வாசகமே ஏத்த அருள்செயும் வானவர்தம்
நாயகனே, நாள் இளம்திங்களைக் கோள்விடுத்து
வேய்அகம் பால், வெண்ணெய் தொடு உண்ட ஆன் ஆயர்
தாய் அவனே என்று தடவும் என் கைகளே.
வானவர்களின் நாயகன் எம்பெருமான், என்னுடைய சொற்கள் எப்போதும் அவனைப் போற்றிக்கொண்டிருக்கும், அவன் அதைக் கேட்டு அருள்செய்வான், அப்பெருமான் கண்ணனாக அவதரித்தபோது, பால், வெண்ணெயைக் களவாடுவதற்காக மூங்கிலால் ஆன குடிசைக்குள் நுழைந்தான், அங்கே இருட்டு மிகுதியாக இருந்ததால், பானைகள் இருக்கும் இடம் தெரியவில்லை, உடனே, அவன் புன்னகை செய்தான், அவனது பற்களிலிருந்து வெளிப்பட்ட வெளிச்சம் பிறைச்சந்திரனைப்போல் இருந்தது, பாலையும் வெண்ணெயையும் களவாடி உண்டான், அப்படிப்பட்ட கண்ணன், எம்பெருமான், பசுமேய்க்கும் ஆயர்களுக்குத் தாய் போன்றவன், அவனைச் சொற்களால் கொண்டாடினால் போதுமா? தொட்டுப்பார்க்க வேண்டாமா? அதற்காக என் கைகள் ஏக்கத்துடன் தடவித் தடவிப் பார்க்கின்றன.
••••
பாடல் - 4
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை
வைகலும் மாத்திரைப்போதும் ஓர் வீடு இன்றிப்
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே, உன்னை
மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.
படமெடுக்கும் பாம்பின்மீது ஏறித் திருத்துயில் கொள்கிற பெருமானே, என்னுடைய கைகள் உன்னை நன்றாகத் தொழுகின்றன, என் கண்களோ, காலையும் மாலையும் எந்நேரமும் ஒரு மாத்திரைப்பொழுதும் விடாமல் உன்னை உண்மையாகக் காண விரும்புகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.