பச்சை நிலமே பச்சை நிலமே
பதுங்கியதும் நீ எங்கோ பச்சைநிலமே?!
இச்சை கொண்டு கச்சை கட்டி எங்கணுமே தேடினாலும்
உன்னைக் காணாமல் உறவை இழந்ததுபோல்
கண்ணில் நீர்மல்கக் காதலியைப் பறிகொடுத்தது போல்
வெட்ட வெளி நிற்கும் வேற்று மனிதனைப் போல்
உள்ளம் பரிதவிக்க உடலெல்லாம் துடிதுடிக்க
நெஞ்சம் படபடக்க நெறிகள் தழுதழுக்க
காண்போமோ என்று கண்கள் விழி பிதுங்க
கண்ணாமூச்சி ஆடிக் கலங்கடித்தலும் நியாயமோ?
என்னைத் தேடுவதாய் எடுத்தியம்பும் நாயகரே!
பச்சைநிலம் என்னைப் பாடாய்ப் படுத்தி நித்தம்
வளர்ந்திருந்த மரத்தை வாடாதிருந்த புல்லை
படர்ந்திருந்த செடியை படுத்திருந்த கொடியை
பச்சையாய் இந் நிலத்தை நான் ஆக்கி வைத்திருந்த அழகை
கிழித்தும் அழித்தும் கிஞ்சித்தும் இரக்கமின்றி
வெட்டியும் கொளுத்தியும் விபரம் ஏதுமின்றி
ஒழித்துக் கட்டிய உத்தமரல்லவா நீவீர்!
எல்லாவற்றையும் நடத்தி விட்டு இப்போது ஓலமிட
எப்படித்தான் உம்மனது இசைவாய் வந்ததுவோ?!
தப்புதான் யாம் செய்தது!சரியாய் இப்போ துணர்ந்தோம்!
கண்கெட்டபின் செய்யும் சூரிய நமஸ்கார மிது!
பணத்தின் மீது கொண்ட வெறி பச்சையைப் பார்க்கவில்லை!
பச்சை இருந்தால்தான் பாரினில் வாழ்வென்று
அப்போது நினைக்கவில்லை!ஆனாலும் இப்போது
முழுதாய் மிகவுணர்ந்தோம்!முழு மூச்சாய் நாங்களினி
மரம் வளர்த்து செடி பெருக்கி மகிழ்வாய் அது வளர
இறுதி மூச்சுவரை இன்பமாய்ப் பணியாற்றிடுவோம்!
இழந்த பச்சையினை இவ்வுலகம் காண வைப்போம்!
வருங்கால இளைஞர்க்கு பச்சை நிலம் பரிசளிப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.