மூன்றாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

ஊழி ஊழிதோறும்
Updated on
1 min read

ஒழிவுஒன்றுஇலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப்போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப்போய்க்
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்,
இழியக்கருதி ஓர் மானிடம் பாடல் என் ஆவதே?

இடைவெளியில்லாமல் ஊழி ஊழிதோறும் நிலைத்து நிற்கக்கூடிய, தொடர்ந்து நீளக்கூடிய நல்ல வழியைத் தருகிறவன் எம்பெருமான், நம் வானவர் தலைவன், புலவர்களே, அத்தகைய பெருமானை விடுத்து நீங்கள் இன்னொருவரைப் பாடுவதற்கு என்ன அவசியம்? உங்களுடைய மிகநல்ல, சிறந்த பாடல்களைக்கொண்டு மானிடர்களைப் பாடலாமா? அதனால் இழிவடைய நினைக்கலாமா? யோசியுங்கள். அவனைமட்டுமே பாடுங்கள்.

***

பாடல் - 4

என் ஆவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்?
மின்ஆர் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.

புலவர்களே, நிலைத்து நிற்காத மனிதர்களைப் பாடினால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?  நிறைய செல்வம் கிடைக்குமா? அது எத்தனை நாளைக்குப் போதும்? அதனால் என்ன பயன்? ஒளிநிறைந்த மணிமுடியைக்கொண்டவன், விண்ணோர்களின் தந்தை, அப்பெருமானைப் பாடுங்கள், அவன் உங்களைத் தனக்கு உரியவனாக ஏற்றுக்கொள்வான், உங்கள் பிறவிச்சுழலை அறுத்துப் பிறவாத
நிலை தருவான், அதைவிடப் பெரிய செல்வம் ஏது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com