கருவில் வளரும் குழந்தையது
கலைந்தால் அதனின் தாக்கத்தை
உரியவள் மிகவும் உணர்ந்திடுவாள்
உற்றார் உறவினர் புலம்பிடுவர்!
சுமந்தவள் மிகவும் மகிழ்ந்திடவே
சுற்றங்கள் அனைத்தும் இணைந்திடவே
வயிற்றில் வளரும் குழந்தையது
வந்திட வேண்டும் உலகினுக்கே!
சுமப்பதை நமது பெண்களுமே
சுகமாய்த் தானே எண்ணிடுவர்!
எத்தனை குழந்தை பிறந்தாலும்
எப்படியோ அதனை வளர்த்திடுவர்!
கருவில் தொலைந்த குழந்தையாக
காவிரி இன்று கிடக்கிறது!
அரசியல் அதனின் உட்புகுந்து
ஆட்சி செய்து பார்க்கிறது!
கருவின் முட்டைக் கருவினையே
கறண்டி எடுத்து அழிப்பதுபோல்
காவிரி மணலைக் காசாக்கி
களிக்குது இங்கு ஒருகூட்டம்!
ஒவ்வொரு மனிதனும் உரிமையுடன்
ஒன்று சேர்ந்து கைகோர்த்து
அழித்திட வேண்டும் கயவர்களை
ஆக்கம் கெட்ட கூவைகளை!
அடுத்து வரப்போகும் தலைமுறைக்கு
அதுவே நாம் செய்யும் பேருதவி!
கருவில் தொலைந்த குழந்தையைப்போல்
கருகிட வைப்போம் கயவர்களை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.