கை கோர்ப்போம்: -ரெத்தின.ஆத்மநாதன்

Updated on
1 min read

ஆணும் பெண்ணும் கைகோர்த்தால்
ஆனந்த    மயமாகும்     இல்லறம்!
ஊரார் கைகள் இணைந்து பிடித்தாலே
ஊர்ந்து சுழன்றிடும் தேர்ச் சக்கரங்கள்!

எல்லோர் கைகளும் கோர்வையாய்ச் சேர்ந்தால்
எல்லாம்  இங்கு  இன்ப  மயமே!
பத்துவிரல்கள் செய்ய முடியாத தை
பல்லாயிரம் விரல்கள் நடத்திக் காட்டும்!
இணையும் கோடுகள் மெலிவதுமில்லை!

இணைந்த கைகள் தோற்பதுமில்லை!
சூதினைக் கண்டால் கொதித்திட வேண்டும்!
சுயமாய் நாமும் கை கோர்த்திட வேண்டும்!

ஓட்டைப் பெற்று போன எவரும்
உண்மையாய் நாட்டை ஆள்வது பற்றி
கனவிலும்கூட நினைப்பதும் இல்லை
காசையள்ள மறப்பதும் இல்லை!

ஐந்து வருடங்கள் மக்களைப் பற்றி
அணுவளவேனும் எண்ணுவதும் இல்லை!
பதவி சுகத்தில் பண அடை காத்து
பார்த்துச் சேர்க்கிறார் ஏராள பணத்தை!

தேர்ந்தவர் எவரும் சிறப்பில்லையெனில்
ஆண்டுக்கொரு முறை அவரை நாம் மாற்றிட
தேர்தல் விதிகள் மாறிட வேணும்!
செய்யவே அதனைக் கை கோர்த்திட வேணும்!

வக்கீல் பலரும் நல்லவர் இல்லை!
வாதிடும் வார்த்தையில் வாய்மையும் இல்லை!
நீதியை நாட்டும் அரசர்கள் பலரும்
நேர்மையாய் உழலும் தன்மையில் இல்லை!

இருநூறு கோடி வாங்கிக் கொண்டே
எழுதினார் தீர்ப்பை மாற்றி என்று
ஊரெங்கும் கேட்க உரத்துச் சொல்லியும்
ஒரு நடவடிக்கையும் இதுவரை இல்லை!

குமாரசாமி குற்றவாளியா?சட்டப் பஞ்சாயத்து 
கூறியதில் ஏதும் குற்றங்கள் உண்டா?
கேட்டே நாமும் கோர்க்க வேண்டும் கை
கேடுகளை ஈண்டு களைந்திட வென்றே!

காக்கிச் சட்டையர் நம் நண்பர்களென்று 
காது    கிழிய    சொன்ன     பின்னாலும்
ஒருவரும்  அதனை     நம்புவ     தில்லை!
உண்மைக்கு அவர் துணை போவதுமில்லை!

அரசு    நீதி    காவல்     மூன்றும்
அடாவடித் தனத்தை விட்டொழித்தாலே
நாட்டில்   நீதி   நடமாடி  மகிழும்
நாமும் அமைதியாய் வாழ்ந்து விடலாம்!

எல்லாம் இருப்பது நமது கைகளில்
என்றே சொன்னால் அதில் மிகையில்லை!
எழுந்தே வாருங்கள்!ஏற்போம் உறுதி!
கோர்ப்போம் கைகளை!கூடி வெல்வோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com