பச்சை நிலம்: கவிஞர் "இளவல்" ஹரிஹரன்

Updated on
1 min read

காணற்க ரியதாகி விட்ட காட்சி
     கண்களினை விற்று,வாங்கி சித்தி ரத்தைத்
ஏனோநாம் ரசிக்கின்றோம் வெட்க மில்லை
     இருந்தவற்றை இழப்பதற்கே வரங்கள் பெற்றோம்.
வீணாகும் எனத்தெரிந்தும் விளை நிலத்தை
     வீட்டடியாய் அளந்தளந்து விற்ற காசு
பேணுதற்கோ வழியின்றி சோற்றுக் காக
     பிச்சையேந்தும் நிலைமைக்குத் தள்ளப் பட்டோம்.

சாயங்கள் போகலாகும் விவசா யங்கள்
     சாப்பாடும் இன்றிவிவ சாயி சாகும்
நேயங்கள் நிறைந்ததொரு வுலகில் இந்த
      நிலைகெட்ட இழிவுநிலை ஏனோ முன்னோர்
மாயங்கள் செய்தகதை மறந்த தாலே,
      மரமறுத்துப் பாபங்கள் வளர்த்த தாலே
தூயமழை பெய்யமுகில் மறுத்த தாலே
     துணைக்கண்டத் தில்பச்சை நிலந்தொ லைத்தோம்.

ஆழ்கிணற்றில் எரிவாயு தோண்ட லானோம்
      அடிவயிற்றில் பசியடக்க வேண்ட லானோம்
பாழ்படுத்தி நிலங்களினை வளமி ழக்கும்
      பக்குவத்தில் மலடாக்கி பச்சை வண்ணம்
சீழ்பிடிக்கச் செய்திட்டோம் சிந்தை யொன்றில்
      சீவனின்றி நிறமிழக்கச் செய்து விட்டோம்
வாழ்ந்தென்ன பயன்!இனிப் பச்சைநி லங்கள்
      வகையின்றித் தொலைத்துவிட்டோம் வாழ்நாள் வீணே.           

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com