

பாடல் - 1
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும்,
விண்ணைத் தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கை காட்டும்,
கண்ணை உள்நீர் மல்க நின்று கடல்வண்ணன் என்னும், அன்னே, என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய்வளையீரே.
(தாய் சொல்கிறார்)
வளையல்களை அணிந்த பெண்களே, என் மகள் மண்ணைத் துழாவி, 'வாமனனுடைய மண் இது' என்கிறாள், விண்ணைத் தொழுது, 'எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் பரமபதம் இது' என்று கை காட்டுகிறாள், கண்களில் நீர் பெருகும்படி நின்று, 'கடல்போன்ற வண்ணமுடையவன்' என்கிறாள். அடடா, என்னுடைய பெண்ணை இப்படிப் பெருமயக்கத்தில் ஆழ்த்தியவரை நான் என்ன செய்வேன்!
*******
பாடல் - 2
பெய்வளைக் கைகளைக் கூப்பி, பிரான் கிடக்கும் கடல் என்னும்,
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்,
நையும் கண்நீர் மல்க நின்று நாரணன் என்னும், அன்னே, என்
தெய்வ உருவில் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.
(தாய் சொல்கிறார்)
அணியப்படுகின்ற வளையல்களைக்கொண்ட கைகளைக் கூப்பி, 'எம்பெருமான் கிடக்கும் கடல் இது' என்கிறாள், சிவந்த சூரியனைக்காட்டி, 'திருமகள் கணவனுடைய திருவுருவம் இது' என்கிறாள், நைந்த பாவத்துடன் கண்களில் நீர் மல்கும்படி நின்று, 'நாரணன்' என்று வணங்குகிறாள், அடடா, தெய்வத்தன்மை பொருந்திய உருவத்தைக்கொண்ட, சிறிய மான்போன்ற என் மகள் செய்வது ஒன்றும் எனக்குப் புரியவில்லையே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.