இரண்டாம் பத்து பத்தாம் திருமொழி - பாடல் 9, 10, 11

அரும்புகள் மலர்கிற திருமலை
Updated on
1 min read

வழக்குஎன நினைமின் வல்வினை மூழ்காது,
அழக்கொடி அட்டான் அமர் பெரும்கோயில்
மழக்களிற்று இனம்சேர் மாலிருஞ்சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே.

வலிய வினைகளில் மூழ்காதீர்கள், பூதனை என்கிற பேய்ப்பெண்ணை அழித்த எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் பெருமைகொண்ட கோயில், இளமையான யானைகள் கூட்டமாகச் சேரும் திருமாலிருஞ்சோலையைத் தொழ வேண்டும் என்று எண்ணுங்கள், அவனைத் தொழுதுவாழ்வதே முறை என நினையுங்கள், எதிலும் வெற்றிபெறுவீர்கள்.

•••

பாடல் - 10

சூதுஎன்று களவும் சூதும் செய்யாதே,
வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுஉறு மயில்சேர் மாலிருஞ்சோலை
போதுஅவிழ் மலையே புகுவது பொருளே.

திருடுவதாலும் சூதாடுவதாலும் வெற்றி வரும் என்று எண்ணாதீர்கள், அச்செயல்களைச் செய்யாதீர்கள், வேதத்தை முன்பு விரித்துரைத்த எம்பெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் கோயில், பெண் மயில்களோடு ஆண் மயில்கள் மகிழ்ச்சியாகக் கூடிவாழும் திருமாலிருஞ்சோலை, அங்கே அரும்புகள் மலர்கிற திருமலை உள்ளது, அதனைச் சென்று சேர வேண்டும், அதுவே விலைமதிப்பற்ற செல்வம்.

•••

பாடல் - 11

பொருள்என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ்மேல்
மருள்இல் வண்குருகூர் வண்சடகோபன்
தெருள்கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்து
அருள்உடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே.

அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காக இந்த உலகத்தைப் படைத்தான் எம்பெருமான், மயக்கமில்லாத தெளிவையும் வளத்தையும் கொண்ட குருகூர்ச் சடகோபன், அத்தகைய பெருமானின் புகழை ஆயிரம் பாடல்களில் பாடினார், கேட்போர் ஞானம் பெறும்படி பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களும் சிறப்பு வாய்ந்தவை, அவற்றைப் பாடுகிறவர்களின் பாவங்களை அழிக்கும், அருள்புரியும் பெருமானின் திருவடிகளில் அவர்களைச் சென்றுசேர்க்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com