ஐந்தாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 9, 10

அடிமை கொண்டான்
ஐந்தாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 9, 10
Updated on
1 min read

பாடல் - 9

ஆவார் ஆர் துணை என்று அலைநீர்க் கடலுள் அழுந்தும்
நாவாய்போல் பிறவிக்கடலுள் நின்று நான் துளங்கத்
தேவு ஆர் கோலத்தோடும் திருச்சக்கரம், சங்கினொடும்
ஆ! ஆ! என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே.

அலைகள் மோதுகிற நீரைக்கொண்ட கடலிலே கப்பல் அழுந்தப்போகும் நேரம், அதிலுள்ளவர்களெல்லாம், ‘எங்களுக்கு யார் துணை?’ என்று ஏங்குவார்கள். அதுபோல, பிறவிக்கடலிலே நான் நிற்கிறேன், நடுங்குகிறேன், அந்த நேரத்தில், அழகிய திருத்தோற்றத்துடன் திருச்சக்கரம், சங்கை ஏந்தி எம்பெருமான் வந்தான், ‘அடடா’ என்று என்மீது இரக்கம்கொண்டு அருள்செய்தான், என்னோடு கலந்தான்.

******

பாடல் - 10

ஆனான் ஆளுடையான் என்று அஃதே கொண்டு
                                                                                  உகந்து வந்து
தானே இன் அருள் செய்து என்னை முற்றவும் தான்
                                                                                 ஆனான்,
மீனாய், ஆமையுமாய், நரசிங்கமுமாய், குறளாய்,
கான் ஆர் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம்
                                                                                 கார்வண்ணனே.

மேகவண்ணனான எம்பெருமான் மீனாக, ஆமையாக, நரசிங்கமாக, வாமனனாக, காட்டில் வசிக்கும் பன்றியாக, கல்கியாகத் திகழ்கிறான், அவன் என்னை அடிமை கொண்டான் என்று நான் சொன்னேன், அந்தச் சொல்லை எம்பெருமான் ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தான், அவனே வந்து எனக்கு இனிய அருள் செய்தான், எனக்கு அனைத்தும் தானாக ஆனான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com