மூன்றாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

திருவடிக்குப் பொருந்திய
Updated on
1 min read

குலம் தாங்கு சாதிகள் நாலிலும்
கீழ் இழிந்து எத்தனை
நலம்தான் இலாத சண்டாள
சண்டாளர்கள் ஆகிலும்,
வலம்தாங்கு சக்கரத்து அண்ணல்
மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார்தம் அடியார்
எம் அடிகளே.

வலக்கரத்தில் சக்ராயுதத்தை ஏந்திய அண்ணல், மணிவண்ணன், எம்பெருமான், அத்தகைய பெருமானின் அடியவர்களாக அவனுடைய திருவடியில் சேர்ந்தவர்கள் பலர், அந்தத் தொண்டர்களுடைய அடியவர்களின் அடியவர்கள் யாரோ, அவர்களை நான் தெய்வங்களாகக் கருதுவேன், குலங்கள் என வகுக்கப்பட்ட சாதிகள் நான்கு. இவர்கள் அந்த நான்கையும்விடக் கீழாக இழிந்துபோயிருந்தாலும் பரவாயில்லை, சிறிதும் நல்ல குணங்களே இல்லாத சண்டாளர்களாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்கள் எம்பெருமானின் அடியவர்களைப் போற்றுவதால், அவர்கள்தான் எங்களுக்குத் தெய்வங்கள்.

•••

பாடல் 10

அடிஆர்ந்த வையம் உண்டு
ஆலிலை அன்ன வசம்செயும்
படியாதும் இல் குழவிப்படி
எந்தைபிரான்தனக்கு
அடியார் அடியார்தம் அடியார்
அடியார் அடியார்தமக்கு
அடியார் அடியார்தம் அடியார்
அடியோங்களே.

எம்பெருமான் உலகை அளந்தபோது, அவனுடைய திருவடிகள் இந்த பூமியின் மீது பொருந்தின, அப்படித் தன்னுடைய திருவடிக்குப் பொருந்திய பூமியைப் பின்னர் அவன் உண்டான், ஓர் ஆலிலையில் பள்ளிகொண்டான், அவனுடைய அந்தக் குழந்தைத் திருவுருவத்துக்கு இணையேதும் இல்லை, அத்தகைய பெருமானின் அடியவர்களுடைய அடியவர்களுடைய அடியவர்களுடைய அடியவர்களுடைய அடியவர்களுடைய அடியவர்களுடைய அடியவர்களுடைய அடியவர்கள் நாங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com