ஆறாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

ஒளிபொருந்திய
ஆறாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2
Updated on
1 min read

பாடல் - 1

உலகம் உண்ட பெருவாயா, உலப்புஇல்
                                               கீர்த்தி அம்மானே,
நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி, நெடியாய்,
                                               அடியேன் ஆர்உயிரே,
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து
                                              எம்பெருமானே,
குல தொல் அடியேன் உன பாதம் கூடும்ஆறு
                                             கூறாயே.

உலகையெல்லாம் உண்ட பெருவாயனே, அழியாத புகழையுடைய அம்மானே, நிலைத்துநிற்கும் சுடர்களால் சூழப்பட்ட ஒளிபொருந்திய மூர்த்தியே, நெடியவனே, என் ஆருயிரே, உலகுக்கே திலகமாகத் திகழ்கிற திருவேங்கடத்து எம்பெருமானே, காலங்காலமாக உனக்கு அடியவர்களாகப் பணிசெய்யும் குலத்தில் பிறந்தவன் நான், உன்னுடைய திருவடிகளை வந்தடையும் வழியை எனக்குச் சொல்வாய்.

***

பாடல் - 2

கூறாய், நீறாய், நிலன்ஆகிக் கொடுவல்
                                           அசுரர் குலம் எல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா, தெய்வக்கோமானே,
சேறுஆர் சுனைத் தாமரை செந்தீ மலரும்
                                          திருவேங்கடத்தானே,
ஆறா அன்பில் அடியேன் உன் அடிசேர்வண்ணம்
                                          அருளாயே.

கொடிய அசுரர்களின் குலங்களெல்லாம் துண்டாகி, சாம்பலாகித் தரையில் வீழ்ந்தபிறகும் சீற்றம் குறையாமல் எரிகின்ற திருச்சக்ராயுதத்தை வலக்கரத்தில் ஏந்தியவனே, தெய்வக்கோமானே, சேறு நிறைந்த சுனையிலே தாமரையானது சிவந்த நெருப்பைப்போல் மலர்கிற திருவேங்கடத்திலே எழுந்தருளியிருப்பவனே, உன்மீது அளவற்ற அன்புவைத்திருக்கும் நான், உன்னுடைய திருவடிகளை வந்துசேர அருள்செய்வாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com