விடுதலை:  கு.முருகேசன்

Updated on
1 min read

கூண்டில் சிக்கிய கிளிக்கும்
குடிகாரனிடம் சிக்கிய பைங்கிளிக்கும்
மதுவில் சிக்கிய தமிழகத்திற்கும்
வேண்டும் விடுதலை!

மழலைக் கல்வி பயிலும்
பிஞ்சுக் குழந்தைகளுக்கு
புத்தகப் பொதி சுமப்பதில் இருந்தும்
வேண்டும் விடுதலை!

மாணவர்களுக்கு மதிப்பெண்ணிலிருந்தும்
பொதுத்தேர்வில் தோற்ற மாணவர்களுக்கு
தற்கொலை எண்ணத்தில் இருந்தும்
வேண்டும் விடுதலை!

வாய்பாடு தெரியாதவனுக்கு
கணக்கிலிருந்து விடுதலை வேண்டும்!
வாய்ப்பாட்டு தெரியாதவனுக்கு
இசையிலிருந்து விடுதலை வேண்டும்!

ஏழைக்கு வேண்டும்
பசியிலிருந்து விடுதலை!
பஞ்சத்திலிருந்து விடுதலை!
கடனிலிருந்து விடுதலை!
கஷ்டத்திலிருந்து விடுதலை!

தீராத நோய்
உள்ளோர்க்கு
வாழ்க்கையிலிருந்தே
வேண்டும் விடுதலை!

காவிரிக்கு வேண்டும்
கர்நாடகத்திலிருந்து விடுதலை!
கறுப்புப்பணத்திற்கு வேண்டும்
கறுப்புப்பண முதலைகளிடமிருந்து விடுதலை!

தமிழகத்திற்கு வேண்டும்
லஞ்சம் ஊழலில் இருந்து விடுதலை!
நீட் தேர்விலிருந்து விடுதலை!
தண்ணீர்ப் பிரச்சனையிலிருந்து விடுதலை!

பூவிலிருந்து தேன் எடுத்தால் இனிக்கிறது
பூமியிலிருந்து மீத்தேன் எடுத்தால் வலிக்கிறது
தமிழர்க்கு வேண்டும் இந்த வலியிலிருந்தும்
விடுதலை!

அந்நியர்கள் அடிமையிலிருந்து
விடுதலை பெற்றோம்!
அந்நியப் பொருளின் மோகத்திலிருந்து
விடுதலை பெறுவது எப்போது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com