சூரிய தாகம்: அழகூர்.  அருண்.  ஞானசேகரன்

Updated on
1 min read

சூரியன்மிக  தாகமுற்று  சுத்தமாக  நீர்வுறிஞ்சிட
பாரினிலே  மழைகுறையப்  பார்த்திட்டோம் ! -- மாரிஅன்று
மும்முறை  நாடெங்கும்  முறையாகப்  பெய்ததுவாய்
நம்முன்னோர்  சொன்னதனை  நம்பு !

வெகுவாக  மழைகுறைந்து  விட்டதெலாம்  நாடாளத்
தகுதியிலார்  தமைதேர்ந்த  தால்தானாம்! -- வகுத்திட்ட
அறநூல்கள்  கூறுமிதை ; அறியாதார்  மூடர்களே !
மறந்ததே  இதைநம்மின்  மனம் !

ஆதவனின்  கருணையதே  அகிலமதை  வாழ்விக்கும் ;
தோதாக  மழைபொழியத்  துணைநிற்கும் ! -- ஏதமிலா,
ஆட்சியதும்  நடக்கத்தான்  அதுகருணை  பொழிவதெலாம் ;
மாட்சிமிக்கோர்  தனைதேர்தல்  மாண்பு !

சூரியனின்  தாகமதால்  சுருங்கியதே  மழைவளமும் ,
யாரிதனை  சரிசெய்வார்  இனியேனும் ? -- நீரின்றி
வறண்டிட்ட  விளைநிலங்கள் , வாட்டமுற்றத்  தமிழ்மக்கள் ;
மறந்ததுமேன்  வருணனின்  மனம் ?

நீரின்றி  உயிர்களதும்  நிலைத்திடுமோ  மண்மீதில் ,
கூரியநல்  மதிதீர்வைக்  கொடுத்திடுமோ ? -- பாரினிலே ,
ஆதவனின்  கருணையதே  ஆக்குவதும்  அழிப்பதுவும் ;
ஏதவனின்  கருணைக்கு  இணை ?                

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com