இரண்டாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

ஹயக்ரீவர் வடிவமாக, ஆமையாக
Updated on
1 min read

ஓவாத் துயர்ப்பிறவி உள்பட மற்று எவ் எவையும்
மூவாத் தனிமுதலாய் மூஉலகும் காவலோன்
மாஆகி ஆமையாய் மீன்ஆகி மானிடம்ஆம்
தேவாதி தேவபெருமான் என் தீர்த்தனே.

ஹயக்ரீவர் வடிவமாக, ஆமையாக, மீனாக, ராமன், கண்ணன் எனும் மனிதவடிவாக, இப்படிப் பல அவதாரங்கள் எடுத்த பெருமான், தேவர்களுக்கெல்லாம் தலைவன், என் புனிதமான தெய்வம், ஓய்வில்லாத துயரம் தொடர்கிற பிறப்புமுதலான அனைத்துக்கும் அவனே தனிக்காரணமாகத் திகழ்கிறான், சோம்பலின்றி அப்பணிகளை நிகழ்த்தி மூன்று உலகங்களையும் காக்கிறான்.

•••

பாடல் -  6

தீர்த்தன் உலகுஅளந்த சேவடிமேல் பூந்தாமம்
சேர்த்தி அவையே சிவன்முடிமேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்துஒழிந்த பைந்துழாயான் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக்கிடந்ததே?

உலகை அளந்த புனிதனாகிய எம்பெருமானின் சிறந்த திருவடிகளில் அர்ஜுனன் பூமாலையைச் சூட்டினான், பிறகு, அவனே அந்தப் பூமாலையைச் சிவனின் திருமுடிமீது கண்டான், ஆகவே, திருமாலே சிறந்த தெய்வம் என்று தெளிந்துகொண்டான்,  பசுமையான துளசிமாலையை அணிந்த அந்தப் பெருமானின் பெருமையை, இன்னொருவரும் பேச வேண்டுமோ? (வேண்டியதில்லை, அதனை அனைவரும் நன்கு அறிவார்கள்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com