நீதியைத் தேடி : ஆ.மகராஜன்

Updated on
1 min read

தங்களின் பிரச்சினைகளுக்குத் 
தீர்வு தருவார்கள் என்று நம்பித்
தேர்ந்தெடுத்தவர்களுக்குத்
தீராத பிரச்சினையாகி நிற்கிறார்கள் 
மாண்புமிகு மக்கள் பிரதிநிதிகள் ..

கோடிகளைக் குவிப்பதிலேயே
குறியாய் இயங்கும் இவர்களுக்கு,
பஞ்சம் பட்டினியால் தினம்
கொத்துக் கொத்தாய்
செத்து மடியும் அப்பாவி
விவசாயிகளைப் பற்றிய, 
கவலையும் இல்லை; 
அவர்களின்மேல்
கருணைகூட இல்லை.

இத்தனை வருடங்களில்
அவர்களின் பொருளாதாரத்தையோ
அவர்களுக்கான நீராதாரத்தையோ
மேம்படுத்த, உருப்படியாய்
திட்டங்களேதும் தீட்டவில்லை..
அதற்காய் அக்கறை கூட காட்டவில்லை..

விவசாயிகளிடமிருந்த விளைநிலங்களைப் பிடுங்கி 
வீட்டுமனகளாக்கி விட்டார்கள்.
நகரங்களின் விளிம்பிலிருந்த
நீர் நிலைகளையெல்லாம்  தூர்த்து 
பேருந்து நிலையங்களாக்கி விட்டார்கள்

இயற்கையிடமிருந்த
வளங்களனைத்தும் கொள்ளையடித்து,
வற்றாத ஜீவநதிகள் பாய்ந்த 
செழுமைப் பிரதேசங்களைக் கூட
வறண்ட பாலை நிலங்களாக்கி விட்டார்கள்..

நல்லாட்சி நடந்தால் மாதம் 
மும்மாரிப் பொழியுமாம்.
இவர்களால்தானோ இன்று,
வருடம் மும்மாரிப் பொழிவதற்கே
வானம் தயங்குகிறது..?

இவர்களின் தேர்தல் நேரத்துத்
தேன் தடவிய வாக்குறுதிகளிலும்
விநியோகிக்கப்பட்ட ஐநூறு ஆயிரங்களிலும்,

மதி மயங்கிய குடிமகன்கள் 
எழுதிய ஜனநாயகத் தீர்ப்புகள், 
அவர்களுக்கே இன்று எமனாகி நிற்கிறது ..!

பிரச்சினைகளுக்குத்
தீர்வு தர வேண்டியவர்களே
அவர்களின் தீராத 
பிரச்சினையாகி் நிற்கிறார்கள்..!

தீங்காகிப்போன தீர்ப்பை எழுதிவிட்டு,
நீதியைத் தேடிக்கொடிருக்கிரர்கள்,

பாவம், இன்றைய விவசாயிகளும், 
இந்திய ஜனநாயகமும்தான்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com