

பாடல் - 1
சீலம் இல்லாச் சிறியனேலும், செய்வினையோ பெரிதால்,
ஞாலம் உண்டாய், ஞானமூர்த்தி, நாராயணா என்று என்று
காலம்தோறும் யான் இருந்து கை தலை பூசலிட்டால்,
கோலமேனி காண வாராய், கூவியில் கொள்ளாயே.
எம்பெருமானே, நான் சிறப்பில்லாத சிறியவன், பெரிய தீவினைகளைச் செய்தவன், உலகத்தை உண்டவனே, ஞானமூர்த்தி, நாராயணா என்று காலந்தோறும் நான் கூவுகிறேன், கைகளைத் தலைக்குமேலே வைத்து வணங்குகிறேன், அப்போதும், உன்னுடைய அழகிய திருமேனியை நான் காணும்படி நீ வரவில்லை, என்னைக் கூவி அழைத்துக்கொள்ளவும் இல்லை.
*******
பாடல் - 2
கொள்ள மாளா இன்பவெள்ளம் கோதுஇல தந்திடும் என்
வள்ளலேயோ, வையம் கொண்ட வாமனாவோ, என்று என்று
நள் இராவும் நன்பகலும் நான் இருந்து ஓலம் இட்டால்
கள்ள மாயா, உன்னை என் கண் காண வந்து ஈயாயே.
அனுபவிக்க அனுபவிக்கத் தீராத இன்பவெள்ளத்தைக் குறைவில்லாமல் தருகின்ற என் வள்ளலே, உலகை அளந்து கொண்ட வாமனனே என்றெல்லாம் நள்ளிரவிலும் நல்ல பகலிலும் நான் ஓலமிடுகிறேன், கள்ளத்தன்மைகொண்ட மாயனே, உன்னை என் கண் காணும்படி வந்து எனக்கு அருள்புரியமாட்டாயா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.