இரண்டாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 9, 10, 11

உன்னை நான் அடைந்தேன்
Updated on
1 min read

எந்தாய், தண் திருவேங்கடத்துள் நின்றாய், இலங்கை
                                செற்றாய், மராமரம்
பைந்தாள் ஏழ் உருவ ஒருவாளி கோத்த வில்லா,
கொந்துஆர் தண், அம் துழாயினாய், அமுதே, உன்னை
                          என்னுள்ளே குழைத்த எம்
மைந்தா, வான் ஏறே, இனி எங்குப் போகின்றதே?

என் தந்தையே, குளிர்ந்த திருவேங்கடத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள் செய்கிறவனே, இலங்கையை அழித்தவனே, ஏழு மராமரங்களின் பசுமையான அடிப்புறங்களை ஊடுருவிச் செல்லும்படி இணையற்ற அம்பு ஒன்றைக் கோத்த வில்லாளியே, கொத்தான, குளிர்ந்த, அழகிய துழாய்மாலை அணிந்தவனே, அமுதே, உன்னை எனக்குள்ளே கலந்தவனே, இளைஞனே, வானுலகத்தவருக்குச் சிங்கம் போன்றவனே, இனி என்னைவிட்டு எங்கே செல்கிறாய்?

•••

பாடல் - 10

போகின்ற காலங்கள், போய காலங்கள், போகு காலங்கள்,
                                  தாய், தந்தை, உயிர்
ஆகின்றாய், உன்னை நான் அடைந்தேன், விடுவேனோ?
பாகின்ற தொல்புகழ் மூஉலகுக்கும் நாதனே, பரமா, தண்
                                          வேங்கடம்
மேகின்றாய், தண் துழாய் விரை நாறு கண்ணியனே.

பழமையான, எங்கும் பரவுகின்ற புகழைக்கொண்ட மூன்று உலகங்களுக்கும் தலைவனே, உயர்ந்த தெய்வமே, குளிர்ந்த திருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவனே, குளிர்ந்த, நறுமணம் வீசுகிற துளசிமாலை அணிந்தவனே, இன்றுமட்டுமல்ல, கடந்தகாலம், எதிர்காலத்திலும் எனக்குத் தாய், தந்தை, உயிர் அனைத்தும் நீயே, உன்னை நான் அடைந்தேன், இனி விடுவேனா? (விடமாட்டேன்.)

•••

பாடல் - 11

கண்ணித் தண் அம் துழாய்முடிக் கமலத்தடம்
                  பெரும்கண்ணனைப் புகழ்
நண்ணித் தென்குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வுஇல் அந்தாதி ஆயிரத்துள் இவையும்
                     ஓர் பத்து இசையொடும்
பண்ணில் பாடவல்லார், அவர் கேசவன் தமரே.

திருமுடியிலே குளிர்ந்த, அழகிய துளசிமாலையை அணிந்தவன், தாமரை போன்ற பெரிய திருக்கண்களைக் கொண்டவன் எம்பெருமான், அவனுடைய புகழை எண்ணித் தென்குருகூர்ச் சடகோபன் மாறன் அவனில் ஈடுபட்டார், எண்ணிக்கை தவறாத அந்தாதிப் பாடல்கள் ஆயிரம் செய்தார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் இசையோடும் பண்ணோடும் பாடவல்லவர்கள் அந்தக் கேசவனின் அடியவர்களாவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com