மூன்றாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

எந்த உருவத்தில் நினைக்கிறீர்களோ
Updated on
1 min read

தஞ்சம்ஆகிய தந்தை, தாயொடு
தானுமாய், அவை அல்லனாய்,
எஞ்சல்இல் அமரர் குல முதல்,
மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி, நீர் உலகத்து உள்ளீர்கள்
‘அவன், இவன்’ என்று கூழேன்மின்,
நெஞ்சினால் நினைப்பான் எவன்? அவன்
ஆகும் நீள்கடல்வண்ணனே.

நமக்கு அடைக்கலமாகத் திகழும் தந்தை அவனே, தாய் அவனே, இவர்கள் இருவருமாகவும், மற்ற அனைத்துப் பொருள்களாகவும் திகழ்கிறவன் அவனே, இறை அனுபவத்தைக் குறைவில்லாமல் அனுபவிக்கும் தேவர்களின் குலத் தலைவன், மும்மூர்த்திகளுக்கும் முதல்வன், ஆனால், இதையெல்லாம் எண்ணி அஞ்சாதீர்கள், ‘அவன் இப்படிப்பட்டவனா, அப்படிப்பட்டவனா’ என்றெல்லாம் குழம்பாதீர்கள், நீங்கள் நெஞ்சினால் அவனை எந்த உருவத்தில் நினைக்கிறீர்களோ, அந்த உருவத்தில் அவன் வருவான், அருள்செய்வான், நீளக்கடல் வண்ணம்கொண்ட அந்தப் பெருமானின் தன்மை அத்தகையது.

***

பாடல் - 10

கடல்வண்ணன், கண்ணன், விண்ணவர்
கரு மாணிக்கம், எனது ஆர்உயிர்,
பட அரவின் அணைக்கிடந்த
பரம்சுடர், பண்டு நூற்றுவர்
அட வரும் படை மங்க ஐவர்கட்கு
ஆகி, வெம்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனைகழல்
காண்பது என்றுகொல் கண்களே?

கடல்வண்ணன், கண்ணன், தேவர்களின் கருமாணிக்கம், என்னுடைய ஆருயிர், படமெடுக்கும் பாம்பாகிய ஆதிசேஷனைப் படுக்கையாகக்கொண்டு யோகநித்திரை செய்யும் உயர்ந்த சுடர், எம்பெருமான், அன்றைக்குக் கொல்லும் எண்ணத்துடன் வந்த கௌரவர்கள் நூறு பேரின் படைகளை அழித்து, பாண்டவர்கள் ஐவருக்கு அருள்செய்தான், வெம்மையான போரில் அர்ஜுனனுக்காகத் தேரோட்டினான், அத்தகைய பெருமானின் ஒலி எழுப்பும் திருக்கழல்கள் அணிந்த திருவடிகளை என் கண்கள் என்றுதான் காணுமோ!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com