எதிர்காலக் கனவொன்று வாழ்வினில் நமக்கு
இல்லாதப் போதிலெந்த ஏற்றமும் இல்லை !
மதிதன்னைக் கொண்டதொரு மாந்தரென் றாக
மறக்காமல் இலக்குதனை நோக்கிபய ணிப்பார் !
விதிவசத் தாலெதுவும் நடக்காதப் போதும்
விரக்திதனைக் கொள்ளாமல் விவேகமுடன் வேறு
புதியதொரு பாதைதனில் பயணிக்கத் துணிவார் ;
போற்றலுறத் தக்கபடி இலக்கினை அடைவார் !
எதிர்காலம் இல்லையென இடிந்தவர் தம்மை
எவர்வந்து காக்கவும் இயலாதாம் உண்மை !
விதிதன்னைப் பழித்திட்டு ஓய்ந்தவர் வாழ்வில்
வெற்றியிலை, மாறாகக் காண்பதும் தாழ்வே !
அதிமதுரத் தேனதனை சுவைத்திடல் வேண்டின்
அதற்காக மரமதனில் ஏறத்தான் வேண்டும்!
சதிகள்தனைக் கண்டஞ்சல் கோழைகளின் வாழ்வில்,
சாமர்த்யம் தனையிழக்க எதிர்காலம் இலலை !
எழுச்சிதனைக் கொண்டவர்க்கு நல்லயெதிர் காலம்
இல்லார்க்கு என்றென்றும் இலையுதிர் காலம் !
விழுந்தாலும் எழுந்தோடும் எண்ணம்வர வேண்டும்,
விவேகமதை என்னாளும் துணைகொள்ள வேண்டும்!
பழுதுற்ற வாழ்வென்றே ஆகிடுதல் எல்லாம்
பாதியில் நம்பிக்கை இழந்தவரின் வாழ்வே !
தொழுவதே நல்லயெதிர் காலந் தராதாம்
தொடர்ந்தநல் உழைப்பின்றி வெற்றிகிட் டாதாம் !
நாட்டின்எதிர் காலமதும் நம்மக்கள் கையில்
நலமான எதிர்காலம் தனைக்கண்டு உய்ய !
கோட்டைக்குள் புகுந்திடத் துடிப்பவர்கள் தம்மின்
குலப்பெருமை தம்மைநாம் ஆய்ந்திடல் வேண்டும் !
வேட்டைக்கா டென்றெண்ணி ஆட்டமிடு வோரை
வேருடன் களைவதெலாம் நம்கடமை தானே !
ஆட்டமிட்டு கோடிகண்டப் பலரைநாம் கண்டோம்
அவர்களைக் களைந்திடும் மனவுறுதி கொள்வோம் !
பயிர்களதன் எதிர்காலம் மழையதனின் கையில் ,
பாங்குடனே பெய்யத்தான் பயிரெலாம் விளையும் !
வெயிலுக்கும் இணையானப் பங்கதில் உண்டாம் ,
விவசாயம் தழைப்பதெலாம் வெய்யிலால் தானாம் !
மெய்யிதனை உணராமல் சிலரின்றும் சொல்வார்
மேலான எதிர்காலம் உன்கையில் என்றே !
பொய்யென்றே இன்னதைநான் விலக்கிவிட மாட்டேன்,
பொதுவாக எதிர்காலம் விதியதனின் கையில் !
மலர்ச்சியைக் கொண்டநல் எதிர்காலம் --- தன்னை
மனதினில் கொள்ளார் எவர்தானோ ?
சிலரின்று மலர்ச்சியை வேண்டிநின்றும் --- உழைக்க
சிறிதுமே துணிந்திடா திருக்கின்றார் !
பலரின்றும் மலர்ச்சியை வேண்டிநின்று --- இரவு
பகலென உழைத்தெதிர் காலமதை ,
நலமுறப் பெற்றதைக் காண்கின்றோம் --- அந்த
நயமும் போற்றிடத் தக்கதன்றோ ?
எதிர்காலக் கனவதுவே ஏற்றந்தரும் படிகள்எனப்
பதியட்டும் மனதினிலே பாந்தமுடன் ! --- சதிகண்டும்
உளந்தன்னில் சோர்வுதன்னை ஒருசிறிதும் கொள்ளாமல்
விளக்கமதைக் காண்கநீ விரைந்து !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.