன

ஆராய்ச்சி நடக்கும்.

தண்ணீரில் குளிப்பது

தேசத் துரோகக்

குற்றமாகும்.

ஆடை துவைப்பதிலிருந்து

ஆடவா; பெண்டிர்

அனைவருக்கும் விடுதலை.

துவைக்கத் தேவையில்லாத்

துணிகள் தயாரிக்கப்படும்.

அதை

விஞ்ஞானச் சாதனையாக்கி

வெற்றிவிழா நிகழும்.

ஆளில்லா வீட்டில்

அரைக்குவளை நீர் திருடிய

தண்ணீர்த் திருடனுக்கு

ஆயுள் தண்டனை

அளிக்கப்படும்.

பத்துக் கிலோ தங்கம் திருடிய

பலே ஆசாமியை

மன்னித்து

விடுதலை செய்யும்

நீதிமன்றம்.

திருமால் கோவில்களில்

துளசித் தீர்த்தத்துக்குப் பதிலாக-

வெற்றுக் கரண்டியை

வெறுங்கையில் வைத்தெடுக்கும்

துளசித் தீர்த்த

பாவனைச் சடங்கில்

பக்த கைகள் பங்கேற்கும்.

-கோ. மன்றவாணன்

11)

தங்கத்தைக் கொடுத்து

தண்ணீர் பெறும் காலம் வரும்!

மூன்றாம் உலகப்போரின்

முதற் காரணியாய் இருக்கும்!

ஒரு குவளை நீருக்கு

உயிரையும் விலைபேச நேரும்!

இது மனிதர்செய் பிழையாகும்,

மரமறுத்தலால் வந்த நிலையாகும்.

மண்ணுக்குள் தேடுதல் விடுத்து

விண்ணுக்குள் நீர் தேட வேண்டும்.

மரம்வெட்டிக் காடழித்தோம்;

காடழித்து மழையொழித்தோம்;

மழையொழித்து மண்புதைத்தோம்;

மண்புதைத்து நதியிழந்தோம்;

நதியிழந்து நீர்நிலையொழித்தோம்!

மனிதரின் பேராசைக்கு

மண்,மரம்,காடு,மழை,நதி

இழந்தோம்....இழந்தோம்....

வருந்தலைமுறைக்கு எதையளித்தோம்?

தண்ணீர்பட்ட பாடொழிந்து

தண்ணீரால் படாதபாடு படும் நிலைபெற்றோம்!

இனி, தங்கத்தை விட

தண்ணீர் விலைகூடலாம்;

தினந்தோறும் இங்கே

தண்ணீர்விலை நிலவரம் 

தகவற் செய்தியாய்ப் பெறலாம்!

ஒரு துளியும்

வீணா(க்)கும்

ஒவ்வொரு துளியும்

உயிர்காக்கும் மருந்தாகும்!

- கவிஞர் "இளவல்" ஹரிஹரன்,    மதுரை,   98416 13494.


12)

ஆழக்குழி தோண்டி ஆழ் கிணறாக்கி அழிக்கிறோம்

குழாய்வழி நிலத்தடி நீரை வழித்துத் துடைக்கிறோமடா!

வாழ்நாளைக் கழி(ளி)க்க வண்டிகளில் நீரை வரவழைத்து

விலைகொடுத்து வாங்கி வேண்டுமளவு செலவழிக்கிறோமடா!

தாகம் தணிக்கும் நீரை விஷமேற்றி விலையேற்றி

சுவைநீராய் மாற்றி விற்பது வெளிநாட்டு விந்தையடா!

சுவைக்கு அடிமைப்பட்டுக் குடிக்கும் பொம்மைகளாய்

உலகையும் உடலையும் நித்த நித்தம் அழிக்கிறோமடா!

ஒரு தண்டாய்ப் பல கிளைகளாய் விண்ணோக்கி நிற்கும்

மரங்களைக் கண்டதுண்டாமாய் வேண்டியமட்டும் வெட்டுகிறோம்!

விரிந்து பரந்து விருட்சமாய் விளங்கும் பச்சை மரங்கள் பலவும்

கார்மேகங்களை விண்ணில் வரவழைக்கும் வித்துகளடா!

தண்ணீர் அரிய அருமருந்து விண்ணிலிருந்து வீழும் செல்வம்

மண்ணினைப் பொன்னாக்கும் விசும்பின் விளைச்சலடா!

பச்சை மரங்களை இச்சையால் அழிப்பதால் உலகவுயிர்கள்

நிச்சமாய் விரைவில் வெந்தால் வெப்பமே விளையுமடா!

கொட்டும் மழையின் ஒவ்வொரு சொட்டுத் துளியையும்

கடலில் கலக்காது கட்டிக்காப்பது நமது கடமையடா!

குடநீருக்குக் கூப்பாடுபோடும் நாம் நீர்நிலை மடைவாய்க்கு

வருநீர் வாய்க்காலில் மடத்தனமாய் வீடுகட்டித் தடுக்கிறோமடா!

உனக்கு வேண்டும் தண்ணீர் எனக்கு வேண்டும் தண்ணீர்,

செடிக்கு வேண்டும் தண்ணீர் கொடிக்கு வேண்டும் தண்ணீர்

வீட்டுக்கு வேண்டும் தண்ணீர் காட்டுக்கு வேண்டும் தண்ணீர்

கால்நடைக்கு வேண்டும் தண்ணீர் காவியுடைக்கு வேண்டும் தண்ணீர்

ஆலைக்கு வேண்டும் தண்ணீர் பூஞ்சோலைக்கு வேண்டும் தண்ணீர்

ஆவியாய் போனாலும் மாரியாய் மண்ணுக்குவரும் தண்ணீர்

விழும் விசும்பின் தண்ணீர் மட்டும் பல்லுயிர் காக்கப் போதுமடா!

நிலையாயிருக்கும் நீராய் நிலத்தடி நீரை மாற்றுவோமடா!

தண்ணீர் என்றும் நம் தாய் தமிழகத்தில் நிற்குமடா!

கண்ணீர்விட்டு கர்நாடகாவிடம் கரமேந்த வேண்டாமடா!

தண்ணீர் வளத்தில் தன்னிறைவு பெற வேண்டுமடா!

- மீனாள் தேவராஜன்

13)

கல்யாணம் காட்சி ஏதுமின்றி

களைத்துப்போய் வாழும் தனிமனிதனானாலும்

குடுபத்து வாழ்வில் குதூகலிப்பவனானாலும்

அட போதுமடா இந்த வாழ்வு எனச் சலித்து

அனைத்தையும் விட்டு விலகி நிற்கும்

ஆண்டியாகிலும் சாதுவாகிலும் சந்நியாசியாகிலும்   

ஆடோ மாடோ எதுவாகிலும்

உன் துணையின்றி ஒருநாளும்

உருப்படியாய் நீளாது நகராது

பஞ்சபூதங்களில் நீ ஒன்று

நீ இல்லாவிடில் ஓடாது கதை என்று

பாடிவைப்பேன் ஒரு கவிதை இன்று

கிடைக்காத தண்ணீர்

பெய்யாத மழையினால்

ஆற்றில் குளத்தில் ஏரியில்

தண்ணீர் தலைகாட்டவில்லையெனில்

யாரைக் குற்றம் சொல்வது

எங்கே போய் முட்டிக்கொள்வது

ஆனால்

அணை கட்டுகிறேன் பேர்வழி என்று

அடுத்த மாநிலத்தான்

உயர அணைக் கட்டித் தண்ணீரை நிறுத்தி

உபத்திரவம் செய்ய முயற்சித்தால்

உதைக்கணுமா வேண்டாமா?

சொல்லவில்லை நான் இதை

சொல்லவொண்ணாத் துன்பத்திலிருக்கும்

தமிழ்நாட்டு விவசாயி

என்ன நினைத்துப் பொருமுவானோ என

ஏதோ நினைத்துப் பார்த்தேன்

வேறொன்றுமில்லை

-- ஏகாந்தன், புதுதில்லி

14)

ஜீவனானது உயிர்களுக்கெல்லாம்

காட்டும்  எங்கும் எதிலும் சமம்
ஆறாகி இருபுறமும் அணைத்து செல்லும் 
குருதியாகியது பூமித்தாய்க்கு 
கலக்கிறது எந்நிற உடலிலும், நிறமற்றது
தன்னிகரில்லா தண்ணீரை சேமிப்போம் காப்போம் 
      
- சா. சந்திரசேகர், கோவை

ஆர்வமுடன் கவிதைகளை அனுப்பும் தினமணி இணைய வாசகக் கவிஞர்களுக்கு நன்றி. கவிதை மணியில் ஒரு தலைப்புக்கு ஒரு கவிதை மட்டும் எழுதி அனுப்பினால் தேர்வு செய்ய எளிதாக அமையும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com