பற்பநாபன், உயர்வுஅற உயரும் பெரும்திறலோன்,
எற்பரன், என்னை ஆக்கிக்கொண்டு எனக்கே தன்னைத்தந்த
கற்பகம், என் அமுதம், கார்முகில்போலும் வேங்கடநல்
வெற்பன், விசும்போர் பிரான், எந்தை தாமோதரனே.
பற்பநாபன், தன்னைவிட உயர்வாக யாரும் இல்லை என்கிற அளவுக்கு உயர்ந்த, பெரிய திறமையுடையவன், என் பரம்பொருள், என்னைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்டு, எனக்கே தன்னைக் கொடுத்த கற்பகம், என் அமுதம், கருத்த மேகத்தைப் போன்ற திருவேங்கடம் எனும் நல்ல மலையைக் கொண்டவன், வானிலுள்ள தேவர்களின் தலைவன், நம் தந்தை தாமோதரன்.
•••
பாடல் - 12
தாமோதரனை, தனிமுதல்வனை, ஞாலம் உண்டவனை,
ஆமோ தரம்அறிய ஒருவர்க்கு? என்றே தொழும் அவர்கள்
தாமோதரன் உரு ஆகிய சிவற்கும் திசைமுகற்கும்
ஆமோ தரம்அறிய எம்மானை, என் ஆழிவண்ணனையே?
தாமோதரனின் உருவமாகத் திகழ்கிறவர்கள் சிவனும் பிரம்மனும். அவர்கள் 'அந்தத் தாமோதரன், தனிமுதல்வன், உலகை உண்டவனுடைய தன்மைகளை யாராலும் அறிந்துகொள்ள இயலுமோ?' என்று சொல்லி வணங்குகிறார்கள்.
அவ்வாறு வணங்கும் அவர்களாலும் எம்மான், என் ஆழிவண்ணனுடைய தன்மையை அறியமுடியுமோ? (முடியாது.)
•••
பாடல் - 13
வண்ண மாமணிச்சோதியை, அமரர் தலைமகனை,
கண்ணனை, நெடுமாலை தென்குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ்மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப்பாட்டு அண்ணல்தாள் அணைவிக்குமே.
நீலமணிபோன்ற சிறந்த சோதி வடிவானவன், தேவர்களின் தலைவன், கண்ணன், நெடுமால், அவனைத் தென்குருகூர்ச் சடகோபன் ஆயிரம் தமிழ்ப்பாடல்களால் பாடிப் பாமாலை அணிவித்தார்.
அந்த ஆயிரத்தில், 'பன்னிரு நாமப்பாட்டு' எனப்படும் இந்தப் பன்னிரண்டு பாடல்களையும் பக்தர்கள் பாட வேண்டும், அவ்வாறு பாடுவோரை இந்தப் பாடல்கள் திருமாலின் திருவடிகளில் சேர்ப்பிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.