குளம் வான் மழையை சேமிக்கும்
சேமிப்புக் கிடங்கு
சந்திர சூரியனின்
முகம் பார்க்கும் கண்ணாடி!
குளம், ஆடு மாடுகளின்
தண்ணீர் கிடங்கு!
பால் குடிக்காத பறவையின்
நீரூட்டி!
நீர் வற்றாத குளம்
குழந்தைகளின் நீச்சல் குளம்!
நீர் வற்றிய குளம்
குழந்தைகளின் ஆடுகளம்!
வற்றாத குளத்தில் நீர் குடித்த பறவைகள்
குளம் வற்றியபின் எங்கும் போகும்
நன்றி கெட்ட நண்பர்கள் போல!
வற்றிய குளத்தில், வேர் பற்றிய செடிகள்
எங்கும் போகாது நன்றியுள்ள நண்பர்கள் போல!
மழை வந்தால்
குளம் குட்டைகள் எழும்!
குளம் குட்டைகள் வீழ்ந்து கிடக்கிறது
மழையே எழுந்து வருவாயா?
குளத்தில் கல் ஏறிந்தால்
அலைகள் உருவாவது குளத்திற்கு அழகு!
குளத்தையே தூக்கி எறிந்துவிட்டு
அடுக்கு மாடிகளை உருவாக்குவது குளத்திற்கு அழிவு!
குளத்து நீர் பாய்ந்தால்
நெல் விளையும்!
குளத்து நீர் காய்ந்தால்
புல் விளையும்!
இரண்டு இலைகள் பெற
பலகோடி கொடுக்கும் அரசியல்வாதிகள்!
சிலகோடியில் குளங்களை வெட்டியிருந்தால்
பல இலைகள் கிடைத்திருக்கும்!
சந்திரனும் சூரியனும் கோடையில்
தன்னை அலங்கரித்துக் கொள்வதேயில்லை!
பூமியில்தான் முகம் பார்க்கும்
கண்ணாடி உடைந்ததால்!
வற்றாத குளம் மீனை வளர்க்கும்!
வற்றிய குளம் கீரையை வளர்க்கும்!
வளமான குளம் அசைவம்!
வற்றிய குளம் சைவம்!
தூண்டில் போடாமலே
மீன் பிடிக்கும் கொக்கு!
துவண்டுபோயுள்ளது
வற்றிய குளத்தைக் கண்டு!
ஆற்றுநீர் ஆவியாகாமல் தடுக்கும்
தெர்மோகோல் அரசுத் திட்டம்!
குளத்து நீர் ஆவியாகாமல் தடுக்க
எந்த நேரத்திலும் வரலாம்!
மனிதா உனக்கு தண்ணீர்
பாட்டலில் கிடைக்கும்!
எல்லா பாட்ட லும் தண்ணீரை
பூமியில் இருந்தே எடுக்கும்!
மனிதனின் தாகத்தை
வாட்டர் பட்டால்கள் தீர்க்கும்!
ஆடு மாடுகளின் தாகத்தை
வற்றாத குளமே தீர்க்கும்!
நீர் வற்றிய குளத்தைக் கண்டு
கண்ணீர் குளமாச்சு!
மனித குலம் செழிக்க
மழை நீரை சேமிக்க
வற்றிய குளத்தையும்
தூர் வாரி பாதுகாப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.