'எங்கும்உளன் கண்ணன்' என்ற மகனைக் காய்ந்து
'இங்கு இல்லையால்' என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே?
'கண்ணன் எங்கும் இருக்கிறான்' என்றான் பிரகலாதன். அவன்மீது கோபம்கொண்டான் அவனுடைய தந்தை இரணியன். 'நீ சொல்லும் கண்ணன் இந்த இடத்தில் இல்லையே' என்று ஒரு தூணை அடித்தான். உடனடியாக, அந்த இடத்திலேயே தோன்றி அவனை வீழ்த்தினான் நம் சிங்கப்பிரான். அவனுடைய பெருமையை நம்மால் ஆராய இயலுமா?
•••
பாடல் - 10
சீர்மைகொள் வீடு, சுவர்க்கம், நரகு ஈறா,
ஈர்மைகொள் தேவர் நடுவா, மற்று எப்பொருட்கும்
வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனிநின்ற
கார்முகில்போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே.
சிறப்புநிறைந்த மோட்சம், சுவர்க்கம், நரகம் ஆகியவற்றின் முடிவாகத் திகழ்கிறவன் எம்பெருமான், அன்புகொண்ட தேவர்களைத் தனக்கு நடுவாகக் கொண்டவன் அவன், மற்ற எல்லாப் பொருள்களுக்கும் வேராக, முதலாக, விதையாகப் பரந்து தனித்து நிற்கிறவன், கருத்த மேகம் போன்ற வண்ணம் கொண்ட அந்தக் கண்ணனை நான் கண்டேனே.
•••
பாடல் - 11
கண் தலங்கள் செய்ய கருமேனி அம்மானை
வண்டு அலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்தலையில் வீற்றிருந்து ஆள்வார் எம் மாவீடே.
சிவந்த கண்கள், கருத்த மேனி கொண்ட அம்மான், திருமால். வண்டுகள் திரிகிற சோலைகள் நிறைந்த திருவழுதியாகிய வளமான நாட்டைச் சேர்ந்த நம்மாழ்வார், சிறந்த பண்களில் ஆயிரம் தமிழ்ப் பாடல்களில் அவனைப் பாடினார், அவற்றில் இந்தப் பத்து பாடல்களையும் பாட வல்லவர்கள், பரமபதத்தை அடைந்து இன்பம் அனுபவிப்பார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.