நான்காம் பத்து மூன்றாம் திருவாய்மொழி பாடல் - 3,4

பாம்பின் மீது ஏறி
நான்காம் பத்து மூன்றாம் திருவாய்மொழி பாடல் - 3,4
Updated on
1 min read

பாடல் - 3

ஏகமூர்த்தி, இருமூர்த்தி, மூன்றுமூர்த்தி, பலமூர்த்தி
ஆகி, ஐந்து பூதமாய், இரண்டு சுடராய், அரு ஆகி,
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே, உன்
ஆகம்முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.

திருப்பாற்கடலிலே ஆதிசேஷனாகிய பாம்பின் மீது ஏறி யோகத்துயில் கொள்கின்ற நாராயணனே, ஒருமூர்த்தியாக, இருமூர்த்தியாக, மும்மூர்த்தியாக, பலமூர்த்தியாகத் திகழ்கிறவனே, ஐந்து பூதங்களாக, சூரியன், சந்திரன் எனும் இரு சுடர்களாக, இவை அனைத்தினுள்ளும் அருவாகத் திகழ்கிறவனே, உன்னுடைய திருமேனியையும், அதை வழிபடுவதற்கு உரிய புனிதப் பொருள்கள் அனைத்தையும் நீ எனக்குள்ளேயே வைத்திருக்கிறாய், அவ்வாறு நீ உளம்கனிந்து எனக்கு அருள்புரிந்ததால், என்னுடைய துயரங்கள் தீர்ந்தன.

******

பாடல் - 4

மாய்த்தல் எண்ணி வாய்முலை தந்த
                                                  மாயப்பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே, வாமனனே,

                                                  மாதவா,
பூத்தண் மாலைகொண்டு உன்னைப் போதால்
                                                 வணங்கேனேலும், நின்
பூத்தண் மாலை நெடுமுடிக்குப் புனையும்
                                                 கண்ணி எனது உயிரே.


பூதனை என்கிற அரக்கி உன்னை அழிக்க எண்ணி மார்பகத்தில் நஞ்சைத் தடவிக்கொண்டு வந்தாள், அந்த மார்பகத்தை உன்னுடைய திருவாயில் தந்தாள், அவளுடைய உயிரை மாய்த்தவனே, மாயனே, வாமனனே, மாதவனே, அந்த நேரங்களிலெல்லாம், குளிர்ந்த மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையைக் கொண்டு நான் உன்னை வணங்கவில்லை, எனினும், குளிர்ந்த மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட உன்னுடைய நீண்ட திருமுடியிலே அணிகிற மாலையாக என்னுடைய உயிரைத் தருகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com