இரண்டாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல்  9, 10

சிவந்த தாமரைக்கண்ணன்
Updated on
1 min read

சிரீதரன், செய்ய தாமரைக்கண்ணன் என்றுஎன்று இராப்பகல்வாய்
வெரீஇ, அலமந்து, கண்கள் நீர்மல்கி, வெவ் உயிர்த்து உயிர்த்து
மரீஇய தீவினை மாள, இன்பம் வளர, வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை, என் இருடீகேசனே.

சிரீதரன், சிவந்த தாமரைக்கண்ணன் என்று உன்னை எண்ணி இரவும் பகலும் பாடினேன், உன்னைத் தேடினேன், காணாமல் அஞ்சினேன், மனம் குழம்பினேன், கண்களில் நீர் மல்கியது, பெருமூச்சுவிட்டேன், இவ்வாறு நான் உன்னை எண்ணியதால், என்னை அடைந்திருந்த பெரிய பாவங்கள் நீங்கின, இன்பம் வளர்ந்தது, இவ்விதமாக ஒவ்வொரு நாளும் உன்னை என் மனத்தில் இருத்தி வைத்தவனே, என் இருடீகேசனே, உன்னை வணங்குகிறேன்.

•••

பாடல் - 10

இருடீகேசன், எம்பிரான், இலங்கை அரக்கர்குலம்
முருடுதீர்த்த பிரான், எம்மான், அமரர் பெம்மான் என்றுஎன்று
தெருடியாகில், நெஞ்சே, வணங்கு, திண்ணம் அறி, அறிந்து
மருடியேலும் விடேல் கண்டாய், நம்பி பற்பநாபனையே.

நெஞ்சே,

இருடீகேசன், நம் தலைவன், இலங்கை அரசர்குலத்தைச் சேர்ந்த முரடனான இராவணனை வீழ்த்தியவன், எம்மான், தேவர்களின் தலைவன் என்றெல்லாம் அவனை அழைத்துத் தெளிவாகு, அவனை வணங்கு, அவனே பெருந்தெய்வம் என்று உறுதியாக அறிந்துகொள், அதன்பிறகும், உனக்கு ஏதேனும் மயக்கம் வரக்கூடும், அப்போதும், ஆண்களில் சிறந்தவனான அந்தப் பற்பநாபனை விட்டுவிடாதே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com