பச்சை நிலம் : அழகூர். அருண்.  ஞானசேகரன்

Updated on
1 min read
பச்சை  நிலமெலலாம்  பழுப்புநிலம்  ஆனதென்ன
         பாலாறு  போலயின்று  காவிரியும்  வறண்டதென்ன ?
உச்சநீதி  மன்றம்தன்  தீர்ப்புதனைத்  தந்திட்டும்
         ஒருசொட்டு  நீர்தரவும்  கன்னடியரர்  இணங்கவில்லை!
பிச்சைதனைப்  போடுதல்போல்  கன்னடியர்  எண்ணுகிறார்,
         பிளவுபடும்  நாடிதுவும்  இதுதொடரும்  போதினிலே!
நிச்சயமாய்  இதுதன்னை  நாம்சகிக்கத்  தான்தகுமோ,
         நீதிமன்றத்  தீர்ப்புதன்னை மதிக்காமல்  இருப்பதுவோ ?

பச்சை  வயல்களை  எங்கெங்கும்  நாட்டினில்
                  பார்க்கின்ற  வகைதனிலே,
         பலப்பல  ஆறுகள்  இணைந்திடக்  காண்பதே
                  பவித்திரம்  என்றாகுமே!
கச்சித  மாகவே  ஆறுகள்  இணைந்திடக்
                 காண்பதே  நம்கடமை;
         கருத்துடன்  செயலபட்டு  வெற்றியைப்  பெற்றுநம்
                 காலத்தை  வென்றிடலாம் !
நிச்சயம்  இணைப்பெலாம்  நடந்திட  வேண்டும்
                நிலைத்தநல்  வளமைபெற;
        நெஞ்சுரம்  தனைக்கொண்டு  செயல்தனில்  இறங்கிட
                நிச்சயம்  முடித்திடலாம்!
இச்சகந்  தனில்நாம்  தன்னிறை  வடைவோம்
                இல்லைபசி  பிணியென்போம் ;
         இந்திய  நாடிதன்  வளமைக்கும்  பெருமைக்கும்
                 இதுவே  வேண்டுமென்போம் !

பார்க்கப்  பார்க்கநல்ல  பரவசம்  தருவதும்
                 பச்சை  வயல்களன்றோ,
         பாரத  நாடிதன்  உயிர்மூச்  சாவதும்
                 பயிர்தொழில்  தானல்லவோ ?
ஊர்யெங்கும்  வயல்கள்  உண்டென்றப்  போதிலும்
                 உண்டாமோ  நீர்வளமை?
         உரியநற்  காலத்தில்  நீரதும்  இல்லையென
                 உயருமோ  விளைச்சலதும்?
கூர்கெட்டோர்  தானிதை  உணர்ந்திடா  திருப்பதும்
                 கொஞ்சமும்  கவலையின்றி;
         கோதாவரி  நீரெலாம்  கடல்தனில்  கலப்பதும்
                 கொடுமையே  தானல்லவோ?
நீர்வளம்  தானெந்த  நாட்டுக்கும்  முதல்வளம்
                 நிலைத்தநல்  மூலதனம் ;
         நீர்சென்று  கடல்தனில்  கலக்கா  திருந்திட
                 நினைக்கட்டும்  அரசாங்கம் !

ஆழமானக்  கிணரெங்கும்  இல்லாநன்  நாடு
           ஆனாலும்  காவிரியால்  வளம்கொழித்த  நாடு!
வாழவைக்க  காவிரியாள்  வருடமெலாம்  வருவாள்
            வனிதையவள்  தமிழகத்தின்  மருமகளென்  றாவாள் !
மோழைகளே  நீர்வரத்தை  தடுத்திடுவ  தெல்லாம்,
            முப்போகம்  வளைநிலங்கள்  கதியென்ன  ஆகும் ?
சோழநாட்டின்  பெருமையதும்  சுணக்கமுறத்  தகுமோ,
            சுதந்திரத்தைப்  பெற்றிட்டதன்  பலனுமிது  தானோ ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com