இரண்டாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

ஐந்து பைந்தலைகள் ஆடுகின்ற பாம்பு
Updated on
1 min read

உய்ந்து போந்து என் உலப்புஇலாத வெம்தீவினைகளை
                             நாசம் செய்து உனது
அந்தம்இல் அடிமை அடைந்தேன், விடுவேனோ?
ஐந்து பைந்தலை ஆடு அரவுஅணை மேவிப் பாற்கடல்
                              யோக நித்திரை
சிந்தை செய்த எந்தாய், உன்னைச் சிந்தை செய்துசெய்தே.

திருப்பாற்கடலிலே ஐந்து பைந்தலைகள் ஆடுகின்ற பாம்புப் படுக்கையில் யோகநித்திரை செய்பவனே, பக்தர்களை எந்நாளும் எண்ணி அருள்செய்கிறவனே, எங்கள் தந்தையே, உன்னைச் சிந்தித்து நான் உய்ந்தேன், அழியாத கொடும் தீவினைகளை நாசம்செய்தேன், உனது அடிமையாகி, முடிவில்லாத சேவைகளைப் புரியவந்தேன், இனி உன்னை விடுவேனோ? (விடமாட்டேன்.)

•••

பாடல் - 6

உன்னைச் சிந்தை செய்துசெய்து உன் நெடுமாமொழி
                          இசை பாடி ஆடி என்
முன்னைத் தீவினைகள் முழுவேர் அரிந்தனன் யான்,
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல்மார்வம்
                                  கீண்ட என்
முன்னைக் கோள் அரியே, முடியாதது என் எனக்கே?

பெருமானே, உன்னை மனத்தால் இகழ்ந்தவன் இரணியன், அவனுடைய அகன்ற மார்பைப் பிளப்பதற்காக முன்பு நரசிம்மமாக வந்த என்னுடைய தெய்வமே, உன்னை எண்ணி எண்ணி, உன்னுடைய உயர்ந்த, சிறந்த பாடல்களை இசையோடு பாடி, ஆடி, என்னுடைய பழைய தீவினைகள் அனைத்தையும் வேரோடு வெட்டிவிட்டேன், இனி என்னால் முடியாதது எது? (ஏதுமில்லை, உன் அருளால் எல்லாமே எனக்குச் சாத்தியமாகும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com