ஆறாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

செழிப்பான கற்பகம்போன்றவர்
ஆறாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 5, 6
Updated on
2 min read

பாடல் - 5

நுங்கட்கு யான் உரைக்கேன், வம்மின், யான்
                                                       வளர்த்த கிளிகாள்,
வெம்கண் புள் ஊர்ந்து வந்து வினையேனை
                                                       நெஞ்சம் கவர்ந்த
செங்கண் கருமுகிலை, செய்யவாய்ச் செழும்
                                                       கற்பகத்தை,
எங்குசென்றாகிலும் கண்டு, இதுவோ தக்கவாறு
                                                      என்மினே.

நான் வளர்த்த கிளிகளே, வாருங்கள், நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், வெம்மையான கண்களையுடைய பறவையான கருடன்மேல் ஊர்ந்துவந்தவர், தீவினை செய்தவளான என்னுடைய நெஞ்சத்தைக் கவர்ந்தவர், சிவந்த கண்களையுடைய கருமேக மேனியர், சிவந்த வாயைக்கொண்டு செழிப்பான கற்பகம்போன்றவர், அவரை எங்குசென்றாவது காணுங்கள், அவர் செய்வது சரியா, அவருக்குத் தகுதியானதுதானா என்று கேட்டுவாருங்கள்.

***

பாடல் - 6

என் மின்னுநூல் மார்வன், என் கரும்பெருமான்,
                                                                    என் கண்ணன்,
தன் மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கு
                                                                   அன்றி நல்கான்,
கல்மின்கள் என்று உம்மை யான் கற்பியாவைத்த
                                                                  மாற்றம் சொல்லிச்
செல்மின்கள், தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே.

தீவினை செய்தவளான நான் வளர்த்த சிறிய பூவைகளே, ஒளிமின்னும் பூணூலை மார்பிலே அணிந்த எம்பெருமான், கரிய திருமேனிகொண்ட பெருமான், என் கண்ணன், தன்னுடைய சிறந்த, நீண்ட திருவடிகளிலேயிருக்கும் குளிர்ந்த துளசியை நமக்கன்றி வேறு யாருக்கும் தரமாட்டான், அதைத் தெரிந்துகொள்ளுங்கள், நான் உங்களுக்குச் சொல்லித்தந்திருக்கும் இந்த விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், அதைச் சொன்னபடி அவனிடம் சொல்லுங்கள், (பெருமானின் துளசியை வாங்கிவாருங்கள்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com