சுனாமிச் சுவடுகள்:  பாவலர் கோ. மலர்வண்ணன்.

Updated on
1 min read

ஆழிப்பே ரலையென்று நமது முன்னோர்
    அழைத்ததைத்தான் இந்நாளில் சுனாமி என்பார்!
ஊழிக்கா லத்தில்தான் கடல்நீர் பொங்கி
    உலகத்தை மூழ்கடிக்கும் என்றே சொல்வார்!
மேழிக்கை உழவர்க்குப் புயலின் சீற்றம்
    மென்மேலும் துயரிழைத்துத் தொடரு தல்போல்
ஆழிப்பே ரலைதானும் கடலோ ரத்தில்
    அமைந்திருக்கும் ஊரவரை அச்சு றுத்தும்!

நிலநடுக்கம் கடல்பரப்பில் நிகழு மானால்,
    நீரலைகள் மேலெழுந்து கரையை நோக்கிக்
குலைநடுங்கச் செயும்வகையில் விரைந்து வந்து
    குப்பையென அனைத்தையுமே சுருட்டிக் கொண்டே
அலைகடலின் வயிற்றுக்குள் கொண்டு செல்லும்;
    ஆறாத துயரத்தைப் பரிசாய் நல்கும்!
விலைமதிக்க முடியாத உயிர்கள் தம்மை
    விருந்தாக்கிக் காலனையும் மகிழச் செய்யும்!

இரண்டாயி ரத்துநான்கு, திசம்பர் திங்கள்
    இருபத்தி ஆறாம்நாள் ஞாயி றன்று
பரந்துபட்ட ஆசியாவின் கருப்பு நாளாம்!
    பாங்கான சுமத்திராவின் கடல்ப ரப்பில்
மிரண்டோடிப் பதுங்குவகை நிலந டுக்கம்!
    மேலெழுந்த கடலலையோ வட்ட மிட்டுச்
சுரண்டுவார்தம் கையைப்போல் கரைக்கு நீண்டு
    சுனாமியெனப் பெயர்பெற்றுச் சிதைத்த தந்தோ!

இந்துபெருங் கடல்காணா அலைகள், தீமை
    இழைப்பதற்குத் தோன்றினவே! தொடர்ச்சி யாக
இந்தோனே சியா,சோமா லியா,தாய் லாந்து,
    இலங்கை,மலே சியா,மியன்மார், மாலத் தீவு,
இந்தியாவென் றிருக்கின்ற நாட்டி லெல்லாம்
    எதிர்பாரா வண்ணம்பே ரழிவைச் செய்து
சிந்துகின்ற கண்ணீர்க்குக் காட்டாய் நின்று
    செஞ்சுனாமிச் சுவடுகளாய்த் திகழும் அந்தோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com