

பாடல் - 7
உலகில் திரியும் கரும கதியாய், உலகமாய்,
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய், புற அண்டத்து
அலகுஇல் பொலிந்த திசை பத்து ஆய அருவேயோ,
அலகுஇல் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே.
எம்பெருமானே, நீ இந்த உலகிலே செய்யப்படுகிற கர்மங்கள் எனப்படும் சாதனங்களாக இருக்கிறாய், அவற்றைச் செய்கிற உலகத்தவராகவும் இருக்கிறாய், அவர்களுடைய உயிராகவும் இருக்கிறாய், அண்டத்துக்கு வெளியே பத்துத் திசைகளிலும் கணக்கற்றுத் திகழும் முக்தர்களுக்கும் நீயே ஆன்மாவாகத் திகழ்கிறாய், இப்படிப்பட்ட நீ, அளவற்ற அறியாமையைக்கொண்ட எனக்கும் அருள்செய்யவேண்டும்.
***
பாடல் - 8
அறிவிலேனுக்கு அருளாய், அறிவார் உயிர்ஆனாய்,
வெறிகொள் சோதி மூர்த்தி, அடியேன் நெடுமாலே,
கிறிசெய்து என்னைப் புறத்துஇட்டு இன்னம்
கெடுப்பாயோ,
பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.
அறிவுள்ளவர்களுக்கு உயிராகத் திகழ்பவனே, வாசனை நிறைந்த, ஒளிவடிவமான மூர்த்தியே, என்னுடைய நெடுமாலே, அறிவில்லாத எனக்கு அருள்செய்வாய், உன்னைத்தவிர வேறு ஏதும் அறியாதவன் நான், என்னுடைய உயிர் திகைக்கும்படி நீ வேறு உபாயங்களைச் செய்யலாமா? என்னை உன்னிலிருந்து தள்ளிவைத்து இன்னும் கெடுக்கலாமா? (இவ்வாறு துன்புறுத்தாமல் எனக்கு அருள்செய்ய வேண்டுகிறேன்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.