இரண்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 9, 10, 11

வானுலகத் தேவர்கள் போற்றுகிற
Updated on
1 min read

யானே என்னை அறியகிலாதே,
யானே, என் தனதே என்றுஇருந்தேன்,
யானே நீ, என் உடைமையும் நீயே,
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே.

வானுலகத் தேவர்கள் போற்றுகிற எங்கள் தலைவனே, எம்பெருமானே, என்னை நானே அறியாமலிருந்தேன், நான், என்னுடையவை என்று வாழ்ந்துவந்தேன், உண்மையில் நான் என்பதும் நீயே, என்னுடைய உடைமைகள் அனைத்தும் உன்னுடையவைதான். (அதனை இப்போது நான் உணர்ந்தேன்.)

•••

பாடல் - 10

ஏறுஏல் ஏழும் வென்று, ஏர்கொள் இலங்கையை
நீறே செய்த நெடும்சுடர்ச்சோதி,
தேறேல் என்னை, உன் பொன்அடி சேர்ந்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே.

ஏழு எருதுகளை வென்றவனே, அழகிய இலங்கையைப் பொடிப்பொடியாக்கி வென்ற நெடும்சுடர்ச்சோதியே, என்னை நம்பாதே, விரைவில் என்னை உன் பொன் திருவடிகளில் சேர்த்துக்கொண்டுவிடு, எப்போதும், வேறு எங்கேயும் செல்லவிடாதே.

பாடல் - 11

விடல்இல் சக்கரத்து அண்ணலை மேவல்
விடல்இல் வண்குருகூர்ச் சடகோபன் சொல்
கெடல்இல் ஆயிரத்துள் இவை பத்தும்
கெடல்இல் வீடுசெய்யும் கிளர்வார்க்கே.

தன்னைவிட்டு எப்போதும் நீங்காத சக்ராயுதத்தை ஏந்திய அண்ணல், எம்பெருமான், அவனை எப்போதும் விடாமல் வணங்குகிறவர், வளம் நிறைந்த குருகூர்ச் சடகோபர், அப்பெருமானைப் பற்றி ஆயிரம் பாடல்களைக் கேடில்லாத சொற்களால் பாடிவைத்தார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் கற்கிறவர்களுக்கு, அழிவில்லாத மோட்சம் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com