கோடைமழை பெய்துமண்ணைக் குளிர்விக்க வேண்டும் குறைவின்றி நாடெங்கும் பயிர்விளைய வேண்டும் !பீடையெலாம் விலகிமக்கள் பேரின்பம் கண்டிடவே பெரிதுமாய் மழைதனையே நம்பும்நம் நாடதுவும் !ஓடைஆறு எல்லாமும் பெருக்கெடுக்கத் தானே உயர்வடையும் விவசாயம் உலகோர்பசி தீர்க்க !நாடைவறட்சி வாட்டுவதும் கொடுங்கோலர் தமைநாம் நாடாளத் தேர்வதனால் ; உணர்த்தும்அற நூல்கள் !வெள்ளமதும் வறட்சியதும் மாறிமாறி நாட்டின் விளக்கமதை அழிப்பதுமேன் இரண்டாண்டுக் காலம் ?கொள்ளையரகள் தமைதேர்ந்து ஆளவிட்டப் பலனோ , கொடுமைதனை மக்கள்செய்ய மழைபெய்யத் தகுமோ ?உள்ளபடி இன்னதைநாம் உணரத்தான் வேண்டும் உத்தமர்கள் தமையேநாம் தேர்ந்தெடுக்க வேண்டும் !கள்ளமனங் கொண்டவர்கள் நாடாளக் காண காலத்தில் மழைபொழியக் காணாதெந்த நாடும் !ஏரிமற்றும் குளங்கள் தன்னில் -- எங்கும் எதிலுமே நீரில்லை என்றிடமாரியின்று பொய்த்ததும் ஏனோ -- உலகில் மண்விளைக்கும் சக்திவே றெதுவோ ?ஊரினில் நாட்டினில் எங்கும் -- வேண்டும் உழவுவளம் தழைத்தே ஓங்கிடக்கோரிடும் மக்கள் மகிழ்வுற -- இனி கோடைமழை கொட்டிடத் தகுமே !கார்மேகம் கொட்டிடத் தானே -- எங்கும் கழனிகளில் நெல்மணி விளையும் !நீர்கொண்ட மேகங்கள் வானில் -- தினம் நிறைந்திட்டும் பொழியா திருந்திடல்யார்செய்தக் குற்றமது என்றே -- இன்று எண்ணியெண்ணி மாய்கின் றோம்நாம் !கூர்கெட்டு , நாடிதை ஆண்டிட -- நாம் கொடியவரைத் தேர்ந்ததன் பலனே !மாதமெலாம் மும்மாரி பொழிந்ததொரு காலம் மாண்புற்றோர் நாடாண்டக் காலமக் காலம் !ஏதமிலா வகைதன்னில் வருணனவன் கருணை இன்னாட்டைக் காத்ததனை பலநூல்கள் கூறும் !ஆதவனும் இதமான கருணைதனைக் கொள்ள ஆனைகட்டிப் போரடித்தார் தமிழகத்தில் அன்று !தீதற்ற வகைதன்னில் தமிழகத்தை இயற்கை தீர்க்கமுடன் காத்ததெலாம் நல்லாட்சி யாலே !கார்மேகம் மழைபொழியக் காணுகின்ற வகையில் கருத்துடனே ஆய்வதுநம் கடமையென்றே ஆகும் !நீர்கொண்ட மேகமெலாம் நித்தம்வந்தப் போதும் நின்றுமழை பொழியாமல் செல்கிறதே இன்றும் !கூர்கொண்ட மதித்திறனால் தீர்வுதனைக் காண குவலயத்தில் மழைபொழியா திருந்திடுமோ எங்கும் ?போர்க்கால அடிப்படையில் ஆய்வதுநம் கடனே, பொல்லாத வறட்சியதும் இல்லாதாகி விடுமே !கார்காலம் வறண்டதொரு காலமெனப் போச்சு, கரம்பாக நிலங்கள்தனைக் காணும்நிலை ஆச்சு !சீர்மிக்க விவசாயம் இல்லையெனக் கண்டோம் செழிப்பின்றிப் போனதென்ன தஞ்சைவள நாடும் !நீர்இன்றி மக்களவர் என்செய்யத் தகுமாம், நிலம்மீது பயிர்விளைக்க நீர்தானே தேவை !யார்செய்தத் தவறோ மழைபொழிய வில்லை ; இன்னதே நம்கேள்வி , பதில்காண வில்லை !கோடைமழை தவறாமல் பொழிந்திடுதல் வேண்டும் , குடிக்கவும் நீரற்ற நிலைமாற வேண்டும் !ஓடைகளில் ஆறுகளில் நீர்வற்றிப் போச்சு, உன்னதநல் விவசாயம் இல்லையென ஆச்சு !மேடைதனில் வீசிவந்த மெல்லியப்பூங் காற்றும் மேனிதனைத் தகிக்கின்ற அனல்காற்று ஆச்சு !வாடைக்காற்றின் சுகமதனை கொண்டயிளந் தென்றல் வரவேண்டி நிற்கின்றோம் , சுகமதனைக் காண !வாட்டமுற்ற மக்கள்மேல் வருணனவன் கருணைகொண்டுநாட்டில்மழை பொழிவிக்க நலன்பெருகும் ! -- காட்டமுற்று ,பொழிவிக்கா திருந்துவிட புல்பூண்டும் கருகிடுமே ;அழிவுதனைக் கூட்டுவதேன் அவன் ?ஊர்செழிக்க மழைபொழிய, உழுதுழவர் பயிர்விளைக்க ,பார்தன்னில் இலாதொழியும் பஞ்சமதும் ! -- கார்மேகம்,கருணைதனை கொள்ளத்தான் காடுகள் விளைவதெலாம் ;வருணன்தனை போற்றிதினம் வாழ்த்து !விவசாயம் தழைத்தோங்க , வேண்டுமளவு மழைபொழிய,தவமிருந்து வேண்டுதின்று தமிழ்நாடே ! -- அவலநிலை ,இனியில்லா தொழிந்திடணும் இன்னாட்டில் ; பசியென்னும்பிணியேற்க நேர்வதோ பிழை ?சீரோடும் வியக்கத்தகு சிறப்போடும் ஊர்களிலேதேரோடும் வைபோகம் திருவிழாவில் ! -- பார்செழிக்க ,மழைபொழிந்து நாட்டுமக்கள் மகிழுறுவர் , மலர்ச்சியுடன்விழைவர்செய லாற்றவே விரைந்து !சென்னைமா நகரதுவே சீரழிவைக் கண்டுவிடஅன்னாளில் மழையால் அவதியுற்றோம் ! -- இன்னாளில்,வறட்சிதனைக் காண்பதேன் , வான்கருணை பொய்த்ததேன்,விரயமதைக் கூட்டிடுதே விண் !தேர்ஓடும் வைபோகம் தென்னாட்டில் நடந்துவரும் ;கார்பொழியக் காண்போம்நாம் காலத்தில் ! -- நீர்வற்றா,மண்ணானத் தஞ்சையிலே மரங்களெல்லாம் தீய்கிறதே !விண்ணே , மழைபெய்விக்க விழை !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.